ஞாயிறு, 26 ஜனவரி, 2020

இயற்கைக்கும் மதங்களுக்கும் இடையே ஓயாத சதுரங்க வேட்டை

அனேகமாக எல்லா மனிதர்களின் மனதிலும்  ஒரு திருட்டு புத்தி எப்பொழுதும் ஒழித்து கொண்டே  இருக்கும். அதற்கு காரணம் மனிதர்களின் சிந்தனைகள் மதங்களால் வடிவமைக்கப்பட்டு இருப்பதுதான் .
அதன் காரணமாகவே ஒரு பயமும் இருக்கிறது . அண்மையில் வெளியான சதுரங்க வேட்டை என்றொரு படம்  .இன்னும் பார்க்காவிட்டால் பாருங்கள் .
அதில் வரும் ஒரு வசனம் , ஒருவரை ஏமாற்றவேண்டும் என்றால் அவரின் ஆசையை முதலில் தூண்டவேண்டும் . அந்த ஆசையினால் அவர் தூண்டப்பட்டால் அவரை ஏமாற்றுவது சுலபம் என்பதாக அந்த வசனம் இருக்கும் .
இதுதான் அனைத்து மதங்களினதும் அடிப்படை தத்துவம் .. இதுமட்டுமல்ல இன்றைய காப்பரெட் கம்பனிகளின் தத்துவமும் இதுதான் ,
இன்னும் சரியாக சொல்லப்போனால் மதங்கள்தான் அன்றைய காபரெட் கம்பனிகள். இரண்டுக்கும் அடிப்படையில் வேறு பாடே கிடையாது.
ஒருவர் தன் வீட்டை ஒழுங்காக அழகாக பார்த்துகொண்டிருப்பதை பொறுக்காமல் அவரை குழப்பி அவரை அவரது வீட்டில் இருந்து வெளியே அழைத்து தங்கள் மதக்கம்பனிகளின் வருமானத்தை பார்ப்பதுதான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவை செய்து கொண்டிருக்கின்றன. மதங்களால் ஏராளமான நல்ல விடயங்கள் நடந்துள்ளனவே என்று நீங்கள் எண்ணக்கூடும் . ஆனால் உண்மையில் அவை எல்லாவற்றிலும் மதங்கள் ஒருவகை சவாரியே செய்துள்ளதுதான் உண்மை.
நல்லதோ கெட்டதோ மக்களின் அத்தனை விடயங்களிலும் தாங்கள் முன் நிற்கவேண்டும் என்பதுதான் மதங்களின் அண்டர் கிரவுண்ட் கொள்கையாகும்.
திருமணமென்றால் மதம்தான் மணமக்கள் .... இழப்பு வீடு என்றாலும் மதங்கள்தான் மையக்கருவாக இருக்கவேண்டும் என்பதுதான் மதங்களின் நோக்கம்.
இதுதான் கம்பனிகளுக்கும் மதங்களுக்கும் உள்ள அடிப்படை தளம்.
நல்ல காலம் மனிதர்களை விட இதர உயிரனங்கள் ஒன்றும் மதங்களையும் கடவுள்களையும் தேடி அலையவில்லை .
எனவே அவை இந்த அழகிய பிரபஞ்சத்தை கெடுக்கவில்லை.

மனிதர்கள் ஏதோ அளப்பெரிய சாதனையும் கடும் உழைப்பும் மேற்கொண்டு கடவுளை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அதே கடவுளை அடையவேண்டும் என்று எண்ணுகிறார்கள்.
அந்த காலத்தில் மிகப் பெரும்  கில்லாடிகள் இருந்திருக்கிறார்கள்.
அடம்பிடிக்கும்  குழந்தைகளுக்கு  அம்புலிமாமா வருவார்  என்று தாய்மார் அளக்கும் கதைகள் போலவே  மனிதர்களுக்கு  ஏராளமான கற்பனைகளை விற்பனை செய்துள்ளனர் .

அவற்றை  மனிதகுலம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உடல் பொருள் ஆவியெல்லாம்  டவுன்லோட் பண்ணி வைத்திருக்கிறார்கள் .

இவற்றை விலாவாரியாக தெரிந்து இருப்பதை வேறு பெருமையாக தம்பட்டம் அடிக்கிறார்கள் .
அவ்வளவு தூரம் மதங்கள் மனிதர்களை பயமுறுத்தி வைத்துள்ளன.
ஒரே ஒரு நிமிடம் கடவுள் என்பது இல்லை என்று எண்ணினாலே ஆகாயம் தடுக்கி தலைமேல் விழுந்து விடுமோ என்று அஞ்சுகிறார்கள் .

மனிதர்களின் இந்த அச்சம்தான் மதங்களின் மூலதனம்.

இந்த மதங்களின் வழி வாழ்வதில் மேன்மை உண்டு என்று நிருபணமானால் நாம் ஆட்சேபிக்க போவதில்லை.
 ஆனால் விடயம் அப்படி இல்லையே?
இன்றைய உலகம் எப்படி இருக்கிறது?
கோடானு கோடி ஆண்டுகளாக ஒழுங்காக இருந்த உலகம் தற்போது சில நூறு வருடங்கள் தானும் தாக்கு பிடிக்குமோ என்று கேள்விகள் எழும்பும் நிலையில் அல்லவா இருக்கிறது.
இயற்கையை  புறந்தள்ளி தாம் கற்பிதம் செய்த கடவுள் என்ற மாயக்கனவின் பின் ஆட்டு மந்தைகளாக அல்லவா மானிடர் ஓடுகின்றனர்..

மதங்கள் கடவுள் என்று ஒரு தனியான இலாகாவை மக்கள் மனதில் பதிய வைத்ததில் பெருவெற்றி பெற்றுவிட்டது.
ஆயிரக்கணக்கான் ஆண்டுகளாக வெற்றி மேல் வெற்றி பெற்றதன் விளைவு , இன்று இயற்கையை அந்த கடவுளே காப்பாற்றுவார்.
அதுமட்டுமல்ல அவரை வழிபட்டால் போதும் அவரே எல்லா பிரச்சனைகளையும் தீர்ப்பார் என்று மனிதப் போர்வையில் மத இயந்திர மனிதர் ஆகிவிட்டனர் .
எதைப்பற்றியும் நுண்ணறிவு கிடையாது . அதை நம்பு இதை நம்பு ,

சிந்திக்காதே வெறுமனே நம்பு  மீண்டும் மீண்டும் உருப்போட்டு ஒரு ஆட்டு மந்தையை அல்லவா உருவாக்கி விட்டிருக்கிறது வரலாறு?
ஒரு பக்கம் எதாவது ஒன்றை பின்பற்றுவோம்,
மறுபக்கம் எம்மால் முடிந்த அளவு பூமியை நாசமாக்குவோம் என்று போட்டி போட்டு கொண்டு அழிக்கின்றனர்.
அடே முட்டாள்களே இயற்கைதான் நீங்கள் கூறும் கடவுள் போன்ற எல்லாவற்றையும் விட ஆதாரமானது.
உங்கள் ஒவ்வொரு எண்ண அதிர்வும் உங்களை சுற்றி உள்ள  உலகை உருவாக்குகிறது என்ற அடிப்படை இயற்கை விதியை கூட  
தெரியவில்லையே/
மனிதர்கள் தங்களை  சுற்றி தங்களுக்கு விருப்பமே இல்லாத  வேண்டாத  விளைவுகளை  எல்லாம் தாங்களே அல்லவா சிருஷ்டி செய்கின்றனர்?
 
இந்த உலக அழிவுக்கு படித்தவனும் பணம் படைத்தவனும் செய்யும் கொடுமைதான் மிக மிக அதிகமாக இருக்கிறது.
அவன்தான் மதங்களினதும் கம்பனிகளினதும் தலைமை அடியாளாக இருந்து அழிவில் பெரும் பங்கு பெறுகிறான்.
கடவுள் என்று தனியான ஒரு பாடமோ இலகாவோ ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது.
நீங்கள் பார்க்கும் இந்த உலக வாழ்க்கையும்  ஓடும் நீரும் வீசும் காற்றும் ஒளிரும் சூரியனும் ஆடும் கடலும் உன்னை சுற்றி உள்ள அத்தனையும்  சாதரணமான சிருஷ்டி அல்ல .
அவை  உங்களோடு சேர்ந்து உங்களின்  எண்ணங்களை  உள் வாங்கியே  இயங்குக்கிறது .. நீதான் உண்மையான சாரதி . அது உனக்கு தெரியவில்லை.

யாரோ ஒரு பார்த்தனுக்கு உனது கடவுள் சாரதி என்று அம்புலி மாமா கதை படித்தது போதும்
இந்த நிமிஷம் இந்த தடவை உன்னை சுற்றி உள்ள இந்த பாருக்கு நீதான்  சாரதி. கவனமாக உன் விருப்பமான திசையில் பாதையில் பயணத்தை தொடர்வாயாக.

உங்களுக்கு கடவுள் அல்லது இறைவன் என்ற சொல்லில் மீது அளவற்ற காதல் இருப்பதால் அதே நானும் குறிப்பிடுகிறேன் ,
நீயும் உன்னை சூழ்ந்துள்ள இந்த இயற்கைதான் அந்த கடவுள்தான.
முற்று முழுதாக இந்த இயற்கையை விட்டு விட்டு குழந்தைகள் பம்பரத்தை நோக்கி ஓடுவது போல மதங்கள் காட்டும் பம்பரங்களை நோக்கி ஓடுவது எவ்வளவு பேதைமை..

பொதுவாக மதங்கள் குறிப்பிடும் கடவுள் என்ற சொல்லுக்கு உள்ள வரைவிலக்கணம்  எல்லாம் உங்களை சுற்றி உள்ள உங்கள் வாழ்க்கையைதான் மிக சரியாக குறிக்கிறது.
இதை புரியாமல் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தவறான பாதையில் பயணித்து,.
இந்த அழகிய அற்புதமான உலகையும் இதர ஜீவராசிகளின் வாழ்வையும் இன்று கேள்வி குறியாக்கி வீட்டீர்களே?

இயற்கை விதிகள்தான் கடவுள் அல்லது இறைவன்.

உங்களின் ஒவ்வொரு எண்ணங்களுக்கும் இயற்கை பதிலளிக்கிறது.
இந்த இயற்கையின் விதிகளை நீங்கள் ஏமாற்ற முடியாது.

ஏனெனில் அது மிகவும் பூரணத்துவம் வாய்ந்தது.
ஒருபக்கத்தால் இயற்கை விதிகளை ஊதாசீனம் செய்துவிட்டு வழிபாடு செய்வதால் உங்களுக்கு தற்காலிகமாக ஒரு சோம்பல் சுகம் கிடைக்கலாம் ஆனால் விளைவுகளில் இருந்து தப்பவே முடியாது.

அடியேன் இங்கே இயற்கை இயற்கை என்று குறிப்பிடுவது வெறும் இந்த பூமியை பற்றியது என்று மட்டும் எண்ணவேண்டாம்.

உங்களின் ஒவ்வொரு எண்ணமும் உங்களை சுற்றி உள்ள மனிதர்கள் ஜீவராசிகள் மற்றும் பொருட்கள் மீதெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அந்த தாக்கங்கள் எப்படி பட்டதாக அமையவேண்டும் என்று நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள்.
பெரும்பாலும் நீங்கள் உங்களை அறியாமலேயே ஏதோதோ விளைவுகளை எல்லாம் உருவாக்கி விடுகிறீர்கள்.

இயற்கை விதிகள் பற்றி மனிதர்கள் பெரும்பாலும் சரியாக அறியவில்லை.
அப்படி சரியாக அறிந்திருந்தால் இன்று இந்த உலகில் வறுமை நோய் யுத்தம் சண்டை சச்சரவு எல்லாம் நாளும் பொழுதும் பெருகி கொண்டிருக்கிறது?

மக்களை நோயாளிகளாக்கிவிட்டு மருந்து விற்பனை செய்யும் பைத்தியகார வியாபரம் அல்லவா நடக்கிறது?
மக்களை பயமுறுத்திவிட்டு  மனச்சாந்தியை விற்கும்   மாபியாக்கள் தேவையில்லை.
நோயை கொடுத்து விட்டு  மருந்து விற்கும் கம்பனிகள் ,
யுத்தத்தை கொடுத்துவிட்டு அமைதியை விற்கும் அரசியல்வாதிகள் ....
எல்லாமே மொத்தத்தில் ஒரு சதுரங்க வேட்டையாகி விட்டது.
இது போன்ற அமைப்புக்கள்தான் இன்றைய உலகை இயக்குகிறது.
இது ஒரு அழிவுப்பாதைதான்.
மனிதர்கள் இயற்கையில் தங்களை போலவே வாழும் இதர உயிரனங்கள் மற்றும் மரம் செடி போன்றவற்றின் வாழ்க்கையையும் அவற்றின் பிறவி நோக்கங்களையும் உள்ளுணர்வோடு நோக்கவேண்டும்.

அவற்றை பற்றி மதங்கள் கூறியவற்றை தூக்கி குப்பைக்கூடைக்குள் போடுங்கள். நீங்களாகவே உங்கள் அறிவை தீட்டி உண்மையை அறியுங்கள்.

மதங்கள் உங்களுக்கு தருபவை தோழர் மாவோ கூறியது போன்ற அபின்தான்.

உங்களின் எண்ணங்களுக்கும் உங்களை சுற்றி நடப்பவைகளையும் கொஞ்சம் உற்று அவதானியுங்கள் ..... நீங்கள் எவ்வளவு பெரிய கடவுள் என்று உங்களுக்கு தெரியவரும் ...
உங்களை தவிர வேறு கடவுள் உங்களுக்கு கிடையாது .
ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்த அறிவுசோம்பல் போதும் .   தூங்கியது போதும் கொஞ்சம் சிந்திக்க தொடங்குங்கள்.
மதங்களின் பாட்டு புத்தங்கள் போதும் .  பாடியது போதும் வாழுங்கள்  தேடுங்கள் -----  ராதா மனோகர்

கருத்துகள் இல்லை: