வெள்ளி, 31 ஜனவரி, 2020

தர்பார் நஷ்டம்: களமிறங்கும் அமைப்புகள்!

மின்னம்பலம்:  தமிழ் சினிமா வியாபார வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பேசு பொருளாக மாறி இருக்கிறது தர்பார் படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டம். தர்பார்
திரைப்படத்தை வாங்கி வெளியிட்டதின் மூலம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி இது சம்பந்தமாக பேசுவதற்கு இப்படத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த், இயக்குனர் முருகதாஸ் ஆகியோரை சந்திப்பதற்கு நேற்றிலிருந்து வினியோகஸ்தர்கள் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று மாலை வரை அதற்கு எந்தவிதமான உரிய பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம் தர்பார் படத்தின் மூலம் யாருக்கும் நஷ்டம் ஏற்படவில்லை என்று ஊடகங்கள் மூலமாக மறைமுக பிரச்சாரத்தை படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தொடங்கியுள்ளதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. படத்தை தயாரித்த லைகா நிறுவனம், படத்தை வாங்கி விநியோகம் செய்தவர்கள் திரையிட்ட திரையரங்கு உரிமையாளர்கள் இவர்கள் வெளிப்படையாக விவரங்களை வெளியிட்டால் மட்டுமே தர்பார் லாபமா நஷ்டமா என்பது தெரியவரும்.
திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் இணைந்து உண்மையான வசூல் விபரத்தையும் வியாபார தகவலையும் வெளியிடுவதற்கான முயற்சியை இன்று மாலை தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்காக இன்று மாலை சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்கள் சென்னை தி நகரில் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். சேலம் ஏரியாவில் தர்பார் படத்திற்கு திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து கொடுத்த திரையரங்கு உரிமையாளர் ராஜா இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இன்று மாலை 7 மணி அளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் நஷ்ட ஈட்டை திரும்பப் பெறுவது சம்பந்தமாக முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. பாபா படம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய போது ரஜினிகாந்த் தாமாகவே முன்வந்து பிரச்னையை சுமூகமாக பேசி இழப்பீட்டை கொடுத்தார். லிங்கா படம் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திய போது கலைப்புலி தாணு மூலமாக அந்த பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்தார் ரஜினிகாந்த். அதே போன்று தர்பார் படத்தில் எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினியும் முருகதாஸும் இணைந்து சரி செய்ய வேண்டும் என்பதற்காகவே சுமுகமான முறையில் தொடர்பு கொள்வதற்கு முயற்சி செய்து வருகிறோம் என்கிறது தர்பார் வினியோகஸ்தர்கள் தரப்பு.
ரஜினிகாந்த் நடித்து வெளியான படங்களில் அதிகபட்ச நஷ்டத்தை தர்பார் ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து தொழில் செய்ய முடியாது முடங்கக்கூடிய சூழலில் நாங்கள் இருக்கிறோம். இதனைப் புரிந்துகொண்டு ரஜினி, முருகதாஸ் இருவரும் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அது நடைபெறாத பட்சத்தில் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு உதவியோடு எங்களது இழப்பீட்டை பெறுவதற்கு அடுத்தகட்டமாக முயற்சிகளை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.
தர்பார் படத்தின் ஏரியா உரிமையை வாங்கியுள்ள விநியோகஸ்தர்கள் அனைவரும் தமிழ்சினிமாவின் வியாபாரத்தில் முக்கிய பங்காற்றக்கூடிய பிரமுகர்கள் என்பதால் நஷ்டஈடு பிரச்னை பூதாகரமாக வெடிக்கக் கூடிய சூழல் இருப்பதாகவே தமிழ் சினிமா வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
-இராமனுஜம்

கருத்துகள் இல்லை: