திங்கள், 27 ஜனவரி, 2020

ரஜினிக்கு கனிமொழி பதில் : திடீரென்று சிலர் இப்போது பெரியாரை பற்றி எல்லாம் ....

ரஜினிக்கு கனிமொழி பதில்!மின்னம்பலம் : திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கப் பொதுக்கூட்டம் 25 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டியில் நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றினார் மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி. இந்தக் கூட்டத்தில் பேசும்போது துக்ளக் விழாவில் ரஜினி பேசியதற்கு பெயர் குறிப்பிடாமல் பதிலளித்தார் கனிமொழி.
“திடீரென சிலர் இப்போது பெரியார் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். கலைஞர் பற்றி விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. அவர்களுக்கு தெரியும் வரக் கூடிய சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறப் போகிறது ஸ்டாலின் முதல்வராக அமரப் போகிறார். இதை எப்படியாவது தடுக்க வேண்டுமென்றுதான் இப்படியெல்லாம் சொல்கிறார்கள்.
கலைஞர் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் சந்தித்த சவால் இதுதான். திமுக இந்துக்களுக்கு எதிரானது, பெரியார் இந்துக்களை திட்டிவிட்டார் என்றெல்லாம் கிளப்பிவிடுவார்கள்.

தந்தை பெரியார் தன் வாழ்நாளெல்லாம் மக்களிடம் என்ன கேட்டார்? சினிமாவில் நடித்து என் படத்தை வந்து பாருங்கள் என்று சொன்னாரா? இல்லை! தேர்தலில் நிற்கிறேன், எனக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்டிருக்கிறாரா?
நான் கேட்கிறேன்... இந்துகளைப் பாதுகாக்கிறோம் என்று சொல்கிறீர்களே... பெரும்பான்மை இந்துக்களுக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?
 இட ஒதுக்கீடு பெரும்பான்மை இந்துக்களுக்குதானே? பெரும்பான்மையாக இருக்கக் கூடிய இந்துக்கள் படிக்க வேண்டும், அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்றுதானே பெரியார் போராடினார், கலைஞர் போராடினார். ஆனால் இன்று எல்லா அடக்குமுறைகளையும் விதித்தவர்கள் இன்று நாங்கள்தான் இந்து மதத்தைக் காப்பாற்றுகிறோம் என்று சொல்லி, நீங்கள்தான் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று சொல்லி நம்மைப் பார்த்து கையை நீட்டிக் கொண்டு நிற்கிறார்கள். நாங்கள் பெரும்பான்மை இந்துக்களுக்கு ஆதரவானவர்கள்” என்று பேசினார் கனிமொழி எம்.பி.

கருத்துகள் இல்லை: