வியாழன், 28 மார்ச், 2019

சேலத்தில் 90-க்கும் மேற்பட்ட பெண்கள் மீது பாலியல் வன்முறை .. பொள்ளாச்சி பாணியில் இன்னொரு கொடுரம்

இளங்கோமணிகண்டன்vikatan.com - எம்.விஜயகுமார் - வீ கே.ரமேஷ் :
சேலம் கொண்டலாம்பட்டி காவல்துறையினர் 25 பேருக்கும் மேற்பட்டவர்களை விசாரணைக்கு அழைத்து வந்து விசாரித்தபோது இந்த  கேங்க் 90-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அதையடுத்து 5 பேர் மீது வழக்கு பதிவு செய்வதாகவும், வழக்குக்கு சம்பந்தமில்லாதவர்களிடம் 50,000 முதல் 1,50,000 வரை பேரம் பேசி பணத்தை வாங்கிக் கொண்டு அனுப்பியிருக்கிறார்கள்.
சமீபத்தில் பொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தமிழகத்தையே உலுக்கியது. அது பற்றிய பேச்சே இன்னும் அடங்காத நிலையில், சேலத்தில் இரவு நேரத்தில் தனியாகச் செல்லும் பெண்களையும், காதலர்களையும் வழிமறித்து காதலன் கண் எதிரே காதலியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ, புகைப்படம் எடுத்து பணம், செயின் பறித்திருக்கிறது இந்த கேங்க். இவர்கள் பல ஆண்டுகளாக கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள்.
சம்பந்தப்பட்ட கொண்டலாம்பட்டி காவல்துறைக்கு தெரிந்தும் காசு வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. கடந்த வாரம் ஒரு பெண் புகார் கொடுத்ததையடுத்து இச்சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது. இவர்களால் 90-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியே கசிந்துள்ளன.

இதுபற்றி சமூக ஆர்வலர் ஒருவர், “சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கொண்டலாம்பட்டி செல்லும் பைபாஸ் சாலையில் திருமகள் பைபாஸ் அடுத்து பட்டர்ஃப்ளை பாலம் உள்ளது. இப்பாலம் பட்டர்ஃப்ளை வடிவத்தில் இருப்பதால் இப்பாலத்தின் அடியில் இருள் சூழ்ந்து புதர் மண்டிக் கிடக்கும். சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இரவு நேரத்தில் இப்பாலத்தின் வழியாக டூவிலரில் தனியாக  வீட்டுக்குச் செல்லும் பெண்களையும், இரவுக் காட்சி சினிமா பார்த்துவிட்டு கல்லூரி விடுதிக்குச் செல்லும் காதலர்களையும் குறி வைத்து இளங்கோ, மணிகண்டன், சுபாஷ், தினேஷ், மணி மற்றும் பலர் சேர்ந்த  கேங்க் செயல்பட்டு வந்திருக்கிறது.
இவர்கள் பாலத்தில் பதுங்கி இருந்து வழிமறித்து பெண்களை பாலத்திற்கடியில் தூக்கிச் சென்று கூட்டு வன்கொடுமை செய்து புகைப்படம், வீடியோ எடுத்துக்கொண்டு அவர்களிடம் இருக்கும் நகை, பணங்களை பறித்து துரத்தி விடுவது வாடிக்கையாகச் செய்திருக்கிறார்கள்.
கடந்த வாரம் பவானியை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெண் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் பெங்களூரிலிருந்து சேலத்துக்கு வந்திருக்கிறார். சேலத்திலிருந்து தன் உறவுக்கார வாலிபரோடு பவானியில் உள்ள தன் வீட்டுக்கு இரவு 11:00 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அப்போது  பட்டர்ஃப்ளை பாலத்தில் பதுங்கி இருந்த இளங்கோ தலைமையிலான கேங்க் அவர்களை வழிமறித்து வாலிபரைத் தாக்கி அவரோடு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். அவர் சாதுர்யமாக தன்னிடம் இருந்த நகையைக் கொடுத்துவிட்டு ஏ.டி.எம்மில் பணம் எடுத்துத் தருவதாக அழைத்து வந்து கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
சுபாஷ்தினேஷ்
அதையடுத்து, கொண்டலாம்பட்டி காவல்துறையினர் 25 பேருக்கும் மேற்பட்டவர்களை விசாரணைக்கு அழைத்து வந்து விசாரித்தபோது இந்த கேங்க் 90-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அதையடுத்து, 5 பேர் மீது வழக்கு பதிவு செய்வதாகவும், மீதி வழக்குக்கு சம்பந்தமில்லாதவர்களிடம் 50,000 முதல் 1,50,000 வரை பேரம் பேசி பணத்தை வாங்கிக்கொண்டு அனுப்பியிருக்கிறார்கள்.
இச்சம்பவத்தில் ஆளுங்கட்சியின் வாரிசுகள் இருப்பதால் தகவலை யாருக்கும் தெரியாமல் மறைத்து இளங்கோ உட்பட 5 பேர் மீது வெறும் செயின் பறிப்பு வழக்கு மட்டும் போட்டிருக்கிறார்கள். இது பத்திரிகைகளுக்கு தெரிய வந்ததும். பாலியல் வன்கொடுமை வழக்கும் சேர்த்திருக்கிறார்கள்” என்றார்.
ஸ்டேஷன்
இதுபற்றி கொண்டலாம்பட்டி இன்ஸ்பெக்டர் புஷ்பராணியை காவல்நிலையத்தில் சந்தித்தோம், “நான் குற்றவாளிகளை ரிமாண்ட் செய்ய வேண்டும்.  என்னை ரொம்ப அசிங்கப்படுத்தீட்டீங்க. உங்களிடம் பேச எனக்கு நேரம் இல்லை” என்றவரிடம் செல்பொன் நம்பரை கேட்டதற்கு, நான்கு எண்களை மட்டும் கூறி விட்டு அருகில் இருந்த காவலரை பார்த்து, “யோவ் இவங்களிடம் நம்பரை சொல்லி தொலைய்யா…” என்று கோபத்தால் கொதித்தார். அதையடுத்து அந்தக் காவலர்கள் நம்மைக் காவல் நிலையத்திலிருந்து வெளியே போகச் சொல்லி மிரட்டியதோடு வீடியோவும் எடுத்தார்கள்.
இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணைக்கு அழைத்துச் சென்று வெளியே வந்திருப்பவர்களிடம் விசாரித்தபோது, “சார் சத்தியமா எங்களுக்குக்கும் இச்சம்பவத்துக்கும் சம்பந்தம் இல்லை. நாங்க எல்லோரும் ஒரே ஊர் என்பதால் எங்களை விசாரணைக்கு அழைத்துச் சென்று தர்ம அடி கொடுத்தார்கள். பிறகு சம்பந்தமில்லை என்பது தெரிந்ததும் 11 பேரிடம் 50,000 முதல் 1,50,000 வரை வாங்கிக் கொண்டு வெளியே விட்டார்கள். இதை யாரிடமாவது சொன்னால் வழக்கில் சேர்த்து விடுவதாக மிரட்டி இருக்காங்க. அதனால் நான் வெளிப்படையாகப் பேச முடியாது” என்றார். ஒரு வாரம் கடந்த நிலையில் இன்னும் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
vikatan.com

கருத்துகள் இல்லை: