வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

கோவில் நிலங்கள் எப்படி பறிபோயின? - பகுதி 8 #SaveTNHRCE

தமிழ்நாடு முழுவதும் இறைவனின் பெயரிலேயே கோவில் நிலங்கள் இருக்கும். ஆகவே, பதிவாளர்கள், உள்ளூர் வட்டாட்சியர்களைக் கைக்குள்போட்டுக்கொண்டு, இறைவனின் பெயரைக் கொண்டிருந்தவர்கள், தங்கள் பெயரில்தான் அந்த நிலங்கள் இருக்கின்றன என்று பட்டா போட்டுக்கொண்டார்கள்.
Muralidharan Kasi Viswanathan : கோவில் நிலங்கள் எப்படி பறிபோயின? - பகுதி 8
#SaveTNHRCE. 
தமிழ்நாட்டுக் கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் கொள்ளை போகின்றன என்பது நீண்டகாலமாக சொல்லப்பட்டுவரும் ஒரு குற்றச்சாட்டு. தமிழகக் கோவில்களுக்கு நிலங்கள் எப்படி வந்தன, அவை எப்படி பராமரிக்கப்பட்டன, பறிபோன நிலங்கள் எப்படி பறிபோயின, மீட்கும் முயற்சிகள் எப்படி நடக்கின்றன என்னபதெல்லாம் குறித்து இப்போது பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கோவில்கள் என்பவை வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டும் அல்ல. கோவிலைச் சுற்றி வழிபாடு தவிர்த்து மிகப் பெரிய வாழ்க்கை இருந்தது. இலக்கியம், இசை, நடனம், பழக்க வழக்கங்கள், சடங்குகள் எல்லாமே அந்தந்த ஊரின் கோவில்களைச் சார்ந்தவை. இப்போதும் மதுரை மக்களின் ஆழ்மனதில் மீனாட்சி அம்மன் கோவில் என்பது எப்போதும் நிலைகொண்டிருக்கும், அவர் எந்த மதத்தவராயினும் சரி. மீனாட்சி கோவிலின் திருவிழாக்களை ஒட்டியே, மக்கள் தங்கள் திட்டங்களை, நல்லது - கெட்டதுகளை வகுத்துக்கொள்வார்கள்.
ஆகவே, இம்மாதிரி கோவில்கள் நல்ல முறையில் செயல்பட, அவை தோன்றிய காலம்தொட்டே மன்னர்களும் ஆட்சியாளர்களும் அந்தக் கோவில்களுக்கு நிலங்களையும் செல்வங்களையும் பெரும் அளவில் அளித்தனர். அப்படி அளிக்கப்பட்ட நிலங்களுக்கு வரி கிடையாது. ஆகவே அவை 'இறையிலி நிலங்கள்' என்று அழைக்கப்பட்டன. மன்னர்கள் இப்படி கோவில்களுக்கு வழங்கிய நிலங்களும் செல்வங்களும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து வந்தவை. ஆகவே இந்தச் செல்வங்களை மக்கள் தந்ததாகவே கொள்ள வேண்டும்.


தமிழகத்தை மாலிக்காஃபூர் சூறையாடியபோது, பெரும்பாலான கோவில்களின் செல்வங்கள் முற்றிலுமாக கொள்ளைபோயின. நிலங்கள் மட்டும் தப்பின. இந்தத் தாக்குதலில் இருந்து தமிழகம் மீள பல ஆண்டுகள் பிடித்தன. நாயக்க மன்னர்களின் ஆதிக்கம் தமிழகத்தில் பரவியபோது, இந்த இறையிலி நிலங்களைத் தேடிக் கண்டுபிடித்தனர். அப்போது இந்த நிலங்கள் மானிய நிலங்கள் என சமஸ்கிருதப் பெயரில் அழைக்கப்பட்டன.
இப்படி வழங்கப்பட்ட நிலங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று, கோவில் பெயரிலேயே முற்றிலுமாக இறைவனுக்கு எழுதிவைக்கப்பட்ட இறையிலி நிலங்கள். இரண்டாவது, 'குடி நீங்கா தேவதான' நிலங்கள். முதல் வகை நிலத்தைப் பொறுத்தவரை, அது முற்றிலுமாக கோவிலுக்குச் சொந்தமான நிலம். அதன் பயன்பாடு கோவிலைச் சார்ந்தது.
இரண்டாவது வகை நிலத்தைப் பொறுத்தவரை, அந்த நிலம் குடியானவருக்குச் சொந்தமாக இருக்கும். ஆனால், அந்த நிலத்தில் விளையும் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை கோவிலுக்குச் செலுத்த வேண்டும். இந்த நிலங்களை குடியானவர்கள் விற்கலாம், குத்தகைக்கு விடலாம், வாடகைக்கு விடலாம். ஆனால், இறைவனுக்கு விதிக்கப்பட்டதை தந்துவிட வேண்டும். மதுரையில் சிறிய கோவில்களுக்குக்கூட இப்படி 'குடி நீங்கா தேவதான' நிலங்கள், வீடுகள் இப்போதும் உண்டு.
தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி நீங்கி, இஸ்லாமியர் ஆட்சி வந்தபோதும் இந்த நிலங்களுக்கு வரி வசூலிக்கப்படவில்லை. அவை அப்போது 'இனாம் நிலங்கள்' என்று அழைக்கப்பட்டன. இந்த இனாம் நிலங்கள் பல்வேறு வகையாக இருந்தன. கோவிலுக்கு எழுதிவைக்கப்பட்ட நிலங்கள் 'தேவதான இனாம் நிலங்கள்' என்றும் அந்தணர்களுக்கு வழங்கப்பட்டவை, 'பிரமதானம்' அல்லது 'பிரமதாயம்' என்றும் தர்மகாரியங்களுக்கு வழங்கப்பட்டவை 'தர்மதானம், தர்மதாயம்' என்றும் அழைக்கப்பட்டன.
தமிழகத்தில் ஆங்கில ஆட்சி வந்த பிறகு, மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு வரி வருவதில்லை என்று கண்டுபிடித்தனர். அப்படி எந்தெந்த நிலங்கள் வரி விதிக்கப்படாமல் இருக்கின்றன என்பதைக் கண்டறிய ஒரு ஆணையம் ஒன்றை அமைத்தனர். அந்த ஆணையத்தின் பெயர் Inam Commission. இந்த ஆணயத்தின் அலுவலர்கள் ஒவ்வொரு கிராமமாகச் சென்று, நிலங்களை அளந்து, இனாம் நிலங்களைக் கண்டறிந்து அவற்றை உறுதிப்படுத்தினர். அந்த நிலங்களை யாரெல்லாம் பயன்படுத்திவந்தார்களோ அவர்களுக்கு Title deed என்ற உரிமைப் பத்திரம் வழங்கப்பட்டது. பிறகு இந்த விவரம் இனாம் சுத்த நகல் பதிவேட்டில் - Inam fair register- பதிவுசெய்யப்பட்டது. இந்தப் பதிவேடு இரு பிரதிகளாக உருவாக்கப்பட்டது. ஒரு பிரதி மாவட்ட தலைமையகத்தில் வைக்கப்பட்டது. இரண்டாவது பிரதி சென்னை ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டது. தமிழக ஆலயங்களுக்கு கிறிஸ்தவர்களான ஆங்கிலேயர்கள் செய்த மிகப் பெரிய சேவை இது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இனாம் நிலங்கள், ஜமீன்தாரி நிலங்களை ஒழித்து அவற்றை வரி விதிக்கும் முறைக்குள் -ரயத்வாரி- கொண்டுவருவதற்கான நடைமுறைகள் உருவாக்கப்பட்டன. அப்போதுதான் தமிழக கோவில் நிலங்களுக்கு மிகப் பெரிய அநீதி நிகழ்ந்தது.
அதாவது, 1960ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியன்று யாரெல்லாம் ஜமீன் நிலங்கள், கோவில் நிலங்கள், புறம்போக்கு நிலங்களை 12 ஆண்டுகளாக பயன்படுத்திவந்திருக்கிறார்களோ, அவர்களுக்கு நிலங்கள் பட்டா போட்டுத்தரப்பட்டன. 12 ஆண்டுக்குக் குறைவான காலத்திற்கு நிலத்தைப் பயன்படுத்தியவர்கள் குறிப்பிட்ட தொகையை கொடுத்த பிறகு, நிலத்தை வைத்துக்கொள்ளலாம் என்று சட்டம் கூறியது.
கோவில்களுக்கு சொந்தமான நிலம் இவ்வாறு தனிநபர்களுக்கு வழங்கப்பட்டால், அதற்கான இழப்பீட்டை தமிழக அரசு அந்தக் கோவில்களுக்கு தரும் என்று கூறப்பட்டது. அப்போதுவரை இப்போதுவரை இந்த இழப்பீடு வந்து சேரவில்லை.
இந்தச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு, 1963. அது தொடர்பான சட்டங்கள் The Tamil Nadu Minor Inams (Abolition and Conversion into Ryotwari) Act, 1963, The Tamil Nadu Lease-Holds (Abolition and Conversion into Ryotwari) Act, 1963, The Tamil Nadu Inam Estates (Abolition and Conversion into Ryotwari) Act, 1963, The Tamil Nadu Inams (Supplementary) Act, 1963.
இப்படி நிலங்களை அப்போது அனுபவித்துவந்தவர்கள், பா.ஜ.ககாரர்கள் சொல்வதைப் போல தி.மு.கவினர் அல்ல. கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள், ஆளும் கட்சியின் செல்வாக்கைப் பெற்றவர்கள்தான். பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள், சர்வ மானிய கிராமங்கள் இந்தச் சட்டத்தினால் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டன. இந்தக் காரியத்தைச் செய்தது எம். பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இப்படி பறிபோனது போக எஞ்சியிருப்பதே தற்போதுள்ள கோவில் நிலங்கள்.
அந்தக் காலகட்டத்தில் இதிலும் ஒரு திருட்டுத்தனம் நடந்தது. அதாவது, பொதுவாக கோவிலுக்கு நிலங்களை எழுதிவைப்பவர்கள், கோவில் பெயரில் எழுதிவைக்க மாட்டார்கள். அந்தக் கோவிலில் உறையும் இறைவனின் பெயருக்கே எழுதிவைப்பார்கள். உதாரணமாக, கபாலீஸ்வரர் கோவிலுக்கு எழுதப்பட்ட நிலங்கள், அந்த கோவிலுக்குள் உள்ள பல்வேறு தெய்வங்களின் பெயரில் எழுதப்பட்டிருக்கும். இதுபோலத்தான் தமிழ்நாடு முழுவதும் இறைவனின் பெயரிலேயே கோவில் நிலங்கள் இருக்கும். ஆகவே, பதிவாளர்கள், உள்ளூர் வட்டாட்சியர்களைக் கைக்குள்போட்டுக்கொண்டு, இறைவனின் பெயரைக் கொண்டிருந்தவர்கள், தங்கள் பெயரில்தான் அந்த நிலங்கள் இருக்கின்றன என்று பட்டா போட்டுக்கொண்டார்கள்.
ரொம்பவும் தாமதமாக விழித்துக்கொண்ட தமிழக அரசு, இந்த நிலங்களை மீட்க இரண்டு மாவட்ட வருவாய் அலுவலர்களை நியமித்துள்ளது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இந்தப் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பல ஆயிரக்கணக்கான நிலங்கள் தொடர்பாக வழக்குகள் நடந்துவருகின்றன.
கோவில்களின் நிர்வாகத்தை அரசிடமிருந்து மீட்க வேண்டும் என்று சொல்லும் இந்து அமைப்புகள், திராவிட கட்சிகள்தான் கோவில் நிலங்களை, சொத்துக்களைக் கொள்ளையடித்ததாகக் குறைகூறுவார்கள். ஆனால், இந்த நில விவகாரம் தொடர்பாக தி.மு.க. அரசில் இரு முக்கியமான விஷயங்கள் நடைபெற்றன.
அதாவது, ஒரு நிலத்தை மீட்பதற்கான வழக்குத் தொடுக்கும்போது, எந்த நிலத்தை மீட்க வழக்குத் தொடுக்கிறோமோ அதன் மதிப்பில் 7.5 சதவீதத்தை நீதிமன்றத்திற்குக் கட்ட வேண்டும். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் என்றால், ஏழரை லட்ச ரூபாய் கட்ட வேண்டும். இவ்வளவு தொகையை புரட்டுவது அறநிலையத் துறைக்கு சிரமமான காரியம். ஆகவே, தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, அறநிலையத் துறை சொத்து தொடர்பான வழக்குகளுக்கு 15 ரூபாய் நீதிமன்றக் கட்டணமாக செலுத்தினால் போதும்.
தவிர, சென்னையில் அமலில் இருந்த வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம், கோவிலுக்குச் சொந்தமான வீடுகளில் இருந்து, வாடகை செலுத்தாத நபர்களை வெளியேற்றுவதில் சிக்கலை ஏற்படுத்தியது. ஆகவே, தமிழக அரசு மற்றொரு அரசாணையின் மூலமாக, கோவில் கட்டடங்களுக்கு இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளித்தது.
இந்த இரு அரசாணைகளும் பல ஏக்கர் விஸ்தீரணமுள்ள கோவில் நிலங்களையும் பல ஆயிரம் சதுர அடி பரப்புள்ள கட்டங்களையும் மீட்க உதவியது. இந்த இரு அரசாணைகளும் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டவை.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: