vikatan.com-jayavel-b :
ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது
எட்டிப்பார்த்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மயங்கிப் பலியானார். அவரைக்
காப்பாற்றப் போன அவரின் மகன்கள் இருவர், அருகில் வசிப்பவர்கள், வேடிக்கை
பார்க்க எட்டிப் பார்த்தவர்கள் என மொத்தம் ஆறு பேரை காவு வாங்கி இருக்கிறது
அந்த செப்டிக் டேங்க். இந்தச் சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே விநாயக நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (54).
இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கிருஷ்ணமூர்த்தி, தனது
வீட்டுக்கு பக்கத்தில் மூன்று குடியிருப்பு வீடுகளைக் கட்டி வாடகைக்கு
விட்டுள்ளார். வீட்டின் கழிவறை நிரம்பியதால் அதே பகுதியைச் சேர்ந்த கழிவு
நீர் அகற்றும் லாரி மூலம் கழிவு நீர் அகற்றினர். அப்போது கிருஷ்ணமூர்த்தி
கழிவுநீர் தொட்டியில் எட்டிப்பார்த்துள்ளார்.
அவரை விஷவாயு தாக்கியதால் மயங்கி தொட்டியின் உள்ளே விழுந்துள்ளார்.
இதைக் கண்ட அவரின் மகன் கார்த்திக் அவரைக் காப்பாற்ற முயன்று அந்த டேங்கில்
இறங்க அவரும் உள்ளே மயக்கமடைந்து விழுந்தார். அருகே வாடகை வீட்டில்
வசித்து வருபவர்களான பரமசிவம், சுரதா பிசி ஆகியோர் அவர்களைக் காப்பாற்ற
அடுத்தடுத்து செப்டிக் டேங்கில் இறங்கினர். அவர்களும் விஷவாயு
தாக்குதலுக்கு உள்ளானார்கள். அந்த வழியாகச் சென்ற ஆரணியைச் சேர்ந்த
லட்சுமிகாந்த் (22) இந்தச் சம்பவங்களைப் பார்த்து அவரும் தொட்டியின் அருகே
சென்று எட்டிப் பார்த்தார் அவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.
வெகுநேரமாகியும் கணவர் வீட்டுக்கு வராததால் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி
லதா, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தன் மகன் கண்ணனை எழுப்பி அப்பாவைக்
கூட்டி வரச் சொல்லி அனுப்பியுள்ளார். கழிவுநீர் தொட்டி அருகில் சென்ற
அவரும் விஷவாயு தாக்கி அங்கேயே மயக்கமுற்று இறந்துவிட்டார். இதைக் கண்ட
அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல்
கொடுத்துள்ளனர். இதையடுத்து, தீயணைப்பு படையினர் இறந்தவர்களின் உடல்களை
மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ
இடத்தில் காஞ்சிபுரம் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி, ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி
ராஜேஷ் கண்ணா ஆகியோர் விசாரணை செய்து வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக