ஞாயிறு, 14 ஜூலை, 2019

திமுக காங்கிரசை விட்டு விலகுகிறதா ? அல்லது காங்கிரசே காங்கிரசை விட்டு விலகுகிறதா?

dmkதினமணி : மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தி தமிழகத்தில் வெற்றியை அறுவடை செய்து கொண்ட திமுக, தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியை கைகழுவும் போக்கை பின்பற்றுவது அக்கட்சியினர் மத்தியில் ஆதங்கமாக வெளிப்பட்டு வருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, அடுத்த மாதம் நடைபெறும் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியே போர்க்கொடி தூக்கியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது.
 நாடு முழுவதும் நடந்த 17-ஆவது மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகம், புதுச்சேரியில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் (புதுச்சேரி) ஆகிய கட்சிகளைக் கொண்ட மெகா கூட்டணி அமைக்கப்பட்டிருந்தது. அதை எதிர்த்து களம் கண்ட திமுக தலைமையிலான அணியில் இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மதிமுக, ஐஜேகே, கொமதேக ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

 542 மக்களவைத் தொகுதிகளில் 303 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைத்தபோதும், தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில் அக்கட்சி அங்கம் வகித்த அதிமுக கூட்டணி ஒரே ஒரு இடத்தை மட்டுமே பெற முடிந்தது. இதற்கு தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸையும் ராகுல் காந்தியையும் முன்னிலைப்படுத்தி திமுக தலைமையிலான அணி பின்பற்றிய நரேந்திர மோடி எதிர்ப்பு அரசியல் மட்டுமே காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
 தேர்தலுக்கு முன்பு நரேந்திர மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்துவதன் மூலம்தான் தமிழகத்தில் முழுமையான வெற்றியை அறுவடை செய்ய முடியும் என்று கணக்குப்போட்டு செயல்பட்ட திமுக, தான் போட்டியிட்ட 23 இடங்களையும் கைப்பற்றியது.
 ஆனால், தங்கள் வெற்றிக்கு அடித்தளமாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கும், ராகுல் காந்திக்கும் தேர்தலுக்குப் பிறகு திமுக முக்கியத்துவம் அளிக்கத் தவறிவிட்டதாகவே காங்கிரஸார் மத்தியில் ஆதங்கம் ஏற்பட்டுள்ளது. இதன்வெளிப்பாடாகவே, வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினரே போர்க்கொடி உயர்த்தியிருப்பதை கருத வேண்டியுள்ளது.
 கடந்த முறை வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் ஆதரவாளர் வீடுகளில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதே காரணம் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருந்ததுடன், திமுக வேட்பாளரான கதிர்ஆனந்த் உள்பட அந்த கட்சியினர் மூவர் மீது வழக்குப்பதிவும் செய்திருந்தது. எனினும், வேலூர் தொகுதியில் கதிர்ஆனந்த் மீண்டும் போட்டியிடும் நிலையில் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவான அசேன், மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் இரு நாள்களுக்கு முன் அளித்த புகார் மனுவில், கடந்த முறை வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தாக காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதுமே காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் இத்தகைய மனநிலை நிலவுவதாகவே அக்கட்சியினர் உறுதிப்படுத்துகின்றனர்.
 காங்கிரஸால் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட ராகுல் காந்தியால், தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவராகக் கூட முடியவில்லை. அவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற வேண்டும் என்றால் தற்போது அக்கட்சிக்கு கிடைத்துள்ள 52 இடங்களுடன் கூடுதலாக இரு இடங்கள் தேவைப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில், தேர்தலுக்கு முன்பு பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தி வெற்றியை அறுவடை செய்து கொண்ட திமுக, தேர்தலுக்குப் பிறகு அவரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக்க தனது பங்களிப்பாக வேலூர் தொகுதியை தங்கள் கட்சிக்கு விட்டுக் கொடுத்திருக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியினரின் ஆதங்கத்துக்கு முக்கியக் காரணமாகும்.
 மேலும், மக்களவைத் தேர்தலில் தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கான சிறுபான்மையினர் வாக்குகள் சிதறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தது அகில இந்திய மஜ்லிஸ் கட்சியாகும். அக்கட்சியின் தலைவரான அசாதுதீன் ஒவைசி கடந்த சில நாள்களுக்கு முன்பு வாணியம்பாடிக்கு வந்திருந்தபோது, வேலூர் தொகுதியில் முக்கிய வாக்கு வங்கியாக உள்ள இஸ்லாமிய சிறுபான்மையினர் வாக்குகளுக்காக துரைமுருகனும், அவரது மகன் கதிர்ஆனந்தும் நேரில் சந்தித்து ஆதரவு கோரியிருந்தனர். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காதது, காங்கிரஸாரை எரிச்சலூட்டி இருக்கிறது.
 கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டங்களில் திமுக உரிய முக்கியத்துவம் அளிக்காதது கூட்டணிக் கட்சிகள் மீதான திமுகவின் பார்வையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இது வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பதே அரசியல் வட்டாரத்தில் இப்போது அலசப்படும் கேள்வியாக உள்ளது

கருத்துகள் இல்லை: