சனி, 23 நவம்பர், 2019

வீடு கட்டும் பறவைகளின் உலகம் .. நம்ப முடியாத அதிசய உலகம் .. வீடியோ


Kishoker Stanislas : Vogelkop Bowerbird என்கிற பறவை கட்டிய கட்டுமானம் தான் இது. கிட்டத்தட்ட ஏழு , எட்டு ஆண்டுகள் செலவழித்து இந்த கூ(வீ)ட்டைக் கட்டுகிறது. கட்டி முடிந்ததும் , பூக்கள் பழங்கள் என்று - குறிப்பாக கவர்ச்சியான நிறமுடைய மற்றும் அழகான வடிவமுடையவற்றை - இந்த கூட்டடியில் கொண்டு வந்து குவிக்கும்.
Bowerbird வகையில் பத்திற்கு மேல் வகையுண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான , மனிதர்களால் கற்பனையே செய்யமுடியாத ஆச்சரியமிக்க கட்டுமானங்களை பூமியின் தளத்திலே வியாபிக்கும் .
Macgregor's bowerbird என்கிற இன்னொரு வகை Bowerbird , நிலத்திலிருந்து ஒரு மீட்டருக்கும் அதிகமான உயரமுடைய கோபுரத்தை குச்சிகளால் கட்டுகிறது. ஆறு ஏழு ஆண்டுகளாக... ஒரே கோபுரம். அளவு பிரமாணத்தை எல்லாம் அச்சொட்டாக வைத்து குச்சிகளை உடைக்கிறது. கட்டி முடிந்ததும் , கோபுரத்தின் ஓரங்களில் நீட்டிக்கொண்டிருக்கும் குச்சிகளில் பாசிகளையும், பூக்களையும் ஒடித்துக்கொண்டு வந்து கட்டித் தொங்கவிடுகிறது. அலங்காரம்... !

மக்கிரேகர் பவரேர்ட்டுக்கு இருக்கும் சவால்களில் ஒன்று காட்டுப் பன்றிகள். பாசியாலும், ஈரமான மண்ணாலும் அமைந்த்திருக்கிற கோபுரத்தின் அடித்தளத்தை கிளறுவதற்கென்றே பன்றிகள் வரும். ஈரமான அந்த அடிப்பாகத்தில் உணவு புதைந்திருக்கும் என்ற நினைப்பு பன்றிக்கு.
அந்தப் பெரிய பன்றி வந்து கிளறிக்கொண்டிருக்கும் போது சின்ன சைஸ் காட்டுப்புறா போல இருக்கிற மக்கிரேகரால் என்ன செய்ய முடியும்? ஆனால் ஏழு வருட உழைப்பு தொலையப்போகிறது.
மக்கிரேகர், மரத்தின் கொப்பொன்றுக்கு போகிறது. அங்கேயிருந்து பன்றி கத்துவது போல அட்சரம் பிசகாமல் மிமிக்கிரி செய்கிறது. கொஞ்சம் தலையை தூக்கிப் பார்த்துவிட்டு பன்றி மீண்டும் கிளறுகிறது. மக்கிரேகர் இப்போது , அடிபட்ட பன்றி ஒன்று உதவி கேட்டு கத்துவது போல ஈன ஸ்வரத்தில் கத்துகிறது. தலையை அங்கும் இங்கும் திடுக்கிட்டு திரும்பினாலும் , சொந்தக்காரனை விட சோறுதான் முக்கியம் என்று திரும்ப கிளறுகிறது பன்றி. தூரத்தில் நாய்கள் ஊளையிடும் சத்தம் கேட்டு வெருள்கிறது பன்றி. வேறு யாருமல்ல... அதுவும் மக்கிரேகர் தான். ஆனாலும் அந்த இடத்தை விட்டு நகர்வதாய் இல்லை. ' இது என்னடா சோத்துக்குச் செத்த பண்டியா இருக்கும் போலயே ' என்று வெறுத்துப்போன மக்கிரேகர் பிரம்மாஸ்திரத்தை கையில், - மன்னிக்க , வாயில் - எடுக்கிறது. வெறிகொண்ட நாய் கோபத்தோடு குரைப்பது போல குரைக்கிறது மக்கிரேகர். அதற்கு மேல் பன்றியால் நிற்கவுமா ஏலும்?
இந்தச் சின்ன உயிர்களின் முன்னே , மனிதர்கள் எல்லாம் எவளவு அற்பமானவர்களாக இருக்கிறோம் என்று bowerbird ஐ பார்த்தாலே புரிந்துவிடும்.
இதையெல்லாம் செய்வது ஆண் bowerbirds கள் தான். சரி, இந்த லோல் படுதல் எல்லாம் எதற்காக? இந்த எழு , எட்டு வருட உழைப்பு எதற்காக?
இதெல்லாம் செய்து வைத்து ' Settle ' ஆக இருந்தால் தால் தான், பெண் bowerbird வந்து குடும்பம் நடத்தும்.
நம்மூர் ஆண்கள் know how it feels ❤️
கட்டுரையாளர் : Kishoker Stanislas

கருத்துகள் இல்லை: