ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

பேரன்பு ... மகள் மாஸ்டர்பேட் செய்வதில் அப்பாவுக்கு என்ன பிரச்னை?


Priya Thambi : பேரன்பு படத்தை சிலாகித்து கொண்டாடிய பேரன்புகாரர்களுக்கு இந்த வீடியோவை டெடிகேட் செய்கிறேன்…. (கமெண்ட் பாக்ஸில்) இதில் வரும் அப்பா போல நான் சிறப்புக் குழந்தைகளோடு இருந்ததில்லை.. பழகியதில்லை… ஆனால் இவரைப்போல அப்பாக்களை.. பலமடங்கு அம்மாக்களை நான் பார்த்திருக்கிறேன்.. வீடியோவில் அப்பாவும், மகனும் பேசும் வார்த்தைகள் படம் பார்க்கும்போது நான் உணர்ந்தவை.. வரிக்கு வரி உடன்பட முடிந்ததால் பகிர்கிறேன்..
மற்றபடி…

பேரன்பில் என்னதான் பிரச்னை?
பேரன்பு படம் ஸ்பாஸ்டிக் குழந்தைகளின் மிக முக்கிய பிரச்னையே செக்ஸ் தான் என்பது போல் பேசியிருக்கிறது… பிறந்த குழந்தைகளை எல்லாம் பாலியல் வன்புணர்வு செய்கிற ஊரில், இதுபோல ‘’இந்தக் குழந்தைகளுக்கு செக்ஸ் தான் பிரச்னை’’ என்பது போல் காண்பித்தால்.. ‘’ஓஹோ இவர்களை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என தோன்றச் செய்யாதா?
படத்தில் வரும் பாப்பா மிக சிறுமி… அந்த வயதிலும் அவர்கள் குழந்தைகளே… அவர்களை செக்ஸ் மட்டுமே பிரச்னை உள்ளவர்களாக காட்ட வேண்டிய அவசியம் என்ன?

அந்தக் குழந்தைக்கு காம உணர்வு வருகிறது.. அவள் மாஸ்டர்பேட் செய்கிறாள்.. அதை இத்தனை விவரித்ததே அதீதம் தான்.. அதை ஒத்துக் கொண்டாலும்.. மகள் மாஸ்டர்பேட் செய்வதில் அப்பாவுக்கு என்ன பிரச்னை? அவர் போய் ஆண் பாலியல் தொழிலாளி வேண்டும் என நிற்கிறார்.. இப்படி எதாவது அப்பா உயிரோடு இருந்தால் என் முன்னால் வாருங்களேன்.. யோசிக்காமல் காலில் விழுகிறேன்.. சரி ஒருநாளைக்கு அவர் மகளுக்கு பாலியல் தொழிலாளியை அழைத்து வந்து விட்டார்.. இவர் அறைக்கு வெளியே நிற்பாரா? அடுத்தடுத்த நாட்களுக்கு தினம் ஒருவரை அழைத்து வருவாரா?
படத்தில் சிறுமி பாப்பா, குறைபாட்டோடு இருந்தாலும் அம்மாவைத் தேடுகிற பெண்.. அப்பாவை உணர்கிற பெண்… அவளது காம உணர்வை பாலியல் தொழிலாளி மூலம் தீர்க்க நினைக்கிற அப்பா கேவலமானவனா இல்லையா? இதில் எங்கேதான் உங்களுக்கெல்லாம் பேரன்பு தெரிந்தது..?
அப்புறம் பாப்பாவின் அம்மா பாப்பாவை விட்டுவிட்டு ஓடிப்போனவர்.. இந்திய சமூக அமைப்பில், ஓடிப்போகிற உரிமை எல்லோருக்கும் இருக்கிறது.. ஆனால் சிறப்புக் குழந்தைகளோடு வாழ்வை கழிக்கிற… கணவன், குடும்பம் என அனைவரும் நிராகரிதாலும் தங்கள் சிறப்புக் குழந்தைகளை நெஞ்சிலும் தோளிலும் சுமந்து வளர்க்கும் லட்சம், கோடி அம்மாக்கள் இருக்கும் ஊரில்.. இப்படி ஒரு அம்மாவை காட்ட வேண்டிய அவசியம் என்ன?
அமுதவன் (மம்முட்டி) மீது கருணை வரவேண்டும் என்பதற்காக மனைவியை ஓடிப்போக செய்தீர்கள்.. இரண்டாவதாக திருமணம் செய்த அஞ்சலி ஏமாற்றியதாக காண்பித்தீர்கள்.. அவர் கஷ்டப்பட்டு வாங்கிய வீட்டை ஏமாற்றி பிடுங்கியதாக காண்பித்தீர்கள்.. அவர் டாய்லெட் கழுவினார்.. டேக்ஸி ஓட்டினார்… மகளுக்கு நாப்கின் மாட்டினார்… இன்னும் என்னென்னமோ செய்து.. அவர் மீது கருணை வர நம்மை உந்தித்தள்ளுகிறார்கள்.. ''இல்ல சார் இன்னும் கருணை வரலை'' என சொன்னால் நம் கழுத்தில் கத்தி வைத்து, ‘’இவன் நல்லா அப்பா’’ என சர்டிஃபிகேட் வாங்கியிருப்பார்கள் போல…
அம்மாக்களின் பாசம், கடமையுணர்ச்சி இங்கே கட்டாயமாகவும்… அப்பாக்கள் லேசாக அப்படி புரண்டு படுத்து, ‘’சுச்சு போயிட்டியே பாப்பா’’ எனக் கேட்டாலே தியாகியாகவும் கொண்டாடப்பட வேண்டிய அவசியம் என்ன? திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப.. பார்த்து சலிப்பு ஏற்படுகிறது..
நான் ஊரில் இருந்தபோது எங்கள் பக்கத்து வீட்டில் ஒருவர் இருந்தார்.. தேவசம்போர்டில் வேலை செய்த அவருக்கு வெள்ளிக்கிழமை தோறும் சாமி எல்லாம் வரும்.. விஷயம் அதுவல்ல.. அவருக்கு, மனநலம் குன்றிய இருபதுகளில் இருக்கும் மகள் உண்டு.. அந்தப் பெண் திண்ணையில் உட்கார வைக்கப்பட்டு சிரித்துக் கொண்டே தலையை ஆட்டிக் கொண்டே இருப்பாள்.. அவளுக்கு பீரியட்ஸ் நாட்களில் அவர்தான் துணி வைத்து விடுவார்.. மாற்றிய துணியை அவர்தான் துவைத்து காயப்போடுவார்..
நாங்கள் இருந்தது ஒரு காம்பவுண்டு வீடு.. ஆறு வீடுகள் இருக்கும்.. அனைவருக்கும் இது ஒரு இயல்பான காட்சி.. இதுபற்றி ஒரு விநாடி கூட அவர் சிலாகித்ததாக நினைவில்லை.. அவருக்கு, அவர் மனைவிக்கு, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு யாருக்குமே இது ஒரு புதிய காட்சியோ, நெகிழும் காட்சியோ இல்லை.. மிக, மிக, மிக சாதாரண காட்சி.. ராமுக்கும், இந்தப் படம் பார்த்த பேரன்பு காரர்களுக்கும் ஏன் இது இத்தனை நெகிழ்ச்சியை உண்டாக்குகிறது?
இந்தப் படத்தில் அப்பாவுக்கும், மகளுக்குமான காட்சிகள் அப்பா, மகளுக்கான காட்சிகளாகவே இல்லை.. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான காட்சிகளாகவே இருக்கிறது.. அதனால் தான் அமுதவன் பாப்பாவுக்கு பீரியட்ஸ் நாட்களில் உதவும் காட்சிகள் சிலாகிக்கப்படுகின்றன.. ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு இதையெல்லாம் செய்கிறானே.. வாட் எ ஃபாதர் யா…
இயக்குனர் ராமிடம் இந்தப் பிரச்னை.. ‘’தங்க மீன்கள்’’ படத்திலும் இருந்தது.. அதனால் தான் தன் மகளுக்கு கொடுக்கும் முத்தத்தை காமம் கலந்து அவரால் யோசிக்க முடிந்தது..
இந்தப் படத்தை எப்படி குழந்தைகளுக்கும் அனுமதித்தார்கள் என்றே தெரியவில்லை… ஒரு சிறப்புக் குழந்தைக்கும் அதன் அப்பாவுக்குமான படம் என்றே நினைத்து நான் மகளை அழைத்துப் போனேன்.. படம் முழுக்க’’அவ கையால செஞ்சா’’, ‘’அவன் கையால செஞ்சான்’’ என பேசி காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.. குழந்தைகள் இதை எவ்வாறு புரிந்து கொள்வார்கள்.. தியேட்டரில் அத்தனை தர்மசங்கடத்துக்கு ஆளானேன்.. மாஸ்டர்பேட் பற்றி அவள் கேட்டால் என்ன பதில் சொல்வது? என் மகளைப் போலவே தியேட்டரில் ஏராளம் சிறுவர்கள் இருந்தார்கள்.. ஒரு குழந்தைக்கு எப்போது எதை சொல்லித் தருவது என்பதில் தெளிவும், தேர்வும் வேண்டும்.. இருக்கிற எல்லா விஷயங்களையும் சிறுவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஒரு அவசியமும், அவசரமும் இங்கே இல்லை..
எனக்கு இயக்குனரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க ஆசையாக இருக்கிறது.. தன்னை திருமணம் செய்து ஏமாற்றிய அஞ்சலியிடம் விடைபெறும் தருணம், அமுதவன் சொல்வார்.. ‘’இப்படி ஒரு குழந்தை வைச்சிருக்க என்னை நல்ல குழந்தை வைச்சிருக்க நீங்க ஏமாத்தணும்னா உங்களுக்கு எதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கும்’’ அப்ப்பா டேய்.. பதிலுக்கு அஞ்சலியும், கணவரும்.. ‘’உங்களை நாங்க ஏன் ஏமாத்தினோம்னு காரணம் கேட்டுட்டு போங்க சார்’’ என விடாமல் துரத்துவார்கள்.. அப்படி என்ன காரணம் சார்?
இந்தப் படத்தில் வரும் அப்பா அமுதவன் ஒரு செல்ஃபிஷ் இடியட்… 11 வருடங்கள் குழந்தையை பார்க்காமல் இருந்தவர்.. வேறு வழியில்லாமல் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றவர்.. அவளைக் கொண்டு போய் ஒரு மூலையில் அடைத்தவர்.. அவளது எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல்.. அவளை யாராவது பார்த்துக் கொள்ள வந்தால்.. அவர்களை திருமணம் செய்து கொண்டு தனக்கு ஒரு துணை தேடியவர்.. தன் தனிமைக்கே பிரதான இடம் கொடுத்தவர்.. சுய பச்சாதாபத்தில் செத்து சுண்ணாம்பானவர்.. மகளின் காம உணர்வுக்
கு கண்றாவியான தீர்வைத் தேடியவர்.. தன்னுடைய காம உணர்வுக்கு சிறந்த தீர்வுகளை தேடியவரும் அவரே ஆவார்… இவரில் எங்கே நீங்கள் எல்லோரும் பேரன்பை கண்டீர்கள்?
ஒரு சிறந்த படைப்பு.. அது முடியும் தருவாயில் பார்வையாளர்களிடம் ஒரு மேன்மையை உருவாக்க வேண்டும்.. நம்பிக்கையை உருவாக்க வேண்டும்… படம் பேசும் பிரச்னையில் இருக்கிற பிறருக்கு பெரிய தன்னம்பிக்கையை தந்திருக்க வேண்டும்.. எளியவர்கள், பாதிப்புக்குள்ளாவர்கள் வெற்றி பெறும் கதைகளே இன்று நமக்குத் தேவை.. பாப்பா போன்ற சிறப்புக் குழந்தைகள் எப்படி எல்லாம் வெற்றி பெற்றார்கள் என சொல்லியிருந்தால்… பாப்பா போன்ற குழந்தைகளை எப்படியெல்லாம் நாம் சிறந்தவர்களாக உருவாக்க முடியும் என சொல்லித் தந்திருந்தால் சிறந்த படம் என சொல்லியிருக்கலாம்..
இந்தப் படம் எதையுமே செய்யவில்லை.. இதேபோல் குழந்தைகளை பரிதாபமாக பார்க்க சொல்லித் தருகிறது.. குழந்தைகளின் பெற்றோர்களை அவமானப்படுத்தி இருக்கிறது.. இந்தக் குழந்தைகளுக்கு அதீத செக்ஸ் ஆர்வம் இருக்கும் என்கிற ஆபத்தான செய்தியை சொல்லித் தந்திருக்கிறது

கருத்துகள் இல்லை: