புதன், 20 நவம்பர், 2019

சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு அவரே காரணம்? ரணிலை ஒதுக்கியதால் வந்த வினை?

ரணில்விக்கரமசிங்க  - சஜித் பிரேமதாசா
Jeevan Prasad : சஜித்தின் தோல்விக்கான சில காரணங்கள் .....
சுருக்கமாக
ரணிலிடம் , சஜித் " வடக்கு - கிழக்கு சிறுபான்மையை மட்டும் பாருங்கள். சிங்கள பகுதி தேர்தல் மேடைகளுக்கு வராதீர்கள். பெரும்பாலான சிங்கள பௌத்தர்கள் உங்களை வெறுக்கிறார்கள் " என்றாராம். ரணில் ஆரம்பத்தில் ஏறிய ஒரு மேடையில் வங்கி கள்ளனே போ என கோசமும் போட்டு கூ காட்டினார்கள். சில மேடைகளில் கண்டு கொள்ளா தன்மை இருந்தது. அந்த நிலை காலிமுகத் திடலிலேயே ஆரம்பித்து விட்டது. சஜித்தோடு இருந்த சில இளம் தலைவர்கள் , சஜித் ஜனாதிபதியானால் ரணில் பிரதமர் இல்லை என்றார்கள். சஜித்தே ஓரிரு மேடைகளில் மக்கள் செல்வாக்குள்ள இளம் தலைவர் ஒருவரே பிரதமராவார் என்றும் , இளம் அமைச்சர்களே பதவிகளை வகிப்பார்கள் என்றும் , ரணிலையும் , பழைய அங்கத்தவர்களையும் ஒதுக்குவது போல பேசினார். ஒரு பிரபல தொலைக் காட்சியும் சஜித் வெல்வார் என்ற நம்பிக்கையில் , ரணிலை துரத்த வேண்டும் என்பது போல தேர்தல் காலத்தில் பரப்புரைகளை செய்தார்கள்.
இருப்பினும் ரணில் , சஜித்துக்காக இறங்கி வேலை செய்த இடங்களில் சஜித் வெற்றி பெற்றுள்ளார். மற்ற இடங்களில் தோல்வி. அவரோடு இருந்த பலரது இடங்களிலும் படு தோல்வி. அவை சிங்கள பகுதிகளாகும்.
இவை தமிழர்களுக்கு பெரும்பாலும் தெரிய வாய்ப்பில்லை. அத்தனையும் சிங்களத்தில் நடந்த கூத்துகள். சிங்களவர்கள் இவற்றை அதிகமாக அவதானித்தார்கள். வேதனைப்பட்டார்கள். ஐதேக என்பது இலங்கையின் ஆரம்ப கட்சி. அதன் சரித்திரம் மிக பழமையானது. அக் கட்சி ஆதரவாளர்கள் ஐதேக ஆட்சி இல்லாத போதும் அசையாமல் அதே கட்சியில் இருந்தவர்கள். பச்சை , யானை என்பது அவர்களது கொள்கை. அது ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஆட்டம் கண்டது.
எனவே ஐதேக ஆதரவாளர்கள் கூட எதிர் தரப்புக்கு வாக்களித்தார்கள். நடுத்தர வர்க்கம் அதிகமாக எதிர் தரப்புக்கே வாக்களித்தது. அதனால்தான் சிங்கள பகுதிகளில் சஜித்துக்கு வாக்குகள் விழவில்லை.

தேர்தல் முடிந்த பின்னர் கூட இப்படியான சில விடயங்களை முடிவு செய்து பேசியிருக்கலாம். செய்திருக்கலாம். அவசரம். வெற்றியின் கோசம் கண்ணை மறைத்தது. ரணிலை மேடையில் வைத்துக் கொண்டு கூட சஜித் , ரணிலுக்கு உரிய கௌரவத்தைக் கொடுக்கவில்லை. சரத் பொண்சேகா குறித்து ஒவ்வொரு மேடை தோறும் சிலாகித்து பேசியளவில் ஒருவீதம் கூட சஜித், ரணிலை பற்றி பேசவே இல்லை. சஜித் பிரேமதாச ஆட்சியை கொண்டு வருவேன் என்றே பேசினார். அந்த கட்சியை நிர்மானித்தவர்களை பற்றி ஒன்றுமே இல்லை. திரையில் காண்பிக்கப்பட்ட காணோளி கூட பிரேமதாச குறித்தே இருந்தது. தேவையானால் சஜித்தின் தேர்தல் கூட்ட காணோளிகளை அவதானித்தால் அப்பட்டமாக தெரியும். இதுபோன்ற விடயங்களே தோல்விக்கு வழியானது. தவறான ஆலோசனைகள். சஜித்தோடு இருந்த பலர் இடம் ஏவல் தெரியாமல் செயல்பட்டார்கள்.
பொதுவாக டிஜிட்டல் டெக்னொலஜி எல்லாம் பாமரருக்கு தெரியாது. வானில் பறந்து அதிக மேடைகளில் பேசி அவற்றை சமூக வலைத் தலங்களில் பகிர்வதால் அடிப்படை மக்களை அவை போய்ச் சேரும் என நினைக்குமளவுக்கு இலங்கை ஒன்றும் 100 சதவீதம் வளர்ச்சியடைந்த நாடல்ல. அடுத்தது இணையம் இலங்கையில் இலவசமும் அல்ல. டேட்டா போகும் என பார்க்கமாட்டார்கள். அதைக் கூட புரியாத புத்திசாலித்தனம்.
தேர்தல் மேடைகளில் சஜித்தின் படங்களை போட்டு சஜித்தை பிரபல்யப்படுத்திய அளவுக்கு , அன்னம் என்ற சின்னத்தை பிரபல்யப்படுத்த முயலவேயில்லை. உதாரணத்துக்கு என் குடும்பம் ஐதேக ஆதரவு குடும்பம். என் அம்மாவிடம் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்று கேட்டேன். அவர் சஜித்துக்கு என்றார். அவரது சின்னத்தை தெரியுமா? எனக் கேட்டேன். அவர் தெரியாது என்று பதில் சொன்னார். ஐதேகவின் ஒரு கடும் ஆதரவாளருக்கே சஜித்தின் சின்னம் தெரியவில்லை என்றால் மற்றவர்கள் கழுகுக்கு போடாமல் என்ன செய்வார்கள்? அந்த மக்களை குறை சொன்னால் நாம்தான் மூடர்கள்.
அதன்பின்னரே நான் சின்னத்தை பகிருங்கள் என்று சொல்லி எழுதி பகிரத் தொடங்கினேன். இப்படி அநேக தவறுகள் சஜித்தின் தோல்விக்கு காரணங்களாக உள்ளன. இது குறித்து நீண்ட ஒரு விளக்கத்தை எழுத நினைத்தேன். பிரயோசனமில்லை. அடி மட்ட வீடுகளுக்கு போய் பரப்புரை செய்யாது போனால் வெற்றி கிடைக்காது. என் வீட்டுக்கு வந்து சொன்னதுக்காவது என் வாக்கை போட வேண்டும் என நினைக்கும் மக்கள் நம்மவர்கள். அப்படி அவர்கள் வாசல் தேடி செல்லாவிட்டால் அந்த மக்களும் ஆதரவளிக்க மாட்டார்கள். ஐதேக அச்சடித்த எதுவுமே மக்களுக்கு பகிரப்படவில்லை. அவை சரியாக நடைபெறவில்லை. சிலர் மக்களின் வாசல்வரை செல்வதை விட சஜித்துக்கு முன்னும் பின்னும் ஓடித் தரிந்தார்கள். கோலமாவுகள்.
இப்போது யார் யாரையோ குற்றம் சொல்லி பிரயோசனமில்லை. சுய விமர்சனம் என்பது என் குறையை நான் விமர்சிப்பது. அடுத்தவனை விரல் நீட்டி தப்புவதில்லை.
வெற்றிக்கு எல்லோரும் உரிமை கொண்டாடுவார்கள். தோல்விக்கு உரிமை கொண்டாட யாரும் இருக்க மாட்டார்கள். தோல்வியின் உரிமையாளர்கள் பலர் , முகம் கொடுக்க முடியாமல் விட்டு செல்கிறார்கள். அவர்கள் செய்த தவறுகள் அவர்களை உறுத்தும். ஆனால் தவறே செய்யாதவர்களையும் நடுத்தெருவுக்கு கொண்டு வந்தது கொடுமை.
- ஜீவன்

கருத்துகள் இல்லை: