ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

பேரறிஞர் அண்ணா இன்று ஏன் தேவைப்படுகிறார்?


Mahalaxmi : *பேரறிஞர் அண்ணா யார்? மக்கள் மனதை எப்படி வென்றார்?*
*முதலமைச்சராக இருந்து மறைந்த அண்ணாவுக்கு நாளை (ஞாயிறு) 111-வது பிறந்தநாள். இந்தநாளை திமுக, அதிமுக, மதிமுக, என அனைத்து திராவிடக் கட்சிகளும் பேதங்களின்றி கொண்டாடி தீர்க்கின்றன.*
*இந்நிலையில் அவரை பற்றிய வரலாற்றை சுருக்கமாக விவரிக்கிறது இந்த தொகுப்பு.*
*காஞ்சிபுரத்தில் உள்ள ஒலி முகமது பேட்டையில் நெசவுக் குடும்பத்தில் பிறந்தவர் அண்ணா. குடும்ப ஏழ்மைக் காரணமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராக சிறிது காலம் பணியாற்றினார்*
*பின்னர் பிற்படுத்தப்பட்டோருக்கான கோட்டாவில் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ., எம்.ஏ. என இரண்டு பட்டங்களை பெற்று ஆங்கிலத்தில் புலமையடைந்தார்*
*பொது வாழ்வில் நாட்டம், கல்லூரி படிப்பை முடித்து ஆசிரியராக பணியை தொடங்கிய அண்ணாவுக்கு, பெரியாரின் சுயமரியாதை கொள்கைகள், கோட்பாடுகள் மீது ஈர்ப்பு வந்தன. அவரை சந்திக்க விரும்பிய அண்ணாவுக்கு திருப்பூரில் நடைபெற்ற செங்குந்தர் இளைஞர் மாநாடு வழி வகுத்து தந்தது.*
*அங்கு வைத்து முதன் முறையாக பெரியாரை சந்தித்த அண்ணா, தனது பொது வாழ்வு விருப்பத்தை கூறி அவருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.*

*கருத்து வேறுபாடு,1937-ம் ஆண்டு ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழுக்காக சிறை சென்றார் அண்ணா. இந்தியா சுதந்திரம் பெற்ற போது அதனை விமர்சித்து துக்க நாளாக கடைபிடிக்கும் படி கூறினார் பெரியார்.*
*அதில் அண்ணாவுக்கு உடன்பாடில்லை. மேலும், பெரியாருக்கு தேர்தல் அரசியலில் ஈடுபாடு இல்லாததை உணர்ந்த அண்ணா, பின்னாளில் திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தார். 1962-ம் ஆண்டு திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா, நாடாளுமன்றத்தில் தனது கனல் தெறித்த பேச்சின் மூலம் அகில இந்திய தலைவர்களின் கவனத்தை பெற்றார்.*
*அண்ணாவின் ஆங்கில புலமை வட இந்திய உறுப்பினர்களை வாயடைக்கச் செய்தது. ஆணித்தரமான வாதங்களை முன் வைத்து பேசினார். 1967-ல் திமுக தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. அண்ணா ஒரு மனதாக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.*
*பின்னர் தமிழ் பரப்பும் பணிகளை தொடங்கிய அண்ணா, எண்ணற்ற சீர்த்திருத்தங்களை கொண்டு வந்தார். எழுத்து நடை சீர்த்திருத்தத்துக்கு உதாரணமாக கூறவேண்டும் என்றால் உற்சவம் என்ற வார்த்தையை திருவிழா என்றும், ருசி என்ற வார்த்தையை சுவை எனவும் மாற்றியதை கூறலாம்.*
*இப்படி எண்ணற்ற மொழி சீர்த்திருத்தம் அண்ணா காலத்தில் நடைபெற்றது. மதராஸ் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றினார், பேருந்துகளை நாட்டுமையாக்கினார், சுயமரியாதை திருமணச் சட்டத்தை கொண்டு வந்தார், தமிழறிஞர்களை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு சிலைகள் நிறுவினார், எங்கும் எதிலும் தமிழுக்கு முதலிடம் தந்தார், எண்ணற்ற படங்களுக்கு கதை, வசனம், எழுதியுள்ளார்.*.
*இப்படி அண்ணாவின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். எளிமை, குட்டை உருவம், கலைந்த தலைமுடி, கசங்கிய வேட்டி சட்டை, கரகரத்த குரல், இவைகள் தான் அண்ணாவின் அடையாளங்கள். அண்ணாவின் எளிய தோற்றமும், பேச்சும், பண்பும் மக்களின் மனங்களை கவர்ந்தது. புற்றுநோயால் 1969 பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா மறைந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் கூடிய கூட்டம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.*

கருத்துகள் இல்லை: