வெள்ளி, 31 ஜனவரி, 2020

கொரோனா: உலக சுகாதார எமர்ஜென்சி பிரகடனம்!

கொரோனா: உலக சுகாதார எமர்ஜென்சி பிரகடனம்!மின்னம்பலம் : சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் ஒரு வாரத்தில் பத்து மடங்கு அதிகரித்திருப்பதால், நேற்று (ஜனவரி 30) இரவு உலக சுகாதார நிறுவனம் (World Health Organaisation) உலகளாவிய சுகாதார அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியிருக்கிறது.
ஐநாவின் சுகாதார அமைப்பான உலக சுகாதார நிறுவனம் இந்த சர்வதேச அவசர நிலையை ஒரு அசாதாரண நிகழ்வு என்று வரையறுக்கிறது. சீனாவுக்கு மட்டுமல்ல, மற்ற நாடுகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதால் இந்த வைரஸை ஒடுக்க சர்வதேச முயற்சி தேவை என்றும் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ஜனவரி 30ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு தலைமையகத்தில் ஊடகங்களுடன் பேசினார்.
அப்போது அவர், “இந்த அறிவிப்புக்கு முக்கிய காரணம் சீனாவில் என்ன நடக்கிறது என்பது மட்டுமல்ல. மற்ற நாடுகளில் என்ன நடக்கிறது என்பதன் காரணமாகவே. சீனாவிலிருந்து இந்த வைரஸ் பல நாடுகளுக்கும் பரவுவதே எங்கள் கவலை. பலவீனமான சுகாதார அமைப்புகள் கொண்ட நாடுகள் இதைச் சமாளிக்கத் தயாராக இல்லை என்பது மேலும் கவலைக்குரியது. இருப்பினும், ஐநா சுகாதார அமைப்பு இந்த அவசர நிலையால் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கவில்லை.

சீனாவில் இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர், அதே நேரத்தில் 7,700 நோயாளிகள் உள்ளனர். சீனாவுக்கு வெளியே உலகெங்கிலும் உள்ள சுகாதார அதிகாரிகள் உலகளாவிய தொற்றுநோயைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்காவில் இந்த வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் அவசரக் குழு சீனாவில் கொரோனா வைரஸ் வெடித்ததை ‘சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளதை அடுத்து, இந்த அமைப்பின் பணியாளர்கள், நிதி மற்றும் பிற வளங்கள் உலகம் முழுதும் கொரானோ வைரஸை எதிர்த்துப் போரிட ஒருங்கிணைக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட நாடுகளின் குடிமக்கள் உடல்நலம் மற்றும் சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்ற தூண்டுவதற்கு இந்த அவசர நிலை பிரகடனம் பயன்படும்.

கருத்துகள் இல்லை: