ஞாயிறு, 14 மார்ச், 2021

2021 திமுக தேர்தல் அறிக்கை! பொருளாதார வல்லுனர்களின் ஆலோசனையில் உருவானது!

திமுக
ஆ. விஜயானந்த் - பிபிசி தமிழுக்காக : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய ஸ்டாலின், `தேர்தல் அறிக்கையில் 500 வாக்குறுதிகள் உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றாக அறிவிக்கிறோம்' என்றார். ` தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்கள், வாக்காளர்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தும்' எனவும் தி.மு.க நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும், சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும், மகளிர் பேறுகால உதவித்தொகை ரூ.24,000 ஆக உயர்வு, மகளிர் பேறுகால விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்படும், உள்ளூர் நகர பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், கொரோனா கால நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவை மகளிர் வாக்குகளை மையமாக வைத்து வெளியிடப்பட்டுள்ளன. அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, தி.மு.க தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.4 குறைக்கப்படும், இந்து ஆலயங்களை சீரமைக்க 1,000 கோடி ஒதுக்கீடு என வாக்காளர்களைக் கவரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத் தேர்தல்களைப் போல கவர்ச்சி வாக்குறுதிகள் அதிகமில்லாமல், வளர்ச்சித் திட்டங்களை மையமாக வைத்தே இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

`தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் நோக்கம் என்னவாக இருந்தது?' என தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

`` தமிழ்நாட்டில் உள்ள பிரச்னைகள், மக்கள்படும் துயரங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும் என நினைத்தோம். அ.தி.மு.க அரசின் ஊழல், தேவையற்ற செலவுகள், வருவாய் இழப்பு ஆகியவற்றை சரிசெய்தால் திட்டங்களை எல்லாம் சிறப்பாகச் செயல்படுத்த முடியும் என்ற அடிப்படையில் தேர்தல் அறிக்கையை தயாரித்தோம்".

``குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதெல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதா?"

``திருச்சி மாநாட்டில் அதை ஒரு பத்தாண்டுகால திட்டமாக எங்கள் கட்சியின் தலைவர் அறிவித்தார். தேர்தல் அறிக்கையில் பல முன்னோடித் திட்டங்களைக் கூறியுள்ளோம். ஆட்சி என்பது ஐந்தாண்டுக் காலம்தானே.. அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மக்களிடம் மீண்டும் செல்ல வேண்டும். எனவே, பத்தாண்டு திட்டத்தைப் படிப்படியாகச் செயல்படுத்துவோம். பத்தாண்டுக்கான அடிப்படையை முதல் ஐந்தாண்டுக்கு அமைத்தால்தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கும் அந்தப் பணிகள் தொடரும்."

``பெட்ரோலுக்கு 5 ரூபாயும் டீசலுக்கு 4 ரூபாயையும் குறைப்போம் எனக் கூறியிருக்கிறீர்களே?"

``அது வாட் வரியைப் பற்றிக் குறிப்பிடுகிறது. பெட்ரோலிய பொருள்களுக்கு மாநில அரசும் மத்திய அரசும் வரிபோடும். இது ஜி.எஸ்.டியில் வராது. 5 ரூபாயை நேரடியாகக் குறைக்க முடியாது. பெட்ரோலுக்கு மாநில அரசு போடக் கூடிய வரியில் 2 அல்லது 3 சதவிகிதத்தைக் குறைத்தால் போதும். "

``தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணியில் நீங்கள் எதிர்கொண்ட சவால்களை விவரிக்க முடியுமா?"

``மக்களிடம் இருந்து நிறைய கோரிக்கைகள் வந்தன. அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது. இடஒதுக்கீடு தொடர்பாக ஏராளமான மனுக்கள் வந்தன. இந்த விவகாரத்தில் உடனடியாக முடிவெடுத்து அறிவிக்க முடியாது. ஏனென்றால் இடஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. இதில் நீதியரசர்கள் கொண்ட குழுவை அமைத்துத்தான் கொடுக்க முடியும். எங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதே இதுபோன்ற கோரிக்கைகள் மூலமாகத்தான். சிறுபான்மையினர், பல்வேறு சமூகங்களின் பிரதிநிதிகள் எனப் பல்வேறு தரப்பினர் கோரிக்கை மனுவை அளித்தனர்."

``மிக்ஸி, கிரைண்டர் போன்ற கவர்ச்சிகர வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படாமல், வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதா?"

``ஆமாம். கிராமப்புற பொருளாதாரத்தைப் பெருக்குவதும் அங்கு உற்பத்தியை அதிகரிப்பதும் எங்கள் தலைவரின் நோக்கமாக இருந்தது. குறிப்பாக, மாணவர்கள், பெண்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், கிராமப்புற வளர்ச்சி, விவசாய வளர்ச்சி என ஐந்து விஷயங்களை மையப்படுத்தியே அறிக்கையைத் தயாரித்தோம். அதற்கான திட்டங்களை வழங்கியுள்ளோம். மாநிலத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சியும் அதிகரித்தால்தான் கடன் தொல்லையில் இருந்து அரசால் விடுபட முடியும். ஒட்டுமொத்த வளர்ச்சியில் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவது என்பது முக்கியமானது.

நீர் ஆதாரத்தைப் பெருக்குவது, விவசாயப் பாதுகாப்பை உறுதி செய்வது, தொழில் வளர்ச்சி ஆகியவை முக்கியமானவை. நாங்கள் தொழிற்சாலை காரிடார்களை கொண்டு வருவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம். இந்த அரசு அதில் அக்கறை காட்டவில்லை. நாங்கள் கொண்டு வந்த தொழிற்சாலைகள் மட்டுமே இப்போது உள்ளன."

``இலவசத்தை நேரடியாகக் கொடுக்காமல், மானியமாகக் கொடுப்பது பலன் கொடுக்குமா.. உதாரணமாக, சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே?"

`` இலவச தொலைக்காட்சிப் பெட்டி போன்றவை அந்த நேரத்தில் தேவையாக இருந்தன. அப்போது மக்கள் தங்களின் பக்கத்து வீடுகளுக்குச் சென்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து வந்தனர். இப்போது அனைவர் வீடுகளிலும் தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளன. மக்களுக்கு பலனளிக்கக் கூடியவையாக இருந்தால் உடனே செயல்படுத்தலாம். அதையும் தாண்டி மானியமாகக் கொடுத்தால் மக்கள் பயன்பெறுவர். மக்கள் வளர்ச்சித் திட்டங்களைப் பார்க்கத் தொடங்கினாலே போதும். மாநிலம் முழுவதும் உள்ள மக்களுக்கான திட்டங்களைச் சொல்கிறோம். இலவசம் என்பது இருக்கிறவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான சமன்பாட்டை சரி செய்வதுதான். இந்தமுறை இல்லாத மக்களை ஏற்றிவிடக் கூடிய திட்டங்களாக அறிவித்துள்ளோம்."

``தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணியில் தி.மு.க தலைவர் ஏதேனும் மாறுதல்களைத் தெரிவித்தாரா?"

`` எங்கள் அறிக்கையில் பெரிதாக அவர் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. சில வாக்குறுதிகளில் மட்டுமே விளக்கங்கள் கேட்டார். ஒவ்வொரு வாக்குறுதியைப் பற்றியும் விரிவாக ஆலோசனை நடத்தினோம். கிட்டத்தட்ட 10 வருஷமாக தமிழ்நாட்டில் வளர்ச்சி என்பதே இல்லை. கல்வியில் ஏராளமான தடைகள், ஊழல் அதிகரிப்பால் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைக்கூட அரசு நிறைவேற்றவில்லை. இதையெல்லாம் சரிசெய்வதற்கான திட்டமாக இந்தத் தேர்தல் அறிக்கை இருக்கும்" என்கிறார்.

` தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள். குறிப்பாக, நீட் தேர்வு ரத்துக்கு சட்டம் கொண்டு வரப்படுவது போன்ற வாக்குறுதிகள் சாத்தியமா?' என மூத்த பத்திரிகையாளர் என்.அசோகனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` கடந்த சில ஆண்டுகளாக தி.மு.கவால் சொல்லப்பட்டு வந்த பல விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. நேரடி இலவசங்களான டி.வி, மிக்ஸி போல் எதுவும் இல்லை என்பது ஓர் ஆறுதல். பெண்களைக் கவரும் விதத்தில் பேறுகால நிதி உதவி உயர்வு, சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், பெண்களுக்கு இலவச நகர்ப் பேருந்துப் பயணம், வேலைவாய்ப்பில் 40 சதவிகிதம் என்றெல்லாம் வாக்குறுதிகள் உள்ளன. ஏற்கெனவே குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுவதாகவும் தி.மு.க அறிவித்துள்ளது" என்கிறார்.

மேலும், `` மாநில சுயாட்சி பற்றிக் கூறியுள்ளதும் 75 சதவிகித வேலைவாய்ப்பு உள்ளூர் மக்களுக்கே என்பதும் வரவேற்கத்தகுந்தது. தமிழ் வழக்காடு மொழி என்பது பலர் கொடுத்து நிறைவேறாமல் இருக்கும் வாக்குறுதியாகும். நீட் தேர்வு ரத்து செய்ய சட்டம், கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவது என வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இவை எளிதில் நிறைவேற்றக் கூடியவை அல்ல. வலுவான அரசியல் உறுதியும் சாதகமான மத்திய அரசின் சூழலும் வேண்டும். மற்றபடி, மாணவர்களுக்கு டேப்லட், பள்ளியில் காலையில் பால் என்பவை வரவேற்கத்தக்கவை" என்கிறார்.

கருத்துகள் இல்லை: