வெள்ளி, 19 மார்ச், 2021

ஓ.பன்னீர்செல்வம் : காட்டுப்பள்ளி அதானி துறைமுகத் திட்டத்தை அதிமுக ஆதரிக்காது

அதானி துறைமுகத் திட்டத்தை அதிமுக ஆதரிக்காது: ஓபிஎஸ்

 minnambalam :காட்டுப்பள்ளி அதானி துறைமுகத் திட்டத்தை அதிமுக ஆதரிக்காது என்று துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.          சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருவொற்றியூர் தேரடி பகுதி, பொன்னேரி, அம்பத்தூர் பேருந்து நிலையம், போரூர் சந்திப்பு உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.               அப்போது பேசிய துணை முதல்வர், “தாலிக்குத் தங்கம் 4 கிராமிலிருந்து 8 கிராமாக உயர்த்தப்பட்டுள்ளது. பேறு கால நிதியுதவியும் உயர்த்தப்பட்டுள்ளது, இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்பட்டுள்ளது” என அதிமுகவின் திட்டங்கள் குறித்துப் பேசினார்.

“திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, நில அபகரிப்பு போன்ற பிரச்சினைகள் இருந்தன. ஆனால் தற்போது தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது. இதை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்ட அவர், “ திமுக ஆட்சிக் காலத்தில் மின்சார தட்டுப்பாடு உள்ள மாநிலமாகத்தான் தமிழகம் இருந்தது. அதுவே 2011இல் அதிமுக ஆட்சி வந்தவுடன் மின்மிகை மாநிலமானது. 16 ஆண்டுக்காலம் திமுகவும் - காங்கிரஸும் ஆட்சியில் இருந்தன. ஆனால் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. தற்போது, பாஜக அரசு தமிழகத்துக்கு நிதி ஒதுக்குகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை, 11 மருத்துவக் கல்லூரிகள் என திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவிலேயே கொரோனாவைத் தடுத்த மாநிலம் என்று தமிழகத்தைப் பிரதமர் பாராட்டினார். தற்போது மீண்டும் வைரஸ் தொற்று பரவுவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. எனவே அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மாஸ்க் அணிந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.

“காவிரி போன்ற ஜீவாதாரப் பிரச்சினைகளை திமுக தீர்த்து வைக்கவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி ஜீவாதார உரிமைகளைப் பெற்றுத் தந்தார். அதிமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். இல்லத்தரசிகளுக்கு ரூ.1500, ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள், வாஷிங் மெஷின் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும்” என்றார்.

பொன்னேரிக்கு சென்று பிரச்சாரம் செய்த அவர், மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் அதிமுக அரசு செய்துகொண்டிருக்கிறது. எனவே, மக்களின் கோரிக்கையை ஏற்று காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு எங்கள் அரசு ஆதரவு அளிக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறி அதிமுக, கூட்டணிக் கட்சியான பாமக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

-பிரியா

கருத்துகள் இல்லை: