மக்களுக்கு இலவசங்கள் கொடுப்பது தவறானது என்பது 19ம் நூற்றாண்டு விக்டோரியன் சிந்தனாவாதம். 18ம் நூற்றாண்டில் தேங்கிப் போய் விட்ட இந்துத்துவர்கள் 19ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் சிந்தனையை இப்போதுதான் எடுத்துக் கொண்டு யோசிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் என்ற அளவில் அவர்களைப் பாராட்டலாம்.
ஒரு நூறு ஆண்டுகள் முன்னேறி இருக்கிறார்கள்
உண்மை என்னவெனில், இலவசங்கள்தான் தமிழகத்தை கட்டமைத்தன.
சொல்லப் போனால் இலவசங்கள் என்ற சொல்லே தவறான பதப்பிரயோகம்.
'நலப்பணி அரசு' என்பதுதான் சரியான பதம். அதாவது Welfare State.
சத்துணவு, இலவச யூனிஃபார்ம், பஸ் பாஸ், இலவச லேப்டாப், பொது விநியோக அரிசி, கர்ப்பிணி உதவித்தொகை, அம்மா உணவகம் என்று தமிழகம் முன்னெடுத்த திட்டங்கள் எல்லாமே இன்று தேசிய அளவில் காப்பி அடிக்கப்படுகின்றன.
தமிழகம் மனிதவளக்குறியீடுகளில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருப்பதற்கு இந்த நலப்பணி திட்டங்கள் மிக முக்கிய காரணம்.
சத்துணவு பள்ளிச் சேர்க்கையை அதிகரித்தது. கர்ப்பிணி உதவித்தொகை வீட்டில் பிரசவம் பார்ப்பதை குறைத்தது.
விளைவாக Infant Mortality Rate மற்றும் Maternal Mortality Rate போன்றவை குறைந்தன.
பொது விநியோக உணவுத் திட்டம் பட்டினி சாவுகளை குறைத்து stunting and wasting எனப்படும் சத்துக் குறைபாட்டை போக்கியது.
இவை எல்லாம் குறித்த விரிவான புள்ளியியல் ரீதியிலான அலசல்கள் An Uncertain Glory என்ற புத்தகத்தில் கிடைக்கிறது.
நோபல் பரிசு பெற்ற அமரத்ய சென் மற்றும் ழான் த்ரே இருவரும் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தில் இந்த நலப்பணி திட்டங்கள் இந்தியா முழுக்க எங்கெல்லாம் மேற்கொள்ளப்பட்டதோ அங்கெல்லாம் விளைந்த சமூகப் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து பேசுகிறார்கள்.
சும்மா வெறுமனே பேசாமல் அட்டவணைகள், புள்ளி விபரங்கள் என்று விரிவாக தரவுகளுடன் பேசுகிறார்கள்.
பிபிசியில் ஊடகவியலாளராகப் பணி புரிந்து இந்தியாவில் செட்டில் ஆகி விட்ட எட்வர்ட் ல்யூஸ் எனும் ஆய்வாளர் 'In Spite of the Gods' எனும் புத்தகத்தில் வடக்கு மற்றும் தென்னக மாநிலங்களில் உள்ள சமூகப் பொருளாதார வளர்ச்சி குறித்தும், குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்துக்கு தென் மாநிலங்கள் வழங்கும் முக்கியத்துவம் குறித்தும் விரிவாகப் பேசுகிறார். (இந்தப் புத்தகம் குறித்தும் நான் முன்னர் சில பதிவுகள் எழுதி இருக்கிறேன்.)
இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றிய என் கட்டுரை ஒன்றில் 'இந்தப் போராட்டம் மூலம் உலகத்துக்கே முன் உதாரணமாக தமிழகப் போராட்டம் அமைந்தது!' என்று சொல்லி அதனை விளக்கி இருப்பேன். அது போல நலப்பணி திட்டங்களில் தெற்காசியாவுக்கே முன்னுதாரணமாக தமிழகம் இருந்து வந்திருக்கிறது. நான் தற்போது படித்துக் கொண்டிருக்கும் Rutger Bergman எழுதிய Utopia for Realists புத்தகத்தில் கூட தமிழகம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. இன்று உலகில் உள்ள வளர்ச்சிப் பொருளாதார நிபுணர்கள் அனைவருக்கும் தமிழகம் ஒரு case study.
மத்தியப் பிரதேசம், குஜராத், சட்டீஸ்கர், பீகார் போன்ற மாநிலங்களில் 20 ஆண்டுகளுக்கு மேல் பாஜக ஆண்டு கொண்டு இருந்தும் மனிதவளக்குறியீடுகளில் முன்னேற முடியவில்லை. அவ்வளவு ஏன், வளர்ச்சிக் குறியீடுகளில் தேசிய சராசரி அளவைக் கூட தாண்ட இயலவில்லை. இன்றைய மத்திய அரசே வெளியிட்ட Health Index, Education Index, Sustainable Development Goal என்று அறிக்கைகளில் எல்லாம் கூட பின்தங்கி இருக்கிறார்கள். இதையெல்லாம் நான் அறிக்கை லின்க்களுடன் சொல்லிச் சொல்லி எனக்கே சலித்துப் போய் விட்டது. 'எனக்கு கேள்வி மட்டும்தான் கேக்கத் தெரியும்!' என்று தருமி நாகேஷ் சொல்வது போல 'எனக்கு அடுத்தவனை திட்ட மட்டும்தான் தெரியும்!' என்று இந்துத்துவர்கள் கடந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள்.
நேர்மையாக இருக்க முயலும் பாஜக அபிமானிகளை நோக்கி நான் நேரடி சவால் விடுகிறேன். திராவிட இயக்கங்களின் ஆட்சியை விட பாஜக ஆண்ட இந்த மூன்று மாநிலங்கள் (துணையாக ஆண்ட பீகாரை சேர்த்து நான்கு) எந்த வகையில் சிறப்பாக செயல்பட்டு இருந்திருக்கின்றன என்று தரவுகளுடன் காட்டுங்கள். அந்தத் தரவுகளை உங்கள் ஐடி-செல் மீம்களை வைத்து செய்யாமல் அதிகார பூர்வ மத்திய அரசு அறிக்கைகள், ஐநா, உலக வங்கி போன்றவற்றின் தரவுகள் மூலம் நிலை நிறுத்துங்கள்.
அதற்குப் பின்னர் 'இலவசத்தால் தமிழகம் நாசமாப் போச்சு!' என்று பிலாக்கணம் பாடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக