புதன், 27 மார்ச், 2019

எடியூரப்பா டைரி : ஆயிரக்கணக்கான கோடிகள் .பண மழை.. . கர்நாடகாவை சூறையாடிய பாஜகா

Savukku · ஜேட்லி, கட்கரிக்கு தலா ரூ.150 கோடி; ராஜ்நாத்துக்கு ரூ.100 கோடி; அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு தலா ரூ.50 கோடி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல விவரங்கள், வருமான வரித் துறை வசமுள்ள எடியூரப்பாவின் டைரிக் குறிப்புகள் மூலம் அம்பலமாகியிருக்கின்றன பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூராப்பாவின் டைரிக் குறிப்புகளின் நகல்கள் வருமான வரித் துறையினர் வசமுள்ளன. ‘தி கேரவன்’ பத்திரிகைக்குக் கிடைத்த அந்த ஆவணங்கள் மூலம் பாஜகவின் தேசியத் தலைவர்கள், அக்கட்சியின் மையக் குழு மற்றும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு ரூ.1,800 கோடி வழங்கப்பட்டிருப்பது அம்பலமாகியிருக்கிறது.
கைமாறியதாகக் கருதப்படும் இந்தத் தொகை விவரத்தை கர்நாடகா மாநில சட்டப்பேரவை உறுப்பினருக்கான 2009 டைரியில் எடியூரப்பா தனது கைப்படக் கன்னட மொழியில் எழுதியிருக்கிறார். இந்த டைரிக் குறிப்புகளின் நகல்களை 2017இல் இருந்தே வருமான வரித் துறையினர் வைத்திருக்கின்றனர். பாஜகவின் மையக் குழுவுக்கு ரூ.1,000 கோடி; மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோருக்குத் தலா ரூ.150 கோடி; உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு ரூ.100 கோடி, பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்குத் தலா ரூ.50 கோடி ஆகிய தொகைகளை எடியூரப்பா செலுத்தியதாக அந்த டைரிப் பக்கங்களின் நகல்களில் முழு விவரம் இடம்பெற்றுள்ளது.

இத்துடன், கட்கரியின் மகனுடைய திருமணத்துக்கு ரூ.10 கோடியை எடியூரப்பா தந்ததாகவும் அந்த டைரிக் குறிப்பு தெரிவிக்கிறது. அதே வேளையில், எந்தப் பெயரையும் குறிப்பிடாமல், நீதிபதிகளுக்கு ரூ.250 கோடியும், வழக்கறிஞர்களுக்கு ரூ.50 கோடியும் (வழக்குகளுக்கான கட்டணத் தொகை) எடியூரப்பா செலுத்தியதாகவும் டைரிக் குறிப்பில் கணக்குகள் இடம்பெற்றுள்ளன.
பாஜக தலைவர்கள், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோருக்குக் கொடுக்கப்பட்ட தொகை விவரம் அனைத்தும் ஜனவரி 17, 2009 எனும் தேதிப் பகுதியிலும், பாஜக மையக் குழுவுக்கு அளிக்கப்பட்ட தொகை விவரம் ஜனவரி 18, 2009 எனும் தேதிப் பகுதியிலும் டைரியில் பதியப்பட்டுள்ளன. இந்தக் குறிப்பிட்ட நாள்களிலேயே டைரியில் விவரம் பதியப்பட்டதா அல்லது பிந்தைய நாள்களில் எழுதப்பட்டதா என்பதில் தெளிவு இல்லை. எடியூரப்பா மே 2008 முதல் ஜூலை 2011 வரை கர்நாடக முதல்வராக பதவி வகித்தார். ‘தி கேரவன்’ பத்திரிகைக்குக் கிடைத்த இந்த நகல்கள் ஒவ்வொன்றுமே எடியூரப்பாவின் கையொப்பத்தைக் கொண்டிருந்தன.

இந்த டைரிக் குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை 2017 ஆகஸ்டில் இருந்தே வருமான வரித் துறையும், மத்தியில் ஆளும் பாஜக அரசும் கையாண்டு வந்திருப்பதை, ‘தி கேரவன்’ பத்திரிகை வசமுள்ள தகவல்கள் தெளிவுபடக் காட்டுகின்றன. எடியூரப்பாவின் டைரிக் குறிப்புகளின் நகல்களை, கையெழுத்திடாத ஒரு கடிதத்துடன் சேர்த்து நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு வருமான வரித் துறை மூத்த அதிகாரி ஒருவர் அனுப்பியிருக்கிறார். இந்தியாவின் முதன்மை சட்ட – அமலாக்கத் துறை அமைப்பான அமலாக்கத் துறை இயக்குநரகம் மற்றும் பொருளாதாரக் குற்றங்களுக்கான மேலதிக விசாரணைகள் சாத்தியமா என்று அந்தக் கடிதத்தில் வருமான வரித் துறை மூத்த அதிகாரி கேட்டிருந்தார். ஆனால், ரூ.150 கோடி பெற்றதாகத் தன் பெயரும் அந்த டைரிக் குறிப்புகளில் இடம்பெற்றிருந்த நிலையில், அந்தக் கடிதத்துக்கு அருண் ஜேட்லி எந்தப் பதிலும் அளிக்காமல் கமுக்கமாக இருந்தார். அருண் ஜேட்லி 2004 முதல் 2013 வரையில் கர்நாடக பாஜகவுக்குப் பொறுப்பு வகித்ததும், அந்தக் காலக்கட்டத்தில் அம்மாநிலத்தில் நடந்த தேர்தல்களை கட்சி சார்பில் அவர்தான் கவனித்துக்கொண்டார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாகக் கருத்து கேட்பதற்காக எடியூரப்பா, அருண் ஜேட்லி, நிதின் கட்கரி, ராஜ்நாத், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை ‘தி கேரவன்’ தொடர்புகொண்டது. ஆனால், இந்தச் செய்திக் கட்டுரை இங்கே பதிவேற்றப்படும் வரை அவர்களில் எவருமே பதிலளிக்கவில்லை. ஒருவேளை அவர்கள் இனி பதிலளித்தால், அவை இந்தச் செய்திக் கட்டுரையில் பின்னர் சேர்க்கப்படும்.
பாஜகவின் மத்திய மேலிடத் தலைவர்கள் மட்டுமின்றி, 2008இல் எடியூரப்பாவின் முதல்வர் பதவியைக் காப்பாற்றிய கர்நாடக மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பணம் வழங்கப்பட்ட விவரம் அடங்கிய பட்டியலும் டைரிக் குறிப்புகளுள் இடம்பெற்றுள்ளது. அந்த ஆண்டு நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எடியூரப்பாவுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் அல்லது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளில் போட்டியிட்டு வென்ற உள்ளூர் தலைவர்கள் அல்லது சுயேச்சையாக வென்றவர்களின் ஆதரவை நாடவேண்டிய நிலை உருவானது. அப்போது, வெற்றி பெற்ற ஆறு சுயேச்சை உறுப்பினர்களில் ஐந்து பேர் எடியூரப்பாவுக்கு ஆதரவு அளித்தனர். பின்னர், அவர்களைத் தனது அமைச்சரவையிலும் சேர்த்துக்கொண்டார். எடியூரப்பா ஆட்சி அமைக்க உதவிய உள்ளூர் தலைவர்களில் பலரது பெயர்களும் டைரியில் இடம்பெற்றுள்ளன.
‘தி கேரவன்’ பத்திரிகைக்குக் கிடைத்த நகல்களின் பக்கங்களில் உள்ள டைரிக் குறிப்புகள், “என்னை முதல்வர் ஆக்கியதில் கலி ஜனார்த்தன ரெட்டிதான் மிகவும் முக்கியானவர்” என்று தொடங்கப்பட்டு, அதில் எடியூரப்பாவின் கையொப்பமும் இடப்பட்டிருந்தது. அதன் அடுத்த வரிகளில், “ஜனராத்தன ரெட்டி அளித்த பணம் யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது என்பதன் விவரங்கள்” என்றிருந்தது. அதில், உள்ளூர் தலைவர்கள் எட்டுப் பேருக்கு ரூ.150 கோடி கொடுக்கப்பட்டதற்கான விவரம் பதியப்பட்டிருந்தது. 2008 தேர்தலில் சுயேச்சையாக வென்றவரும், எடியூரப்பா அமைச்சரவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராக இருந்தவருமான பி.எம். நரேந்திர சுவாமி; காங்கிரஸ் கட்சியில் நின்று வெற்றி பெற்று, எடியூரப்பா அமைச்சரவையில் மீன் வளம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகப் பதவி வகித்த ஆனந்த் அஸ்னோதிகர் வசந்த்; மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் நின்று வெற்றி பெற்று, நகராட்சித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பாலச்சந்திர லட்சுமண ராவ் ஜாராகிஹோலி உள்ளிட்டோரின் பெயர்கள் எடியூரப்பாவின் டைரியில் இடம்பெற்றிருந்தன. அஸ்னோதிகர் வசந்த் பின்னர் பாஜகவிலிருந்து விலகி 2018 ஜனவரியில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இணைந்தார். எட்டு தலைவர்களில் ஏழு பேரின் பெயர்களுக்குப் பக்கத்தில் ரூ.20 கோடி என்று டைரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாராகிஹோலியின் பெயருக்குப் பக்கத்தில் ரூ.10 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எட்டுப் பேரின் கருத்துகளை அறிய, அவர்களை ‘தி கேரவன்’ தொடர்புகொண்டது. ஆனால், எவரிடமிருந்தும் பதில் இல்லை.

எடியூரப்பாவும் 2011இல் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சந்தித்து, கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். அரசு நிலங்களை ஒதுக்கியதில் முறைகேடு மற்றும் சுரங்க ஊழலில் லஞ்சம் பெற்றதற்காக கர்நாடக லோக் ஆயுக்தா மூலம் விசாரிக்கப்பட்டார். அந்த ஊழல் குற்றச்சாட்டுகளால் அவரது அரசு கவிழ்ந்து, அதே ஆண்டு ஜூலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். பின்னர், அக்டோபரில் லோக்ஆயுக்தா சிறப்பு நீதிமன்றம் முன்பு சரணடைந்தார். பாஜகவால் அவர் நீக்கப்பட்டார். பின்னர், அவர் கர்நாடக ஜனதா பக்‌ஷா கட்சிக்குப் புத்துயிரூட்டினார். அந்தக் கட்சி 2008இல் முதன்முதலில் பத்மநாப பிரசன்ன குமரால் பதிவு செய்யப்பட்டது. ஆனால், மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு 2014இல் எடியூரப்பாவை மோடியும் அமித் ஷாவும் மீண்டும் அழைத்துக்கொண்டனர். பாஜகவுக்கு கர்நாடக ஜனதா பக்‌ஷா கட்சி ஐக்கியமானது. பின்னர், இந்த ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து எடியூரப்பா விடுவிக்கப்பட்டார். 2018 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் ஆன எடியூரப்பா, தற்போது மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்.
‘தி கேரவன்’ வசம் கிடைத்த டைரிக் குறிப்புகளில், “என்னிடம் அளிக்கப்பட்ட / செலுத்தப்பட்ட பணம்” என்பதன் கீழ் 26 பேர் அடங்கிய பட்டியலும், அவர்களிடமிருந்து ரூ.5 கோடியிலிருந்து ரூ.500 கோடி வரை பெறப்பட்ட விவரமும் உள்ளன. இந்தக் குறிப்புகளின்படி, எடியூரப்பாவிடம் நன்கொடையாக மொத்தம் ரூ.2,690 கோடி அளிக்கப்பட்டுள்ளது. பணம் அளித்தவர்கள் பட்டியலில், பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மாநில அமைச்சர்களான பசவ்ராஜ் பொம்மை, அரவிந்த் லிம்பாவலி மற்றும் முருகேஷ் நிராணி, பாஜக தலைவர்கள் கே.சுப்ரமணிய நாயுடு; பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஜெ.கிருஷ்ண பலேமர், சி.சி.பாட்டில் மற்றும் லக்‌ஷண் சவாடி உள்ளிட்டோரின் பெயர்களும் அடங்கும். இந்த மூன்று எம்.எல்.ஏ.க்களும் கர்நாடக சட்டப்பேரவையில் ஆபாச வீடியோக்கள் பார்த்தபோது சிக்கி கவனம் ஈர்த்தவர்கள். இந்த நன்கொடையாளர்களை பலரையும் தொடர்புகொண்டு ‘தி கேரவன்’ பேசியது. ஆனால், பெரும்பாலானோர் பதிலளிக்க மறுத்துவிட்டனர். ஒரு சிலர் தங்களுக்கு நன்கொடை பற்றி எதுவும் தெரியாது என்றனர். எடியூரப்பா குடும்பத்தினரின் பிரேரணா அறக்கட்டளை ரூ.500 கோடி அளித்ததாக அந்தப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடியூரப்பாவின் மகள் எஸ்.ஒய்.உமாதேவியோ அத்தகைய தொகை எதையுமே அறக்கட்டளை செலுத்தவில்லை என்று மறுத்துவிட்டார்.
ஆவணங்கள் சிக்கியது எப்படி?
கர்நாடகாவில் கடந்த ஆகஸ்ட் 2017இல் காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் இல்லத்தில் சோதனையிட்டபோதுதான் இந்த டைரிப் பக்கங்களின் நகல்களை வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்ததை ‘தி கேரவன்’ உறுதி செய்துள்ளது. அந்த டைரியின் பக்கங்களின் நகல்களை சிவகுமாரிடம் நாங்கள் காட்டினோம். அவை தனது இல்லத்திலிருந்து 2017ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டவைதான் என்பதை அவர் உறுதி செய்தார். ஆனால், மேலதிகத் தகவல்களையோ கருத்துகளையோ தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். அப்போது நடந்த வருமான வரித் துறை சோதனை மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக முழு விவரம் அறிந்த மூத்த கர்நாடக அரசியல்வாதி ஒருவரும் டைரிக் குறிப்புகளை எழுதியது எடியூரப்பாதான் என்பதை ‘தி கேரவன்’ பத்திரிகையிடம் உறுதி செய்தார். “இது 100 சதவீதம் அவருடையதுதான். இதில் சந்தேகமே வேண்டாம்” என்றார் அவர்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு, டைரி பக்கங்களை வருமான வரித் துறை மூத்த அதிகாரி அனுப்பியபோது, எடியூரப்பாவின் கையெழுத்தை உறுதி செய்யும் விதமாக இரண்டு ஆவணங்களையும் கடிதக் குறிப்புடன் இணைத்திருந்தார். முதல் ஆவணம், 2017 ஜனவரியில் மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்தின் தலைமை பொறுப்பில் இருந்த சுஷில் சந்திராவுக்கு எடியூரப்பா எழுதிய கடிதம். அதில், சிவகுமாரின் “முறைகேடுகள் மற்றும் ஊழல்” தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு எடியூரப்பா கேட்டுக்கொண்டிருந்தார். இன்னொரு ஆவணம், 2013 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தேர்தல் ஆணையத்திடம் எடியூரப்பா சமர்ப்பித்த தேர்தல் அறிவிக்கை. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித் துறை மேலதிக நடவடிக்கை ஏதேனும் எடுப்பது குறித்து முடிவு செய்துள்ளதற்கான சுவடே இல்லை. சம்பந்தப்பட்ட துறையிடம் ‘தி கேரவன்’ தொடர்புகொண்டு கேட்டது. ஆனால், இந்தச் செய்திக் கட்டுரை பதிவேற்றம் செய்யப்படும் இந்நேரம் வரை அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அப்படி அவர்கள் ஏதேனும் பதில் அளித்தால், அந்த விவரம் பின்னர் வெளியிடப்படும்.
தனக்கும் பாஜகவுக்கும் இடையே பிளவு ஏற்பட்டு, கர்நாடக ஜனதா பக்‌ஷா கட்சியை புதுப்பிக்கும் தருணத்தில், எடியூரப்பா தனது டைரியில் இந்த விவரம் அனைத்தையும் பதிந்துள்ளதாக வருமான வரித் துறை மூத்த அதிகாரியின் கடிதக் குறிப்பில் தெரிவித்துள்ளார். அந்தக் காலகட்டத்தில், எடியூரப்பாவுக்கும், ஆனந்த் குமார் (இவர் 2018இல் இறந்துவிட்டார்) மற்றும் கே.எஸ்.ஈஸ்வரப்பா போன்ற கர்நாடக பாஜக மூத்த தலைவர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்ததாக உள்ளூர் ஊடகங்கள் மிகப் பெரிய அளவில் செய்திகளைப் பதிவு செய்தன. அப்போது, இவர்களது உதவியாளர்கள் தங்கள் எதிர்த் தரப்பினரின் ஆவணங்களைக் கைப்பற்றும் உள்ளடி வேலைகளில் தீவிரமாக ஈடுப்பட்டதாக உள்ளூர் செய்தியாளர்கள் செய்தி வெளியிட்டனர். குறிப்பாக, ஈஸ்வரப்பாவின் உதவியாளரைக் கடத்த முயன்றதாக எடியூரப்பாவின் தனி உதவியாளர் மீது புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில்தான், எடியூரப்பாவின் டைரியை அவரது தனி அலுவலர்களில் ஒருவர் கைப்பற்றினார். அது, பின்னர் ஆனந்த் குமார் போன்ற தலைவர்களைச் சென்றடைந்தது என்று அந்த வருமான வரித் துறை மூத்த அதிகாரியின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அந்த நகல்களில் ஒன்றை டி.கே.சிவகுமார் மற்றும் இதர தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் சரியான இடங்களில் இப்பிரச்சினையை எழுப்புவதற்காக அவர்களிடம் நகல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எடியூரப்பாவுடன் நல்லுறவு இருந்ததால் டைரிக் குறிப்புகள் குறித்த விவரங்களை ஊடகங்களிடம் ஆனந்த் குமார் அளிக்கவில்லை” என்றும் அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேற்கு மாநிலங்களில் முக்கியமான மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்றபோது, குஜராத்தில் தனது கட்சியை பிளவுபடுத்தும் பாஜகவின் வேலைகளை நிறுத்தும் முயற்சியில் சிவகுமார் ஈடுபட்டிருந்த நேரத்தில், 2017 ஆகஸ்ட் மாதத்தில் அவரது வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். குஜராத்திலிருந்து 44 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுவந்து, பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கவைத்தார் சிவகுமார். அதன் அவர்கள் அணி மாறி வாக்களிக்க விடாமல் தடுத்தார். அப்போது, சிவகுமாரின் பணபலமும் ஆள்பலமும் தேசிய அளவில் பேசப்பட்டது. காங்கிரஸின் அகமது படேலின் வெற்றியைத் தக்கவைப்பதில் வெற்றி கண்ட சிவகுமார் உடனடியாக வருமான வரித் துறையினரின் சோதனைகளுக்கு ஆளானார். இந்த நடவடிக்கையை காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

வருமான வரித் துறை மூத்த அதிகாரி தனது குறிப்பில் மேலும் கூறும்போது, “டி.கே.சிவகுமாரிடம் வருமான வரித் துறையினர் டைரி குறித்து விசாரிக்க மட்டுமே செய்தனர். அந்த டைரியில் இடம்பெற்றிருந்த நபர்கள் குறித்து மேலதிக வாக்குமூலம் எதையும் பெறவில்லை. அத்துடன், சட்டப்படி அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸும் அனுப்பப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார். பாஜக தலைவர்களின் நலனை வருமான வரித் துறை பாதுகாத்ததாகக் குறிப்பிட்டுள்ள அந்த மூத்த அதிகாரி, “இந்த விவகாரத்தில் கர்நாடக மற்றும் டெல்லி மேலிட பாஜக தலைவர்கள் தொடர்பு இருந்ததால், இதுநாள் வரை மேலதிக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தை ஜேட்லியிடம் கொண்டு சென்றபோது, இது தொடர்பாக அமலாக்கத் துறை இயக்குநரகம் அல்லது வேறு ஏதேனும் உரிய அமைப்புகள் மூலமாக டைரிக் குறிப்புகள் மீதான மேலதிக விசாரணை தேவை என்று அந்த வருமான வரித் துறை மூத்த அதிகாரி சுட்டிக்காட்டியிருந்தார். சட்ட ஆலோசனையை வருமான வரித் துறை நாட வேண்டும் என்ற அந்த அதிகாரி, “அசல் டைரி கைப்பற்றப்பட்டுள்ளதா, அமலாக்கத் துறை இயக்குநரகம் அல்லது வேறு ஏதேனும் உரிய அமைப்புகள் மூலமாக மேலதிக விசாரணை தேவையா என்பதை அறிவதுடன், டி.கே.சிவகுமார் மீது அமலாக்கத் துறை இயக்குநரகம் தொடர்ந்த வழக்கின் ஒரு பகுதியாக இந்த டைரியையும் விசாரிக்க வேண்டுமா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும். எனவே, இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனைகள் பெற்று, டைரியின் உள்ளடக்கத்தையும் விசாரணைக் கண்காணிப்புக்குள் கொண்டுவர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி, தங்கள் கட்சியில் சேர்ந்துகொள்ளுமாறு சிவகுமாரை பாஜக தலைவர்கள் மிரட்டியதாகவும் அந்த அதிகாரி தனது கடிதக் குறிப்பில் தெரிவித்துள்ளார். “நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கூட்டணியிலிருந்து விலகி பாஜகவில் சேருவதற்கு வருமான வரித் துறையினரின் மூலமாக அழுத்தம் தரப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.
பாஜக அரசியல்வாதி ஷோபா கரந்தலாஜேவை எடியூரப்பா திருமணம் செய்துகொண்டார் எனவும் ஒரு பக்கத்தில் இடம்பெற்ற டைரிக் குறிப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக ஜனதா பக்‌ஷா கட்சியின் நிறுவனர் பத்மநாப பிரசன்ன குமார் 2016இல் ஒரு சர்ச்சையைக் கிளப்பினார். ஒரு செய்தியாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்த அவர், கேரளாவில் ரகசியமாக நடந்த நிகழ்ச்சியில், ஷோபாவை எடியூரப்பா திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவித்தார். ஊடகங்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட பிரசன்னா மீது ஒரு ரசானயக் கலவையும் வீசப்பட்டது. பிரசன்னா வெளியிட்ட செய்தியை எடியூரப்பாவோ அல்லது ஷோபாவா மறுக்கவில்லை என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
‘தி கேரவன்’ வசமுள்ள எடியூரப்பாவின் கைப்பட எழுதப்பட்ட அந்த டைரிக் குறிப்பில், “என் மனைவி மிர்தாதேவி இறந்த பிறகு நான் தனிமையில் மிகுந்த அவதிக்கு ஆளானேன். எனவே ஷோபாவைத் திருமணம் செய்துகொண்டேன். கேரளத்தின் சோட்டானிக்கரையில் உள்ள பகவதி கோயில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. எடியூரு சித்தலிங்காவின் கயா வச்சா மனசா பெயரைச் சொல்லி, ஷோபாவை என் மனைவியாக ஏற்றுக்கொண்டேன்” என்று பதியப்பட்டுள்ளது. ‘தி கேரவன்’ பத்திரிகையால் பிரசன்னாவைத் தொடர்புகொள்ள முடியவில்லை. தொலைபேசி வாயிலாகத் தனது பதிலை அளித்த ஷோபா, “அந்த டைரியை பைத்தியக்காரர்கள் எவரேனும்தான் எழுதியிருக்க வேண்டும்” என்று மட்டும் சொல்லி தொடர்பைத் துண்டித்துவிட்டார். அதைத் தொடர்ந்து அவரிடம் தொலைபேசியில் பேச முயற்சித்தும், அவர் அழைப்புகளை எடுக்கவில்லை.
இதில் வியப்புக்குரிய அம்சம் என்னெவென்றால், சிவகுமாரின் இல்லத்தில் சோதனை நடத்தி, எடியூரப்பாவின் டைரி நகல்கள் பறிமுதல் செய்யப்பட்ட வருமான வரித் துறை சோதனைக்குத் தலைமை தாங்கிய மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத் தலைவர் சுஷில் சந்திரா இப்போது இந்தியத் தேர்தல் ஆணையராக இருக்கிறார். எடியூரப்பாவின் கையொப்பத்துக்கு சாட்சியாக அவரது கடிதம் ஒன்றை ஜேட்லிக்கு அந்த அதிகாரி இணைத்து அனுப்பியிருந்தார். எடியூரப்பாவின் அந்தக் கடிதம் சுஷில் சந்திராவுக்கு அனுப்பப்பட்டது. இந்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெறவிருந்த சுஷில் சந்திராவுக்கு பிப்ரவரி மாதம் பதவி உயர்வு அளித்தது மோடி அரசு. வருவாய்த் துறைகளிலிருந்து தேர்தல் ஆணையத்துக்கு நியமிக்கப்பட்ட இரண்டாவது அதிகாரி சுஷில் சந்திரா.
நிலீனா எம்.எஸ், ஆதிரா கோனிக்கரா
நன்றி: கேரவான்
https://caravanmagazine.in/politics/yeddyurappa-diaries-bjp-1800-crore-payouts-jaitley-rajnath-gadkari-advani-crores

கருத்துகள் இல்லை: