சனி, 21 செப்டம்பர், 2019

மோடி- ஸ்டாலின்... பயந்தது யார்? சீன அதிபர் வரும்போது திமுகவின் போராட்டம் ... பயந்த பாஜக?

டிஜிட்டல் திண்ணை: மோடி- ஸ்டாலின்... பயந்தது யார்? மின்னம்பலம் :  மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.
“ஆளுநர் மாளிகை என்பது எப்போதுமே கட்சி அரசியலில் இருந்து விலகி நின்று, அரசியல் அமைப்பு சாசன கடமையைச் செய்யும் அலுவலகம் என்றுதான் பல சந்தர்ப்பங்களில் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் மோடி பிரதமர் ஆனதிலிருந்தே ஆளுநர் மாளிகையும் பகிரங்கமாகக் கட்சி அரசியல் செய்யும் ஒரு களமாகிப் போனது என்ற விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் இதற்கு முன்னர் ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் இரு அணிகளாக இருந்த எடப்பாடியையும், ஓ.பன்னீரையும் தன் இரு கைகளால் சேர்த்து வைத்த புகைப்படம் ஆளுநர் மாளிகையின் அரசியலுக்கு உதாரணமாக இருந்தது. அதே வரிசையில் இப்போது போட்டோ இல்லையே தவிர, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆளுநர் மாளிகைக்கு திமுக தலைவர் ஸ்டாலினை அழைத்துப் பேசியதும் பக்கா அரசியலாகவே கருதப்படுகிறது. ஆளுநர் மாளிகை மூலம் ஸ்டாலின் மிரட்டப்பட்டார் என்றும், மத்திய அரசுதான் ஸ்டாலினின் போராட்டத்தைக் கண்டு மிரண்டுவிட்டதாகவும் இருவேறு பார்வைகளில் இரு வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

20 ஆம் தேதி மாலை ஆளுநர் மாளிகைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அழைக்கப்பட்டார். அங்கே அவர் டி.ஆர்.பாலுவோடு செல்கிறார்.கொஞ்ச நேரத்தில் துரைமுருகன், கனிமொழி போன்றவர்கள் அங்கே விரைகிறார்கள். ஸ்டாலினோடு மட்டும் பத்து நிமிடங்கள் ஆளுநர் பேசுகிறார். அப்போது ஆளுநர் ஸ்டாலினிடம் சில விஷயங்களை நேரடியாகப் பேசியதாகச் சொல்கிறார்கள்.
’உங்கள் அரசியல் மத்திய அரசுக்குப் பிடிக்கவில்லை. உங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏராளமான முகாந்திரங்கள் இருக்கின்றன. உங்கள் குடும்பத்தினர் மீதே நடவடிக்கை எடுக்க பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன’ என்ற ரீதியில் ஸ்டாலினுக்கு சிற்சில விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. பத்து நிமிடங்கள் கழித்து டி.ஆர்.பாலுவும் ஆளுநரிடம் பேசியிருக்கிறார். அப்போது பழைய இந்தி எதிர்ப்புப் போராட்டம், அக்டோபர் மாதம் மோடி சீன அதிபருடன் மாமல்லபுரம் வருகை உள்ளிட்டவை குறித்தும் ஆளுநர் அவரிடம் பேசியிருக்கிறார்.
ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியே வந்ததுமே ஸ்டாலின் முகம் மாறியது. உடனடியாக அறிவாலயம் புறப்பட்டவர் அங்கே வைத்துதான், ‘போராட்டம் வாபஸ்’ என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதை ஆளுநர் மாளிகையின் ஊடகப் பிரிவினர் டிவியில் பார்த்து ஆளுநரிடம் உடனடியாக தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.
போராட்ட வாபஸ் அறிவிப்புக்குப் பின் இப்போது லண்டனில் இருக்கும் தன் மருமகன் சபரீசனிடம் போனில் பேசியிருக்கிறார் ஸ்டாலின். நடந்தது பற்றி சொல்லி அவர் ஏற்கனவே டெல்லியோடு தொடர்பில் இருந்துவரும் புள்ளியிடம் மீண்டும் பேசச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார். கனிமொழியையும் தொடர்புகொண்டு டெல்லியில் சில அசைன்மென்ட்டுகளை அவருக்குக் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல தனது ஆலோசகர் சுனிலையும் வரவழைத்து அவருக்கும் டெல்லி விவகாரங்கள் தொடர்பாக சில விஷயங்களைப் பேசி அவற்றைச் செயல்படுத்துமாறு உத்தரவிட்டிருக்கிறார். இவ்வளவும் ஸ்டாலின் செய்ததே அவருக்கு ஆளுநர் மாளிகையில் சொல்லப்பட்ட விஷயங்களை அடிப்படையாக வைத்துதான் என்கிறார்கள்.
இதன் பிறகுதான் ஆயிரம் விளக்கு உசேன் நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ‘எக்காலத்திலும் இந்தித் திணிப்பை ஏற்கமாட்டோம். திணிக்கிற இந்தியை எதிர்க்காமல் விட மாட்டோம். ஆளுநர் மாளிகைக்குச் சென்று வந்து நமது போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டவுடன் சில ஊடகங்கள் திட்டமிட்டு திமுக ஏதோ சரணடைந்துவிட்ட மாதிரி, பயந்து ஒதுங்கிவிட்ட மாதிரி ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. திமுக பனங்காட்டு நரி எந்த சலசலப்புக்கும் அஞ்சாது’ என்று பேசியிருக்கிறார் ஸ்டாலின்.
அப்படியென்றால் இந்த விவகாரத்தில் பயந்து ஒதுங்கியது மோடியா என்ற கேள்விகளும் முன் வைக்கப்பட்டு அதற்கான காரணங்களும் முன் விவாதிக்கப்படுகின்றன. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தமிழகம் வந்தார் பிரதமர் மோடி. மாமல்லபுரம் அருகே ராணுவக் கண்காட்சியைத் திறந்து வைக்க வந்தார் மோடி. அப்போது காவேரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு முற்றிலும் எதிராக இருப்பதாகத் தமிழக எதிர்க்கட்சிகள் மோடிக்குக் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை ஸ்டாலின் அறிவித்தார். ஸ்டாலின் அப்போது வைத்தீஸ்வரன் கோயிலில் நடைப்பயணத்தில் இருந்தாலும் சென்னையில் பிரதமர் மோடியின் தரைவழிப் பாதை முதல் ஆகாயப் பாதை அனைத்திலும் கருப்புக் கொடிகளும் கருப்பு பலூன்களும் பறக்கவிடப்பட்டன. ஐஐடிக்கும் அடையாறு புற்று நோய் வளாகத்துக்கும் இடையே மோடி பயணிப்பதற்காக பொதுப் பாதையைத் தவிர்த்து சுவர் இடிக்கப்பட்டு தனியாகவே ஒரு பாதை தற்காலிகமாக உண்டாக்கப்பட்டது. இதற்குக் காரணம் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்தான்.
ஒரு பிரதமருக்கு அவரது நாட்டில் உள்ள ஒரு மாநிலமே திரண்டு நின்று கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தது மோடிக்குக் கடுமையான கோபத்தை அப்போது ஏற்படுத்தியது. அதேபோல வரும் அக்டோபர் மாதம் சீன அதிபருடன் அதே மாமல்லபுரம் பகுதிக்கு வருகிறார் மோடி. இப்போதும் இந்தி எதிர்ப்பினைக் காரணம் காட்டி திமுக ஆரம்பிக்கும் ஆர்ப்பாட்டம், பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்டும் அளவுக்குக் கூடப் போகலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கைக் குறிப்புகளை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறது. 2018 இல் மோடி வந்தபோது உள்நாட்டு நிகழ்ச்சிகளுக்காக வந்தார். ஆனால் இப்போது சீன அதிபரோடு வருகிறார். வெளிநாட்டுத் தலைவரோடு நமது பிரதமர் வரும்போது தமிழகத்தில் அரசியல் ரீதியான எதிர்ப்பு எழுந்தால், அது சீனாவின் பார்வையில் மோடியைப் பலவீனப்படுத்திவிடும் என்று கருதுகிறார்கள் உளவுத் துறை அதிகாரிகள்.
சீன அதிபர் மாமல்லபுரம் வருவதை ஒட்டி சீன பாதுகாப்பு அதிகாரிகள் 21பேர் கொண்ட குழுவினர் சிங்கப்பூர் வழியாகச் சென்னை வந்தனர். பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். பின் நேற்று (செப்டம்பர் 20) இரவு சிங்கப்பூர் வழியாகப் புறப்பட்டுச் சென்றனர். பிரதமர் வரும் தேதி உறுதி செய்யப்பட்ட பின் மீண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இருதரப்பு குழுவினரும் ஆய்வு செய்வார்கள். இந்த ஒவ்வொரு அம்சங்களும் ஆளுநர் மாளிகைக்குச் சொல்லப்பட்டு வருகின்றன.
அதனால் எப்படியாவது திமுகவின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தினால்தான் அதைத் தொடர்ந்து மோடி வரும்போது அடுத்தடுத்த போராட்டங்களை திமுக முன்னெடுக்காமல் இருக்கும் என்பதற்காகத்தான் ஸ்டாலின் அழைத்து எச்சரிக்கப்பட்டிருக்கிறார். இது மோடிக்கு இருக்கும் சர்வதேச இமேஜுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்று பயந்து மத்திய அரசு செய்த ஏற்பாடுதான் என்கிறார்கள் திமுகவிலேயே சிலர்.
ஆளுநரின் வார்த்தைகளுக்கு ஸ்டாலின் பயந்தாரா, ஸ்டாலினின் கருப்புக் கொடிக்கு மோடி பயந்தாரா என்பதற்கான விடை திமுகவின் அடுத்தடுத்த போராட்ட வியூகங்களில்தான் இருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: