திங்கள், 27 ஜனவரி, 2020

கனடாவில் சிகிச்சை பெறும் தமிழக மாணவியின் நிலை .. அதிகளவு வெளியேறிய ரத்தம்; செயற்கை சுவாசம்?!’-


vikatan.com - சதீஸ் ராமசாமி : உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றான, அதிலும் தமிழர்களின் நம்பிக்கைக்குரிய நாடான கனடாவில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது வேதனையளிக்கிறது. கனடா நாட்டில் உள்ள டொரண்டோ நகரில் உயர்கல்வி பயின்று வந்த தமிழக மாணவி மர்ம நபரால் கத்தியால் சரமாரியாகக் குத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் துயரச் சம்பவம் தமிழ் மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள புரூக்லேண்ட் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான ஆல்பர்ட், ஜென்ட் தம்பதியரின் மகள் ரேச்சல். 23 வயதான இவர் கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் அறிவியல் பிரிவில் உயர் கல்வி பயின்று வந்தார். வழக்கம் போல வகுப்பை முடித்துச் செல்கையில் சற்றும் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரேச்சலைச் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பியுள்ளார். அதிகளவு ரத்தம் வெளியேறிய நிலையில் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

கழுத்தில் ஏற்பட்டிருந்த பலத்த காயம் காரணமாக உயர் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்துள்ளது. நேற்று முன்தினமே தமிழகத்தில் உள்ள ரேச்சலின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்தப்பட்டிருந்தது. இந்தத் துயரச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட பெற்றோர் கனடா செல்லும் முயற்சியில் உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து புரூக்லேண்ட் பகுதியைச் சேர்ந்தவர்கள் “அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்தியதாகத் தகவல் வந்தது. சென்னையில் உள்ள நண்பர் மூலம் சென்னையில் இருந்து கனடா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. உடனடியாக விசா கிடைக்காததால் நேற்று பெங்களூரு சென்று இன்று அங்கிருந்து கனடா செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரத்தம் அதிகம் வெளியேறியதுடன் எலும்பிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். செயற்கை சுவாசம் அளித்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பெற்றோர் நேரில் சென்றபின் தான் உண்மை நிலவரம் தெரிய வரும்” என்கின்றனர்‌. ரேச்சலைச் சரமாரியாகக் கத்தியால் குத்திவிட்டு தப்பிய நபரை கனடா போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர் ‌.
vikatan.com

கருத்துகள் இல்லை: