செவ்வாய், 16 ஜூலை, 2019

நாங்குநேரியில் குமரி அனந்தன் போட்டியா? அழகிரி பேச்சால் அதிர்ச்சி?

குமரி அனந்தன், நாங்குநேரி,அழகிரிதினமலர் : நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில், ''அத்தொகுதியில், குமரி அனந்தனை நிறுத்தினால் என்ன,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி பேசியுள்ளது, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த, 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், நாங்குநேரி தொகுதியில், வசந்தகுமார் வெற்றி பெற்றார். சமீபத்திய லோக்சபா தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், எம்.எல்.ஏ., பதவியை, வசந்தகுமார் ராஜினாமா செய்தார். அதனால், காலியாக உள்ள, நாங்குநேரி தொகுதியில், மீண்டும் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என, அக்கட்சி தலைவர்கள் விரும்புகின்றனர். ஆனால், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, 'நாங்குநேரி தொகுதியை, தி.மு.க.,வுக்கு விட்டுத் தர வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளார்.


திருச்சி, காங்., - எம்.பி., திருநாவுக்கரசர், 'உதயநிதி போட்டியிடுவதாக இருந்தால், காங்கிரஸ் விட்டுக் கொடுக்க தயார்' என்றார். எனவே, நாங்குநேரி தொகுதியில், உதயநிதி போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், சென்னை, சத்தியமூர்த்தி பவனில், காமராஜர் பிறந்த நாள் விழாவை ஒட்டி, 'பெருந்தலைவரின் பொற்கால ஆட்சி' என்ற, தலைப்பில் கருத்தரங்கம், நேற்று நடந்தது.

இதில், கே.எஸ்.அழகிரி பேசுகையில், ''பாரதிராஜாவின், முதல் மரியாதை படத்தில், 'எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்' என்ற, ஒரு வசனம் வரும். அதைப்போல, எனக்கும், ஒரு உண்மை தெரியாததால், இரவில் துாக்கம் வருவதில்லை. ''நாங்குநேரி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக, குமரி அனந்தனை நிறுத்தினால் என்ன என்ற கேள்வி, எனக்கு எழுகிறது,'' என்றார்.
போட்டி காங்கிரஸ்?
தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த, கராத்தே தியாகராஜன், கட்சியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். அவர், நேற்று தன் ஆதரவாளர்களுடன், காமராஜர் பிறந்த நாள் விழாவை, தனியாக கொண்டாடினார். பின், ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனையில், 'போட்டி காங்கிரஸ்' நடத்தலாமா என, விவாதித்ததாக கூறப்படுகிறது.< ரஜினியை மாட்டி விட பா.ஜ., முயற்சி!
அழகிரி அளித்த பேட்டி: புதிய கல்வி கொள்கை என, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது, மனுதர்மத்தை மீண்டும், மறு உருவில் எடுத்து வரும் முயற்சி. புதிய கல்வி கொள்கை என்பது, சமூக நீதிக்கு எதிரானது. நடிகர் சூர்யா, கல்வி கொள்கை பற்றி தெரிந்து தான் பேசியுள்ளார். எனவே, மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என, தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை பேச வேண்டாம்.

வேலுார் லோக்சபா தேர்தலில், பணநாயகம் வெற்றி பெறாது; ஜனநாயகம் தான் வெற்றி பெறும். பணம் கொடுத்து, ஓட்டுகளை விலைக்கு வாங்குவது எல்லாம் நீடிக்காது; வெற்றியும் பெற முடியாது. நான், ரஜினி ரசிகன். ரஜினிக்கு, நான் எந்த ஆலோசனையும் வழங்கவில்லை.
 ரஜினி, அரசியலுக்கு வந்தால், வெற்றி பெறும் களம் அல்ல, இது. அவர் வெற்றி பெறும் களம், கலைத்துறை. எனவே, அவர் அரசியலில் மாட்டிக் கொள்ளக் கூடாது. பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா, ரஜினியை மாட்டி விட்டு, அதில், அரசியல் செய்ய வேண்டும் என, நினைக்கிறார். அதனால், ரஜினியை அரசியலுக்கு அழைக்கிறார். இவ்வாறு, அழகிரி கூறினார்.

- நமது நிருபர் -<

கருத்துகள் இல்லை: