புதன், 17 ஜூலை, 2019

குல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை நிறைவேற்ற தடை - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு


குல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை நிறைவேற்ற தடை - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
தீர்ப்பு வழங்கிய சர்வதேச நீதிமன்றம்மாலைமலர் : இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்கும்படி பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தி ஹேக் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் (48), இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’விற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும், மோதல்கள் நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் 2016ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கை அவசரமாக விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுக்கிறது. ஜாதவ், கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஈரானில் தனது சொந்த வியாபார நிமித்தமாக இருந்தபோது, பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டார் என்று இந்தியா தெரிவித்தது. அத்துடன் ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்ததை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டில் தி ஹேக் நகரில் செயல்பட்டு வருகிற சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா நாடியது.
இந்தியா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷனின் மரண தண்டனையை நிறுத்தி வைத்தது.
இருதரப்பிலும் விரிவான மனுக்கள் மற்றும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி முதல் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே, இருதரப்பு விவாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியானது.

இந்நிலையில், நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ளதால் இந்திய தூதரக அதிகாரிகள் வருகை தந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்தியாவுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது.

அதில், குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தியா சார்பில் வழக்கறிஞரை வைத்துக் கொள்ளலாம். உறவினர்களை  பார்க்கலாம் என உத்தரவிட்டது. இதையடுத்து, குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தான் ராணுவம் தூக்கிலிட முடியாது. இதன்மூலம் இந்தியாவின் சட்ட போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது

கருத்துகள் இல்லை: