வியாழன், 14 பிப்ரவரி, 2019

புதுச்சேரி ..அரிசியால் வந்த முதல்வர் – ஆளுநர் மோதல்!

அரிசியால் வந்த முதல்வர் – ஆளுநர் மோதல்!
மின்னம்பலம் : புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் நாளையும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஏழை மக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இத்திட்டம் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர வேண்டுமென்று கூறி, புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு ஒரு கடிதம் எழுதினார். இலவச அரிசித் திட்டத்துக்காக, ஆண்டுக்கு 88 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். இது, முதல்வர் நாராயணசாமி மூலமாகத் துணை நிலை ஆளுநருக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த கிரண் பேடி, புதுச்சேரியில் எத்தனை பேர் ரேஷன் அட்டை வைத்துள்ளனர் என்றும், அதில் எத்தனை பேர் அரிசி பெற்று வந்தனர் என்றும் கூடுதல் விவரங்கள் கேட்டுப் பதில் கடிதம் அனுப்பினார்.

இதன்பிறகு புள்ளிவிவரங்களைக் குறிப்பிட்டு, இதற்கான செலவாக 43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று மீண்டும் துணைநிலை ஆளுநருக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரி மக்களின் 45 கோடி வரிப் பணம் கேலி செய்யப்பட்டுள்ளது என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டார் கிரண் பேடி. இது மட்டுமல்லாமல், வேறு சில புதுச்சேரி அரசு நடவடிக்கைகளிலும் மாறுபட்ட கருத்தை வெளிப்படுத்தி வந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பாக, புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாயம் என்ற உத்தரவைப் பிறப்பித்தார் கிரண் பேடி. இந்த உத்தரவைப் போக்குவரத்துக் காவல் துறையினர் பின்பற்றுகிறார்களா என்று கள ஆய்வும் மேற்கொண்டார். ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அறிவுரை வழங்கலாம் என்றும், அபராதம் விதிக்க வேண்டாமென்றும் புதுச்சேரி காவல் துறையினரிடம் தெரிவித்தார் நாராயணசாமி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிரண் பேடி, கண்டிப்பாக ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டுமென்று உறுதிபடக் கூறினார். இதனால், புதுச்சேரி காவல் துறையினர் குழப்பமடைந்தனர்; ஆளுநர் – முதல்வர் மோதல் மீண்டுமொரு முறை பகிரங்கமானது.

இந்த நிலை உச்சம் பெறவே, நேற்று (பிப்ரவரி 13) இரவு துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு எதிரே போராட்டத்தில் இறங்கினார் நாராயணசாமி. ஏற்கனவே திட்டமிட்டபடி சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிரண் பேடி, இன்று (பிப்ரவரி 14) மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் மாளிகையில் உள்ள அதிகாரிகளிடம் நிலைமையைக் கேட்டறிவதற்குப் பதிலாக, தனக்கு அறிமுகமான பத்திரிகையாளர்களிடம் புதுச்சேரி நிலவரம் குறித்துப் பேசியுள்ளார். ”சூழல் நார்மலா இருக்கிறதா, டென்ஷன் அதிகமுள்ளதா?” என்று கேட்டுள்ளார். சிலர், புதுச்சேரியில் சூழல் சாதாரண இருப்பதாகக் குறிப்பிட, அதனைக் கேட்டுச் சிரித்துள்ளார் கிரண் பேடி.
இந்த நிலையில், இன்று மாலை 5.30 மணியளவில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் புதுச்சேரியியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. காங்கிரஸ், திமுக, இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் இதில் கலந்துகொண்டன. இதன் முடிவில், நாளை மதியம் இந்த போராட்டத்தின் அடுத்தகட்டம் குறித்து அறிவிப்பதென்று முடிவானது. இதன் மூலமாக, நாளையும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிரான போராட்டம் தொடருமென்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய உள் துறை அமைச்சகம் தலையீட்டால் மட்டுமே இப்பிரச்சினையில் உரிய தீர்வு கண்டறியப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய தொழில் பாதுகாப்புத் துறையினர் துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அளித்து வருவது தொடர்கிறது.

கருத்துகள் இல்லை: