திங்கள், 15 மார்ச், 2021

மதுரையில் வடநாட்டவர் ஆதிக்கம் எங்கெங்கும் ஹிந்தி குரல்கள்

 

Adv Suguna Devi  :    காலம்தான் எவ்வளவு விரைவாக மாறுகிறது...!
சங்கம் வைத்துத் தமிழ்வளர்த்த மதுரை எனும் கூடல்மாநகரில் எங்கெங்கு நோக்கினும் வடநாட்டார்....
சாலையெங்கும் இந்தி மொழியில் குரல்கள் ஒலிக்க, கூட்டம் கூட்டமாக முக்காடிட்ட பெண்டிர்...
பேருந்துநிலையம், இரயில் நிலையம், மகிழுந்து நிறுத்துநிலைகள், உணவகங்கள் என எங்கெங்கும் குடும்பம் குடும்பமாக நிரம்பிவழியும் வடமாநில மக்கள்...
கோயில்வீதிகளின் பக்கவாட்டில் நடக்கும் புதிய கட்டுமானப் பணியில் இரவென்றும் பாராமல் மம்மட்டியும் சிமெண்ட் கலவையுமாக "மசாலா ஜல்தி, மசாலா ஜல்தி" என்று விரட்டி விரட்டி வேலைபார்த்துக் கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள்....
வரிசையாக இருக்கும் பெரும்பாலான வணிகக் கடைகளின் கல்லாப்பெட்டிக்கு உரிமையாளர்களும் வடநாட்டார்களே...
மதுரை மீனாட்சியம்மன் கோயிலினுள் வரிசைவரிசையாக ஆண்,பெண்,குழந்தைகள் என இந்திமொழியில் அளவளாவிக் கொண்டு வடமாநில மக்கள்...


கோயிலின் மேல்ஆடி வீதியில், மேற்குக்கோபுர வாயில் உட்பகுதி
யிலிருக்கும் பசுமடத்தினுள் அடுக்கி வைத்திருந்த அகத்திக்
கீரைக் கற்றைகளை ஒரு வடநாட்டு இளைஞர் வெளியே எடுத்து வந்து அதன் வாயிலில் ஒரு மேசை, நாற்காலி போட்டமர்ந்து, "அந்தர் கோமாதா.... பீஸ்ருப்யா...பத்தா டாலோ....பத்தா டாலேகா....பத்தா டாலோ...." என்று கட்டு ஒன்று 20 ரூபாய் எனக் கூவிக்கூவி விற்றுக் கொண்டிருந்தார்...
நம் மக்கள் அதை வாங்கிக் கோசாலையினுள் கொண்டு சென்று பசு, கன்று எனக் கொடுத்து மகிழ்ந்தனர்.
தமிழா...நீ என்னதான் செய்துகொண்டிருக்கிறாய்?
உன் மொழி என்னவானது?
உன் வேலை என்னவாயிற்று?
உன் முப்பாட்டன் தொன்தமிழனின் பண்பாடு என்னவாயிற்று?
கோயில்மாட்டுக்குக் கீரை விற்கக்கூட அருகதையற்றவனா நீ...?
அவர்களைப்போல் உழைக்கத் தயாராகவே இல்லையா?
இலவச அரிசியில் உடம்புவளர்த்து, டாஸ்மாக்கில் நீராடி மகிழும் தமிழனே...இன்னும் கொஞ்சநாள்களில் நீ மறைந்தே விடுவாயோ..!
மதுரையைவிட்டு வெளியில் வரும்போது நம் நெஞ்சம் கொஞ்சம் கனத்துத்தான் போயிருந்தது...!
-திருப்பூர். இரா. சுகுணாதேவி-

கருத்துகள் இல்லை: