வெள்ளி, 22 நவம்பர், 2019

சமுகநீதியால் முன்னேறிய பெற்றோர்களே .. சமுக அநீதியால் உங்கள் குழந்தைகள் தெருவில் .....?. எதிர்காலம்?

Kathir RS :  தேவதை போல மகளையும் இளவரசனைப் போல மகனையும் பெற்று வளர்க்கும் அன்பான
பெற்றோரே..
உங்கள் பிள்ளைகள் இன்டர்நேஷனல் ஸ்கூலிலோ அல்லது சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் ஏதாவது ஒரு வித்யாஷ்ரமத்திலோ வித்யாலயாவிலோ இப்போது LKG UKG அல்லது 1,2 வகுப்புகளில் படித்துக் கொண்டிருக்கலாம்..
அவர்கள் எதிர்காலம் நீங்கள் வாழும் நிகழ்காலம் அளவுக்கு கூட இருக்குமா என்பது பற்றிய புரிதல் உங்களுக்கு இருக்கிறதா..?
உங்கள் பிள்ளைகளை அடுத்தடுத்த 3,5 வகுப்புகளில் பொதுத்தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்று கூடவே ஐந்தாம் வகுப்பிலிருந்து நீட் தேர்வுக்கோ மற்ற பொறியியல் படிப்பு நுழைவுத்தேர்வுக்கோ தயார் படுத்த லட்சங்களை கொட்டிக் கொடுக்கவும் உங்கள் பிள்ளைகளை வாட்டி வதைக்கவும் தயாராகி விட்டீர்களா?> அத்தனை பணத்தை கொட்டியும் அவர்கள் ஆசைப்படும் படிப்பு நம்மை சுற்றி நடக்கும் அரசியலால் கிடைக்காமல் போனால் அதை அவர்களுக்கு எடுத்துச்சொல்லி உங்களால் புரியவைத்து கிடைத்த படிப்பில் சேர்த்துவிட மனதளவில் அவர்களை தயார்படுத்த உங்களால் முடியுமா?
நீங்கள் கொட்டிய பணம் வீணாய் போனதை நினைத்து வரெத்தப்படவோ கோபப்படவோ உங்களால் முடியுமா?

படித்து முடித்தபின் எந்த அரசு வேலையும் நமக்கு கிடைக்காது என்ற தெளிவுடன் தனியார் வேலை தேடியலைய உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து விடுவீர்களா?
இன்று பொறியாளராக மருத்துவராக கணிப்பொறி வல்லுனராக தொழில் முனைவோராக பணியாற்றும் நீங்கள்..
படிப்பறிவில்லாத அல்லது பள்ளிப்படிப்போடு நின்றுபோன பெற்றோர்களுக்கு மகனாய் / மகளாய் பிறந்த நீங்கள்...
உங்கள் காலத்தில் உங்கள் படிப்பை சமூக நீதி தந்த வசதிகள் மூலம் பெற்றோருக்கு அதிக சிரமமில்லாமல் படித்து தேறிய நீங்கள்..
உங்கள் பிள்ளைகளுக்காக வேலையைத் துறந்து முழு நேரமும் அவர்களை கவனித்துக்கொள்ளும் நீங்கள்..
அவர்கள் வளர்ந்து மேல்நிலை வகுப்பு கல்லூரி வேலையென்று வரும்போது, நீங்கள் உரிமையுடன் அரசிடம் பெற்ற எந்த சலுகைகளுமேயின்றி அம்போவென்று திக்கற்று நிற்கப் போகிறார்களே அப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?
22/11/19

கருத்துகள் இல்லை: