ஞாயிறு, 26 ஜனவரி, 2020

செங்கல்பட்டு டோல்கேட் சம்பவம்: நடந்தது என்ன?

செங்கல்பட்டு டோல்கேட் சம்பவம்: நடந்தது என்ன?மினம்பலம் : உலகத்திலேயே அதிக பிரச்னைகள் கொண்ட இடம் எது என்று கேட்டால், சில நாடுகளின் எல்லைப் பகுதிகளைக் காண்பிப்பார்கள். ஆனால், அவற்றைவிட அதிக பிரச்னைகளைக் கொண்டது சோட்டாபீம் கார்ட்டூனில் இடம்பெறும் டோலக்பூர் தான். தினமும் யாராவது வந்து ஏதாவது பிரச்னை செய்துகொண்டே இருப்பார்கள். ஆனால், அசராமல் அதனை எதிர்கொண்டு வாழ்க்கையை நடத்திக்கொண்டே இருப்பார்கள் டோலக்பூர் மக்கள். அப்படிப்பட்ட பகுதியை உண்மையான ஒரு இடத்தில் பார்க்கவேண்டும் என்றால், அது செங்கல்பட்டுக்கு அருகே உள்ள பரனூர் டோல்கேட் தான். தினமும் தினுசு தினுசாக பிரச்னைகளை சந்தித்துவந்த டோலக்பூரில்; மன்னிக்கவும் டோல்கேட்டில், 25ஆம் தேதி இரவு ஒரு சம்பவத்தை நிகழ்த்தியிருக்கின்றனர் மக்கள். அங்கே என்ன நடந்தது? ஏன் இந்த சம்பவம்? என்ற கேள்விகளுடன் மின்னம்பலம் டீம் களம் கண்டது.
ஓரிரு நிமிடங்களில் கடந்து செல்லக்கூடிய டோல்கேட்கள் எத்தனையோ இருந்தாலும், செங்கல்பட்டு டோல்கேட்டுக்கென ஒரு வரலாறு உண்டு.
குறைந்தபட்சமாக 25 நிமிடங்களாவது நிற்காமல் இந்த டோல்கேட்டை கடக்க முடியாது. இதற்குக் காரணம் அந்த டோல்கேட் செயல்படும் விதம். FasTag மூலம் முழுவதும் கணினிமயமாக டோல்கேட்டுகள் மாற்றப்பட்டிருந்தாலும், இத்தனை நாட்களாக இங்கு நடந்த டோல்கேட் வசூல் முறையே வேறு என்கின்றனர் அந்த டோல்கேட்டின் அருகே பணிபுரியக்கூடியவர்கள். செங்கல்பட்டு டோல்கேட்டில் வெள்ளரிக்காய் விற்கும் முருகேசனிடம் பேச்சுகொடுத்தபோது அவர் கூறிய தகவல்கள் ஆச்சர்யமளிக்கக்கூடியதாக இருந்தன.
 “இந்த டோல்கேட்டைப் பொறுத்தவரைக்கும் எப்படா இதை கிராஸ் பண்ணி போவோம்னுதான் எல்லாரும் யோசிப்பாங்க. சென்னைல இருந்து வெளியூருக்கு போறவங்க எல்லாருக்கும் இதுதான் கடைசி கஷ்டமான இடம். பெருங்களத்தூர், வண்டலூர் டிராஃபிக்குல மாட்டிக்கிட்டு கஷ்டப்பட்டு வர்றவங்க இங்க பல மணிநேரம் நிக்கவேண்டியது இருக்கும்.


அந்த நேரத்துல தான் கம்ப்யூட்டர் வொர்க் ஆகல, கேமரா வொர்க் ஆகல. காசு குடுத்து டோல்கேட் டிக்கெட் வாங்குங்கன்னு கடுப்பேத்துவானுங்க. அதைகூட அந்த குறுக்க போடுற பேரிகார்டு போடமாட்டாங்க. இவங்க வைக்குற ஆள் ஒருத்தர், காருக்கு முன்னாடி வந்து நின்னுக்குவாரு. பணம் கொடுத்து டிக்கெட் வாங்குனதுக்கு அப்பறம் தான் நகருவாரு. கேட் இல்லை, கம்ப்யூட்டர் இல்லை. இந்த டோல்கேட் வேலை செய்யுதா இல்லையான்னு யாராச்சும் கேட்டா, கேள்வியெல்லாம் கேக்காம காசு குடுங்கன்னு கேப்பாங்க. அதுக்குள்ள பின்னாடி நிக்குற வண்டியெல்லாம் ஹார்ன் அடிக்கும். அவங்கட்ட திட்டு வாங்கவேணாமேன்னு காசு குடுத்துட்டு போய்ருவாங்க. அடுத்து வந்து நிக்குறவங்களுக்கும் இதே நிலைமை தான். இப்படி கேள்வி கேக்குறதுக்கு கூட சில ரூல்ஸ் வெச்சிருக்காங்க சார். கட்சிக்கொடி போட்ருந்தா விட்றுவாங்க. போலீஸ் வண்டின்னா விட்றுவாங்க. ஆனா, மத்த வண்டியெல்லாம் விடமாட்டாங்க. அதோ நிக்குறாரு பாருங்க, அவர் பேர் சாமேல். அவங்க எல்லாம் ஒருதரம் அடிச்சு ஒடச்சாங்க. அவர்ட்ட கேட்டீங்கன்னா நிறைய தெரியும்” என்று ஓரமாக பைக்கில் நின்றுகொண்டிருந்த ஒருவரை கைகாட்டினார்.
புல்லட் பைக்கின் மீது உட்கார்ந்துகொண்டு ஃபோன் பார்த்துக்கொண்டிருந்தவரை நெருங்கி அறிமுகப்படுத்திக்கொண்டதும், ‘நான் சாமுவேல். செங்கல்பட்டுல தான் 35 வருஷமா இருக்கேன்” என்று அவரை அறிமுகப்படுத்திக்கொண்டார். டோல்கேட்டில் இரவு நடந்த சம்பவம் என்னவென்று கேட்டபோது, அதை விட்டுவிட்டு ‘அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நாங்களே அடிச்சோமே சார்’ என்று அந்தக் கதையை சொல்லத் தொடங்கினார் சாமுவேல். “எங்களைப் பொருத்தவரைக்கும் இந்த ரோடு தான் சார் ஈசியா மத்த இடத்துக்கு போக ஏத்ததா இருக்கும். செங்கல்பட்டு பாலம் வழியா இன்னொரு வழி இருந்தாலும், அந்த ரோடு நல்லா இருக்காது. ஜி.எஸ்.டி ரோட்டுல ஏறி டோல்கேட் வழியா போனா பரனூரை தாண்டி நகருக்கும்(மறைமலை நகரை சொல்கிறார்), பெருமாள் கோவிலுக்கும்(சிங்கப்பெருமாள் கோவில்) பத்து, பாஞ்சு நிமிஷத்துல போயிறலாம். ஆனா, இந்தப் பக்கம் வந்தாலே டோல் கட்டணும்னு சொல்வானுங்க. வண்டி நம்பரை பாத்தாலே லோக்கல் வண்டின்னு தெரியும். ஆனாலும், காசு குடுத்தாதான் வண்டியை விடுவோம்னு சொல்லி மிரட்டுவாங்க. சரி, என்ன இருந்தாலும் அதுதான் ரூல்ஸுன்னு சிலர் டோல் எடுப்பாங்க. சிலர் சண்டைபோட்டு டிராஃபிக் ஆனதும் அவனே விட்டுடுவான். ஒரு தரம் எங்க ஊர்க்காரப் பையன் ஒருத்தன் புது கார் வாங்கிட்டு வந்தப்ப, நம்பர் இல்லாத வண்டின்னா 500 ரூவா கொடுக்கணும்னு சொல்லி கேட்ருக்காங்க. அவன், கொஞ்சம் சுர்ருனு ஏறிக்கிற ஆளுன்னதால ‘உன்னால முடிஞ்சதை பாத்துக்க’னு சொல்லிட்டு எங்களுக்கு ஃபோன் போட்டுட்டான். நாங்க வர்றதுக்குள்ள பாத்தா அவன் கார் சாவியை புடிங்கி, உள்ள கொண்டுபோய் உக்கார வெச்சிருந்தாங்க. ஊர்ல எல்லாருக்கும் தெரிஞ்சதும் எல்லாம் ஒன்னு கூடி அடிச்சு கண்ணாடியை ஒடச்சு பெரிய ரகளையா போச்சு. டோல்கேட்டுக்கு சம்மந்தமே இல்லாத ஒரு ஆளை முன்னால நிக்க வெச்சு, அவன் காரை புடுங்குனதால போலீஸும் அவனை புடிச்சு வெச்சிக்கிட்டு எங்களை விட்டுட்டாங்க. அதுக்கப்பறம் கொஞ்ச நாள் ஒழுங்கா இருந்தாங்க. அப்பறம் திரும்பவும் இதேமாதிரி பண்ணிக்கிட்டு இருக்காங்க. அதுமாதிரி ஏதோ நடந்ததுக்கு தான் பப்ளிக் காண்டாகி ஒடச்சிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். முழுசா என்ன நடந்ததுன்னு தெரியல. அந்த சமயத்துல இங்க இருந்த ஒருத்தனை வர சொல்றேன் இருங்க” என்றார். சில நிமிடங்களில் ஆட்டோவில் ஒரு நபர் வந்தார். செங்கல்பட்டு ரயில்வே ஸ்டேஷன் அருகே ஆட்டோ ஓட்டும் ரவி என்ற அந்த நபர் சம்பவம் நடைபெற்றபோது டோல்கேட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது, கூடியிருந்த மக்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதாக சில விஷயங்களைக் கூறினார்.

“சாதாரண நாள்லயே ரொம்ப டிராஃபிக்கா இருக்கும். நேத்து சனிக்கிழமைன்றதால ரொம்ப டிராஃபிக்கு. சிட்டியை விட்டு வெளிய போய்கிட்டு இருந்தவங்க எல்லாரும் ரொம்ப நேரமா லைன்ல நின்னுக்கிட்டு இருந்தாங்க. இப்ப வரைக்கும் FasTag முழுசா வேலை செய்யாததால, ஒரு டோல்ல பணம் வாங்கிட்டு தான் விடுவாங்க. அந்த டோல்ல தான் கவர்மெண்ட் பஸ் எல்லாம் போவும் வரும். அப்படி ஒரு கவர்மெண்ட் பஸ் வந்தப்ப தான், டோல்கேட் கண்ணாடிக்குள்ள உக்காந்துக்கிட்டு காசு குடு அப்ப தான் விடுவோம்னு சொல்லி டென்ஷன் பண்ணியிருக்காங்க. கவர்மெண்ட் பஸ்ஸுக்கு எதுக்கு டோல் கேக்குறன்னு அவர் பேசிட்டு இருக்கும்போதே ஏதோ கெட்டவார்த்தையெல்லாம் யூஸ் பண்ணியிருக்காங்க. இவங்க பேசுனது ஏதோ போதைல பேசுறா மாதிரி இருக்கவும், டிரைவர் இறங்கி வந்து பாத்திருக்கார். ஏதோ பிரச்னை போலன்னு, இவங்க ஏற்பாடு பண்ணி வெச்சிருப்பாங்க சில பேர். அவங்க வந்து அவரை சுத்து போட்டானுங்களாம். அப்ப, கவர்மெண்ட் பஸ்ஸுக்கு டோல் கேக்குறது மட்டுமில்லாம ஆள வெச்சா சுத்து போடுறீங்கன்னு, பஸ்ஸை கொண்டுபோய் அவர் குறுக்குல நிறுத்தி டிராஃபிக் பண்ணிட்டாரு. நம்ம முதல்வன் படத்துல பாத்தோமே அதே மாதிரி பண்ணியிருக்கார். அப்பறம் தான் விஷயம் தெரிஞ்சு மக்களெல்லாம் இறங்கி வந்து கேட்ருக்காங்க. அப்பவும் அவனுங்க நெக்குலாவே பேசியிருக்கானுங்க. அதனால கோவப்பட்டு அடிச்சு ஒடச்சுட்டாங்க. அடிச்சதோட உட்ருந்தா பரவால்ல. உள்ள வெச்சிருந்த பணப்பொட்டியெல்லாம் ஒடச்சு, அதுல இருந்த காசையெல்லாம் பைல போட்டுக்கிட்டாங்க. ஆம்பளைங்க, பொம்பளைங்க எல்லாருமே கார்ல இருந்த பை, பஸ்ஸுல எடுத்துக்கிட்டு போன பையுன்னு எல்லாத்துலயும் பணத்தை அள்ளிக்கிட்டு போய்ட்டாங்க” என்று விவரித்தார் ரவி
கேமராவை ஆஃப் செய்துவிட்டு பணம் வாங்குவது, டோல்கேட் சரியாக இல்லாததால் பணம் கட்டமாட்டேன் என்பவர்களிடம் பத்து ரூபாய் வாங்கிக்கொண்டு அனுப்புவது என பல தில்லுமுல்லுகள் அரங்கேறும் இடம் என்பதால் முறையற்ற விதத்திலேயே பலவிதமான வசூல்களை அரங்கேற்றியிருக்கிறார்கள். கட்சி மீட்டிங்கை முடித்துக்கொண்டு வரும் வண்டிகளிடம் இவர்களது எண்ணம் பலிப்பதில்லை. இரு பக்கமும் கொடியைக் கட்டிக்கொண்டு வரும் வண்டிகளிலோ, கட்சிக் கொடி வாகனத்தின் முன்பு பறக்கும் வண்டிகளிடமோ பணம் வசூலித்து நிற்கவைத்தால் அதிக நேரம் ஆகும் என்பதாலும், அவர்கள் கொடுக்க மறுத்து அடித்து நொறுக்கிவிடுவார்கள் என்று பயந்துகொண்டும் அவர்களை அனுப்பிவிட்டு, பின்னே வரும் மக்களிடமிருந்து முறையற்ற விதத்தில் பணம் பிடுங்கும் வேலைகளை பல டோல்கேட்டில் நடத்துகின்றனர். ஆனால், அவ்வப்போது இப்படி எதிர்மறையாக மாறி முழு பணத்தையும் இழந்தும் நிற்கின்றனர். நேற்று நடைபெற்ற சம்பவத்தின் பின் அங்கு நின்றிருந்த வாகனங்களில் இருந்தவர்களெல்லாம் ‘ஒவ்வொரு டோல்கேட்டையும் இப்படி அடிச்சா தான் ஒழுங்கா வேலை செய்வாங்க’ என்று பேசியதைக் கேட்டதாகக் கூறி, அப்போது ஸ்பாட்டில் இருந்தவர்களிடமிருந்து பெற்ற சில ஃபோட்டோக்களையும் அனுப்பினார் ரவி.
-சிவா

கருத்துகள் இல்லை: