செவ்வாய், 17 செப்டம்பர், 2019

4 திமுக கூட்டணி எம்.பி.க்கள் வெற்றி செல்லுமா.. கணேசமூர்த்தி , ரவிக்குமார்., பாரிவேந்தர், சின்ராஜ் ...

மின்னம்பலம : திமுக கூட்டணி  எம்.பி.க்கள் நால்வர் வெற்றி செல்லுமா?ஒரு கட்சியை சேர்ந்தவர் தேர்தல் நேரத்தில் இன்னொரு கட்சியில் சேர்ந்து நின்று எம்.எல்.ஏ.வாகவோ எம்.பி. ஆகவோ ஆகிவிடுகிறார். ஆனால் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அவர் தேர்தலில் நின்ற கட்சியின் பிரதிநிதியாக சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ பார்க்கப்பட்டாலும் மக்கள் மன்றத்தில் அவருக்கென ஒரு கட்சி, ஒரு கொடி இருக்கிறது.
இது சின்னங்கள் ஒதுக்கீடு சட்டத்தின்படி செல்லுமா, ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் இன்னொரு கட்சியில் நின்று போட்டியிடுவதே செல்லாது, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தேசிய மக்கள் சக்திக் கட்சியின் தலைவர் எம்.எல். ரவி தொடுத்த வழக்கில் சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைமைகளுக்கும் வேட்பாளர்களுக்கும் வென்றவர்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. எனவே இந்த வழக்கு இப்போது அரசியல் வட்டாரத்தில் முக்கியப் பேசுபொருளாகியிருக்கிறது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார், மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தி, கொமதேகவைச் சேர்ந்த ஏ.கே.பி. சின்ராஜ், ஐஜேகேவை சேர்ந்த பாரிவேந்தர் ஆகியோர் தேர்தலில் நின்று வெற்றிபெற்றார்கள். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் தென்காசியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார்.

இந்த ஐவரின் போட்டியிடலும் செல்லாது, நால்வரின் வெற்றியும் செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 17) விசாரணைக்கு வந்தநிலையில், தேர்தல் ஆணையம் கொடுத்த பதிலுக்குப் பிறகும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள், கட்சிகளின் தலைமைகள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
இது தொடர்பாக நாம் வழக்குத் தொடுத்த தேசிய மக்கள் சக்திக் கட்சியின் தலைவர் எம்.எல்.ரவியிடம் மின்னம்பலம். காம் தமிழின் முதல் மொபைல் தினசரி சார்பாகப் பேசினோம். நமது கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்தார்.
“சார்... முதலில் நான் ஒன்றை தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். இந்த வழக்குத் தொடுத்ததற்குக் காரணம் பொது நல அரசியலே தவிர, எங்கள் கட்சிக்கென்று வேறெந்த நோக்கமும் இல்லை. அதேபோல வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நிலையில், அங்கே புதிய நீதிக் கட்சித் தலைவர் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக வேட்பாளராக ஆகஸ்டு மாதம் நடந்த தேர்தலில் போட்டியிட்டார். நாங்கள் ஜூலை மாதத்திலேயே வழக்குத் தொடுத்துவிட்டதால் வேலூர் தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்தை இந்த வழக்கில் சேர்க்கவில்லை. அதனால்தான் இந்த முன்குறிப்பை சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறிச் சிரித்தவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.
”இந்த வழக்கின் தன்மை பற்றிச் சொல்லுங்கள்”
“ஒரு கட்சியைச் சேர்ந்தவர் இன்னொரு கட்சியின் சின்னத்தில் நிற்கக் கூடாது என்று சட்டத்தில் இருக்கிறது. வேட்பு மனுவில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான அங்கமான ஃபார்ம் பி-யில் சில முக்கியமான வரிகள் இடம்பெற்றிருக்கின்றன. ‘இவர் என் கட்சியைச் சேர்ந்தவர். என் கட்சியின் உறுப்பினர், என் கட்சியின் பதிவேட்டில் இவருடைய பெயர் இடம்பெற்றிருக்கிறது’ என்ற உறுதிமொழியை சம்பந்தப்பட்ட கட்சியின் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் சான்றளித்து கையெழுத்திட்டிருக்கிறார்கள்.
அதாவது ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியில் நிற்கின்ற நிலையில், ‘ரவிக்குமார் திமுகவின் உறுப்பினர்தான்’ என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதிமொழி அளித்து கையெழுத்து போட்டிருக்கிறார். அதேபோல டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுக கட்சியைச் சேர்ந்தவர்தான் என்று அதிமுக தலைமையின் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள். அந்த உறுதிமொழி தவறானதல்லவா? இது ஆள்மாறாட்டம் அல்லவா? இதை எதிர்த்துதான் வழக்குத் தொடுத்தேன்.”
“ வழக்கு உடனடியாக ஏற்கப்பட்டதா?”
”இல்லை வழக்கு உடனடியாக ஏற்கப்படவில்லை. இது தேர்தல் வழக்காகதான் போட முடியும் பொது நல வழக்காக போட முடியாது என்று உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்திலிருந்து மறுப்பு தெரிவித்தார்கள். இதற்கு நாங்கள் விளக்கமளித்தோம். ‘தேர்தல் வழக்கு என்றால் சம்பந்தப்பட்ட தொகுதியின் வேட்பாளரோ, வாக்காளரோதான் தொடர முடியும். ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி நபர், தனித்தனி வழக்காகவே தேர்தல் வழக்குத் தொடர முடியும். அப்படிப் பார்த்தால் அது சாத்தியம் அல்ல. எனவேதான் பொது நல வழக்காக தொடர்ந்தோம். இந்த சட்ட விதி மீறல்கள் மக்கள் பிரநிதித்துவ சட்டத்தில் உள்ளிடப்படவில்லை. எனவே எனக்கு ரிலீஃப் வேண்டுமென்றால் நான் பொதுநல வழக்குதான் தொடரமுடியும்’ என்று நாங்கள் அளித்த விளக்கத்தை அளித்து வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்று விசாரணைக்கு வந்தது”
இன்று வழக்கு விசாரணையில் என்ன நடந்தது?
“தேர்தல் ஆணையம் சார்பில் நிரஞ்சன் என்பவர் வாதிட்டார், ‘அவர்கள் சொல்வது சரிதான். ஆனால் தேர்தல் அதிகாரிக்கு வேட்புமனுவை ஏற்கும் நிராகரிக்கும் அதிகாரம் உண்டு’ என்று அவர் கூறினார். ஆனால் தேர்தல் அதிகாரிக்கும் சட்டவரைமுறைகள் இருக்கின்றன. அவர் சட்டத்துக்கு உட்பட்டுதான் வேட்பு மனுவை ஏற்கவோ நிராகரிக்கவோ முடியும்’ என்று எங்கள் தரப்பில் வாதிட்டோம்.
நீதிபதிகள், ‘நின்றவர்கள் சாதாரணமானவர்களாக இருந்தால் தேர்தல் ஆணையம் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், இன்னொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டவர்கள் பிரபலமான மக்கள்தான். அவர்களுடைய கட்சிகளும் பிரபலமான கட்சிகள்தான். அப்படியிருக்கும்போது தேர்தல் அதிகாரிக்கு அதெல்லாம் தெரியாது என்று சொல்வது ஏற்புடையதாக இருக்காது’ என்று சொல்லி மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர் நீதிபதிகள்.
அதன்படி விழுப்புரம் எம்பி ரவிக்குமார், பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர், நாமக்கல் எம்.பி. ஏ.கே.பி. சின்ராஜ், ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோருக்கு, நோட்டீஸ் அனுப்ப பதில் கேட்டிருக்கிறது உயர் நீதிமன்றம். மேலும் மேற்குறிப்பிட்டோரை தங்கள் கட்சியின் உறுப்பினர்கள் என்று சான்றொப்பம் அளித்த திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கும், சம்பந்தப்பட்ட தொகுதிகளின் தேர்தல் அலுவலர்கள், தேர்தல் ஆணையர் ஆகியோருக்கும் பதில் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது நீதிமன்றம். வழக்கை நவம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்கள். சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்களும், போட்டியிட்டவர்களும் என்ன பதில் சொல்கிறார்கள் என்று பார்ப்போம். வழக்கு போட்டபோதே சம்பந்தப்பட்ட கட்சிகளில் இருந்து சிலர் என்னைத் தொடர்புகொண்டு, ‘இதெல்லாம் வேண்டாம். விட்டுவிடுங்கள்’ என்று அன்பாக எச்சரித்தனர். ஆனால் இதற்கெல்லாம் நான் பயப்படப் போவதில்லை” என்று முடித்தார் தேசிய மக்கள் சக்திக் கட்சியின் தலைவர் ரவி.
-ஆரா

கருத்துகள் இல்லை: