வெள்ளி, 19 மார்ச், 2021

நேப்கின் பேடுகளைகூட மாற்ற விடமாட்டார்கள்” – வாழ்வாதாரத்துக்காக நகரம் பெயர்ந்த இளம் தொழிலாளர்களின் கதை

தமிழ்நாடு தேர்தல் 2021
அபர்ணா ராமமூர்த்தி - பிபிசி தமிழ்:   இடம்: தென்கரும்பலூர் கிராமம், தண்டராம்பட்டு தாலுகா, திருவண்ணாமலை மாவட்டம்
"என் அப்பாக்கு காது கேக்காது. அம்மா வீட்ல இருக்காங்க. அண்ணனும் சரியில்ல. அதனாலதான் நான் 17 வயசுல வேலைக்கு போனேன்.
வெளில சொல்ல முடியாத அளவுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டேன்"
குடும்ப வறுமையில் சிக்கித் தவிக்கும் சௌந்தர்யாவின் வார்த்தைகள்தான் இவை.
இவர் தனது குடும்பத்திற்காக சொந்த ஊரைவிட்டு சென்று வெளியூரில் வேலை பார்த்துள்ளார்.
திருவண்ணாமலை நகரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் தென்கரும்பலூர் கிராமத்தில் இருக்கும் சௌந்தர்யாவின் வீட்டில் ஒரே ஒரு அறைதான்.
சௌந்தர்யா வீட்டைபோல அப்பகுதியில் இருக்கும் பெரும்பாலானோரின் வீடுகளில் சமையலறை, படுக்கை அறை என அனைத்தும் ஒன்றாகவே இருக்கிறது.  திருவண்ணாமலை மாவட்டம் என்றால் நமக்கு உடனடியாக மனதிற்கு வருவது கார்த்திகை தீபம், அண்ணாமலையார் கோயில், கிரிவலப் பாதை ஆகியவைதான். ஆனால், அதையும் தாண்டி இங்கு தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் இருக்கிறது என்பது அப்போதுதான் புரிந்தது.

சுமார் 24 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த மாவட்டம், அதிகம் சார்ந்திருப்பது என்னவோ விவசாயத்தைதான். ஆனால், ஆண்டு முழுவதும் தங்களுக்கு இது வருமானம் தருவதில்லை என்பதே இந்த மாவட்டத்தின் பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது.

தலித் மற்றும் பட்டியலினத்தவர்கள் அதிகம் இருக்கும் இந்த மாவட்டம், 1970-80களில் வடக்கு ஆற்காடில் இருந்து பிரிக்கப்பட்டது. ஆனால், அப்போது முதல் பெரிய அளவிலான முன்னேற்றம் நடந்திருக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான்.

தமிழ்நாடு தேர்தல் 2021

மாவட்டம் பிரிக்கப்பட்டதை தொடர்ந்து, பெருமளவிலான தொழிற்சாலைகள் வேலூர் மாவட்டத்துக்குள் வர, திருவண்ணாமலை மக்கள் பல தசாப்தங்களாக வேலைக்காக இடம் பெயர்ந்து செல்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். உள்ளூரில் அதிக வேலைவாய்ப்பு இல்லாததே இதற்கு காரணம் என்பது சமூக செயற்பாட்டாளர்களின் கருத்து.

அப்படி வேலைக்காக இந்த மாவட்டத்தில் இருந்து பெரும்பாலானோர் செல்வது திருப்பூர் ஆடை தொழிற்சாலைகளுக்குதான். அப்படி சென்றவர்களில் ஒருவர்தான் சௌந்தர்யா.

சுமங்கலி திட்டத்தின் கீழ் திருப்பூருக்கு வேலைக்கு சென்ற அவர், தான் சந்தித்த துன்பங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்தார்.

சுமங்கலி திட்டம் என்றால் என்ன?

தமிழகத்தில் 1989ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக கூறப்படும் சுமங்கலி திட்டத்தின் மூலம், இளம் பெண்கள் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பஞ்சு அல்லது ஆடை ஆலைகளில் வேலைக்காக அழைத்து செல்லப்படுகிறார்கள்.

பெரும்பாலும் 18 வயதிற்கு கீழ் உள்ள பெண்களிடம் அவர்களின் திருமணத்தின்போது நல்ல பணம் தரப்படும் என்று கூறி அவர்களை அழைத்து செல்கிறார்கள்.

தமிழகத்தின் பெரும்பாலும் வேலைவாய்ப்புகள் குறைந்த பகுதிகளில் இருந்து தரகர்கள் மூலம் இவர்கள் கொண்டு செல்லப்படுகின்றனர்.

தமிழ்நாடு தேர்தல் 2021

ஈரோடு, திருப்பூர், கோவை, உடுமலைப் பேட்டை போன்ற பகுதிகளில், இந்த திட்டத்தின் செயல்பாடு அதிகமாக உள்ளதாக சில ஆய்வுக்கட்டுரைகள் கூறுகின்றன.

ஆனால், இந்த பெண்களிடம் அதிக நேரம் வேலை வாங்கி, குறைந்த வசதிகளை கொண்ட விடுதிகளில் தங்க வைத்து, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருந்து வருகிறது.

இந்த குற்றச்சாட்டு உண்மைதான் என்பதை, சௌந்தர்யாவின் வார்த்தைகள் நமக்கு உணர்த்தின.

'சொல்ல முடியாத கஷ்டத்தை அனுபவிச்சேன்'

"குடும்பத்துல ரொம்ப கஷ்டம். நானேதான் வேலைக்கு போலாம்னு முடிவு செஞ்சேன். என் பக்கத்து தெருல இருக்கற ஒருத்தவங்கதான் எனக்கு சொல்லிவிட்டாங்க. ஒரு மாசம்தான் இருந்தேன். அதுக்கு அப்பறம் முடியல.

முதல்ல 4 ஷிஃப்டுனு சொல்லி கூட்டிட்டு போனாங்க. ஆனா 8 ஷிஃப்டு பார்க்க வேண்டியதாக இருந்தது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை. நடுவில் ஓய்வு எடுக்கக்கூட விடமாட்டார்கள்.

எனக்கு பீரியட்ஸ். நா பேட் மாத்தனும்னு சொல்வேன். அதுக்கு கூட விடமாட்டாங்க. எனக்கு ரொம்ப உடம்பு சரியில்ல சார், எனக்கு லீவு வேணும்னு சொன்னா, நீ வேலை பாத்துட்டு போய் ரெஸ்ட் எடுத்துக்கோ அப்படினு சொல்வாங்க. இன்னும் பல சொல்ல முடியாத கஷ்டங்கள அனுபவிச்சேன்.

வீட்டுக்கு போன் பேசனும்னாலும் பேச விடமாட்டாங்க. நான் அங்க இருந்த ஒரு மாசத்துல 2 முறைதான் வீட்டுக்கு பேசினேன். அந்த விடுதில இருந்து ஒரு நிமிஷம்கூட எங்கள வெளில விடமாட்டாங்க. அப்படியே அடைச்சு வெச்ச மாதிரி இருக்கும்.

ஒரே ஒரு சின்ன அறைதான். அதுல நாங்க 15 பேர் இருந்தோம். எதாவது நம்ம எதிர்த்து பேசினா அடிக்கக்கூட அடிச்சுருவாங்க" என்று தன் கடினமான காலங்களை பகிர்ந்து கொண்ட சௌந்தர்யாவின் முகத்தில் நாம் அதிலிருந்து தப்பித்து வந்துவிட்டோம் என்ற சிறிய மகிழ்ச்சி தென்பட்டது.

சௌந்தர்யா மீட்கப்பட்டது எப்படி?

தமிழ்நாடு தேர்தல் 2021

தான் அங்கிருந்து தப்பித்து வந்த கதையையும் அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

"போலீஸ் வராங்கனு தெரிஞ்ச உடனே பல பேர ஒளிச்சு வெச்சுடாங்க. நாங்க ஷிஃப்டு பாத்துட்டு இருந்தோம். எங்க கிட்ட வந்து போலீஸ் வராங்க, நீங்க யாரும் போகாதீங்க, நாங்க சம்பளம் அதிகமா தரோம்னு சொன்னாங்க. ஆனா நாங்க கேக்கல. போலீஸ் வந்து 18 வயசுக்கு கீழ யாருலா இங்க விருப்பம் இல்லாம இருக்கீங்க. கை தூக்குங்கனு சொன்னாங்க. நானும் இன்னும் சில பேரும் கை தூக்கினோம். கலெக்டர் ஆஃபீஸ் மூலமா எங்கள கூட்டிட்டு வந்து ஒரு காப்பகத்துல வெச்சுருந்தாங்க.

அப்பறம் அங்க இருந்து என் அம்மா அப்பா என்ன வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. அவங்கள பாத்ததுக்கு அப்பறம்தான் எனக்கு நிம்மதி சந்தோஷமே வந்துது. அம்மாவ பாக்கும்போது எனக்கு என் கண் ரொம்ப பெருசா வீங்கி இருந்தது. கண்ணே தெரில. உத்து வேலை பாத்து பாத்து பயங்கர வலி" என்று தான் அங்கிருந்து மீட்கப்பட்ட கதையை கூறினார் சௌந்தர்யா.

குடும்ப வறுமை காரணமாகவே தன் மகள் இப்படியொரு துன்பத்தை சந்திக்க வேண்டி இருந்ததாக கூறுகிறார் சௌந்தர்யாவின் தாய்.

"இன்னும் ஒரு வாரம் கழிச்சு வந்துருந்திங்கனா, நீங்க சௌந்தர்யாவ பாத்திருக்க முடியாது. வீட்டு வேலைக்காக பெங்களூருக்கு அனுப்பலாம்னு இருந்தேன்."

தற்போது சௌந்தர்யா தனது 12ஆம் வகுப்பு படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார். மேலும் படிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருக்கிறது. ஆனால், அதற்கான சூழல் வீட்டில் இல்லை என்பதை அவர் நன்கு உணர்ந்திருக்கிறார்.

ஏன் இவர்களுக்கு இந்த நிலை என்று அப்பகுதி மக்களுக்கு உதவி புரியும் அரசு சாரா அமைப்பான 'சினம்' அமைப்பை சேர்ந்த பெருமாளிடம் கேட்டோம்.

அவர் இது போன்று சுமங்கலி திட்டத்தின் கீழ் அழைத்து செல்லப்பட்ட பல பெண்களை மீட்டுள்ளார்.

வறுமை மற்றும் வேலையின்மை

தமிழ்நாடு தேர்தல் 2021

"வறுமைதான் இதற்கு முக்கிய காரணம். இப்படி செல்லும் பெரும்பாலானவர்கள், தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை. வேலை வாய்ப்பு இல்லை. குடும்ப சூழல் காரணமாகவே இவர்கள் இவ்வாறான வேலைகளை தேர்ந்தெடுத்து செல்கிறார்கள்" என்று கூறுகிறார் பெருமாள்.

குறிப்பாக இளம் பெண்களை படிக்க வைக்க, பெற்றோரிடம் காசு இல்லை. பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர், அவர்களை விட்டு வெளியூர்களுக்கு வேலை தேடி சென்றுவிடுவார்கள். இங்கு தொழிற்சாலைகள் அதிகம் இல்லை என்பதால், வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படுவதில்லை. விவசாயமும் இவர்களுக்கு எப்போது கை கொடுப்பதில்லை. அதனால் பிழைப்புக்கு இவ்வாறு போக வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

அப்படி மீட்கப்பட்ட மற்றொரு பெண்ணின் வீட்டிற்கு பெருமாள் நம்மை கூட்டிச்சென்றார்.

கீதாவும் சுமங்கலி திட்டத்தின் கீழ் வேலை செய்ய அழைத்து செல்லப்பட்ட பெண்களில் ஒருவர். 18 வயதாகும் கீதாவுடன் சேர்ந்து மொத்தம் அவர்கள் வீட்டில் 3 பெண்கள்.

கீதாவின் பாட்டி முனியம்மா கூறுகையில், "என் பேத்தி அங்க ரொம்ப கஷ்டப்பட்டதா சொன்னா. நிறைய நேரம் அதிக வேலை. ஆனா பலரையும் அரசு மீட்டப்ப அவ மட்டும் வரல. அங்கேயே மாட்டிக்கிட்டா. அப்பறம் கலெக்டர்ட மனு குடுத்து, அவள மீட்டு வந்தோம்" என்றார்.

"அவங்க அப்பா சரியில்ல. குடி. அவங்க அம்மா வீட்டு வேலை பாக்க மெட்ராஸ் பொயிட்டாங்க. நான்தான் அவங்கள ரொம்ப வருஷமா வளர்க்கறேன்" என்று கூறும் முனியம்மா பேச்சிலேயே சோகம் அப்பியிருந்தது

ஏன் இந்த நிலை?

தமிழ்நாடு தேர்தல் 2021

"திருவண்ணாமலை மாவட்டம் எப்போதும் அரசாங்கத்தின் முன்னுரிமை பட்டியலில் இருப்பதில்லை," என்கிறார் People's Craft Training Centre என்ற லாப நோக்கற்ற அமைப்பை நடத்தி வரும் சேவியர் மரியதாஸ்.

"இடம் பெயர்தல், வேலை தேடி வெளியூர் செல்வது என்பது இங்கு ஒரு சாதாரண விஷயமாகிவிட்டது. இதனை ஒரு பிரச்சனையாகவே தற்போது யாரும் பார்ப்பதில்லை. காரணம் இங்கு தொழிற்சாலைகளோ வேலைவாய்ப்புகளோ இல்லை. பெரும்பாலான மக்கள் குறிப்பாக தண்டராம்பட்டு, ஜவ்வாது பகுதிகளில் படிப்பறிவு, எழுத்தறிவு குறைவாக இருப்பதால், தங்களுக்கு என்னென்ன உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பதே அவர்களுக்கு தெரியாமல் இருக்கிறது. இந்த விவகாரம் பெரிதாக பேசப்படுவதில்லை என்பதால்,இதனை ஒரு தேர்தல் விஷயமாக எந்த அரசியல் கட்சிகளுக்கு எடுத்துக் கொள்வதில்லை. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இவர்களின் விடியலுக்கு வழி கிடைக்குமா என்றால் அது கேள்விக்குறிதான்" என்று கூறுகிறார் சேவியர் மரியதாஸ்.

கருத்துகள் இல்லை: