திங்கள், 11 பிப்ரவரி, 2019

தாயின் கண் முன்னே கழுத்தறுத்து கொல்லப்பட்ட சவுதி சிறுவன்!.. சுன்னி பிரிவு மசூதிக்கு ஷியா பிரிவு சிறுவன் சென்றதால் கொலை ..


சவுதி சிறுவன் ஸகாரியாvikatan.com - sathya-gopalan: இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் சவுதி அரேபியாவில் பல பிரிவுகள் உள்ளன. அவற்றுள் சுன்னி மற்றும் ஷியா பிரிவு ஆகியவை முக்கியமானது. இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை சன்னிதான் மிகப்பெரும் பிரிவு. முகம்மது நபியின் வழிமுறையைப் பின்பற்றும் மக்கள் இந்தப் பிரிவைக் கடைப்பிடிப்பார்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக உள்ளவர்களே ஷியா பிரிவினர். இவர்கள் முகமது நபியின் மருமகன்தான் அடுத்த வாரிசு என நம்புபவர்கள். அரேபியாவில் உள்ள அதிகமான மக்கள் ஷியா அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
கடந்த 7-ம் தேதி சவுதி அரேபியாவின், மதினா நகரில் உள்ள நபிகள் நாயகம் மசூதிக்கு ஸகாரியா அல் ஜபிர் என்ற 6 வயதுச் சிறுவன் தன் தாயுடன் சென்றுள்ளார். இது சுன்னி அமைப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழுகை முடித்து சிறுவனும் தாயும் காரில் ஏறிப் புறப்பட்டுள்ளனர்.

அந்த நேரத்தில் கார் ஓட்டுநர் சிறுவனின் தாயிடம் ஷியா பிரிவா எனக் கேட்டுள்ளார். அதற்குத் தாயும் ஆம் என பதிலளித்துள்ளார். அடுத்த சில நொடிகளில் காரை நிறுத்திய ஓட்டுநர், தாயிடம் இருந்த குழந்தையை வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்து காரிலிருந்து வெளியேற்றியுள்ளார். பின்னர் சாலையில் கிடந்த கண்ணாடி பாட்டிலை உடைத்து அதிலிருந்து கூர்மையான கண்ணாடியின் ஒரு பகுதியினால் சிறுவன் ஸகாரியா சாகும் வரை அவனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். சுன்னி பிரிவினர் தொழுகை செய்த இடத்துக்கு ஷியா பிரிவைச் சேர்ந்த சிறுவன் சென்றதால் அவனுக்கு இந்தக் கொடுமை நேர்ந்துள்ளது.

தன் கண் முன்னே மகன் கொல்லப்படுவதைப் பார்த்துக் கதறிய தாய் செய்வதறியாது சுயநினைவை இழந்து சாலையிலேயே சரிந்து விழுந்துள்ளார்.  இந்தச் சம்பவத்தை அருகில் இருந்த காவலர் ஒருவர் தடுக்க முயன்றுள்ளார். இருந்தும் அவரின் முயற்சி பலனளிக்கவில்லை. பிறகு மற்ற காவலர்கள் வரும் வரை அருகில் இருந்தவர்கள் டிரைவரை ஓடாமல் பிடித்துக்கொண்டனர்.
சிறுவன் ஸகாரியாசிறுவன் கொல்லப்பட்டத்துக்கான காரணமாக, `டிரைவர் மனநிலை சரியில்லாதவர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பிரிவினைவாதத்தை காட்டுவதாக அந்நாட்டு மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஷியா பிரிவிலி ருந்து வந்ததால் தான் சிறுவனுக்கு இந்த நிலை என்றும் ஷியா பிரிவினருக்கு எதிராகப் பல வன்முறைகள், கைது சம்பவங்கள் நடப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சிறுவனின் கொலைக்கு நீதி கிடைக்கவேண்டும் என ஷியா பிரிவைச் சேர்ந்த சவுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக வரையப்பட்ட கார்ட்டூன்கள் சமூகவலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது. இறந்த சிறுவன் ஸகாரியாவின் இறுதிச் சடங்கு வீடியோ வெளியாகி சவுதி உள்படப் பல நாட்டு மக்களின் மனதை கண்கலங்கச்செய்துள்ளது.
சவுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்ட சர்ச்சை சற்று ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புது சர்ச்சை எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை: