சனி, 27 அக்டோபர், 2018

இலங்கை .. எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் .. Sri Lanka plunged into a constitutional crisis.. nytimes.com

minnambalam :இலங்கையின் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, புதிய
பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷேவை நியமனம் செய்திருக்கிறார் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா. நேற்று (அக்டோபர் 26) இரவு நடந்த இந்த நியமனம், இலங்கை அரசியலில் நிலையற்ற தன்மையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம், ‘இலங்கைக்கு இப்போதும் நான் தான் பிரதமர். அதிபர் சிறிசேனாவின் செயல் இலங்கை அரசியல் சாசனத்துக்கு முரணானது. சட்ட விரோதமானது’ என்று ரனில் கூறியுள்ளார். இதனால் இப்போதைக்கு இலங்கை இரு பிரதமர்களைப் பெற்று அரசியல் சுனாமியில் சிக்கியுள்ளது.
நேற்று இரவு திடீரென கொழும்பில் இருக்கும் அதிபர் மாளிகையான அளறி மாளிகைக்கு வந்தார் அந்நாட்டின் முன்னாள் அதிபரான ராஜபக்‌ஷே. அவரோடு அவரது இலங்கை மக்கள் முன்னணியின் பிரமுகர்களும் வந்திருந்தனர். சில நிமிடங்களில் ராஜபக்‌ஷேவுக்கு நாட்டின் புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் சிறிசேனா. இந்தத் தகவல் அரசு டிவியில் லைவ் ஆக ஒளிபரப்பான பிறகுதான் பலருக்கும் தெரிய வந்திருக்கிறது.
2005 முதல் 2015 வரை பிரதமராகவும், அதிபராகவும் இருந்த ராஜபக்‌ஷேவின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராகவும், அந்த ஆட்சியின் இறுதிக் காலத்தில் நடந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொடும் போரில் முக்கியப் பங்கு வகித்தவராகவும் இருந்தவர் சிறிசேனா. 2015 அதிபர் தேர்தலில் ராஜபக்‌ஷே தோல்வி முகத்தில் இருந்த நிலையில்... சிறிசேனா தனியாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
அதன் பின் நடந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி மொத்தமுள்ள 225 இடங்களில் 106 இடங்களில் வென்றது. இதையடுத்து சிறி சேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியும், ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து ஒற்றுமை அரசு (unity government) என்ற பெயரில் 2015-ம் ஆண்டு அரசமைத்தனர். ரனில் 2015ல் பிரதமராக பொறுப்பேற்றார். .


ராஜபக்‌ஷேவால் சீரழிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்தையும் நிர்வாகத்தையும் மறுகட்டமைப்பு செய்வோம் என்று சொல்லிதான் ரனில் ஜெயித்தார். ஆனால் ரனிலுக்கும், சிறிசேனாவுக்கும் பல சந்தர்ப்பங்களில் மோதல்கள் உருவாகின. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இலங்கையின் உள்ளாட்சித் தேர்தலில் ராஜபக்‌ஷேவின் இலங்கை மக்கள் முன்னணி அதிக இடங்களில் வெற்றிபெற்றது. அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டுக் கிடந்த ராஜபக்‌ஷே இந்த தேர்தல் வெற்றியின் மூலம் மீண்டும் புத்துயிர் பெற்று எழுந்தார். அப்போதே அவர் நாட்டின் உயர் பதவியைக் கைப்பற்ற காய்நகர்த்த ஆரம்பித்துவிட்டார.
ராஜபக்‌ஷே வெற்றியால் ரனில்- சிறிசேனா உறவு மேலும் விரிசல் அடைந்தது. அண்மையில் நடந்த இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில், தன்னைக் கொல்ல சதி நடக்கிறது என்று சிறிசேனா குற்றம் சாட்டியிருந்தார். மேலும் இந்த சதித் திட்டத்தை ரனில் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் அறிந்திருப்பதாக சிறிசேனா குற்றம் சட்ட மோதல் மேலும் அதிகமானது. அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இலங்கையில் இந்தியாவின் தலையீடு அதிகமாக இருப்பது தொடர்பாக சிறிசேனாவுக்கும், ரனிலுக்கும் காரசாரமான வார்த்தைப் போர் நடந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இலங்கையில் இந்தியாவின் தலையீட்டை சிறிசேனா எதிர்ப்பதாகவும், ரனில் ஆதரிப்பதாகவும் அச்செய்திகளில் தரவுகள் இருந்தன.
இப்படி உள்நாட்டு அரசியல் ரீதியாகவும், வெளிநாட்டு அரசியல் ரீதியாகவும் சிறிசேனா- ரனில் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில்தான் நேற்று ரனிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார் சிறிசேனா.
ஆனால் ரனில், “இப்போது வரைக்கும் நான் தான் இலங்கையின் பிரதமர். அதிபர் சிறிசேனா செய்தது அரசியல் சட்டத்துக்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும் எதிரானது. நாடாளுமன்றத்தில் நாங்களே அதிக இடங்களில் இருக்கிறோம்” என்று அறிவித்திருக்கிறார்.
சீன-இந்திய போட்டி
ராஜபக்‌ஷே தனது ஆட்சிக் காலத்தில் சீனாவோடு மிக நெருங்கிய உறவுகளை வளர்த்துக் கொண்டார். சீன அரசிடம் இருந்து இலங்கைக்கு ஏராளமான திட்டங்களை தருவித்துக் கொண்டார். ரனில் விக்ரமசிங்கே இந்தியாவோடு நெருங்கிய நட்பு பாராட்டியவர். கடந்த வாரம் கூட ரனில் டெல்லிக்குப் பயணம் செய்துவிட்டுத் திரும்பியுள்ளார்.
இந்நிலையில் ரனில் நீக்கம் ராஜபக்‌ஷே நியமனம் என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்பதோடு நின்றுவிடாமல், சர்வதேச விவகாரங்களையும் உள்ளடக்கியதாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு நெருக்கமான ரனில் நீக்கப்பட்டு, சீனாவுக்கு நெருக்கமான ராஜபக்‌ஷே பிரதமர் ஆகியிருப்பது இந்த சர்வதேச ஆட்டத்தின் ஒரு பகுதிதான் என்றும்... இதன் மூலம் இலங்கை மீண்டும் அரசியல் குழப்பத்துக்கு ஆளாகியிருப்பதாகவும் கூறுகிறார்கள் கொழும்பு பத்திரிகையாளர்கள்.

கருத்துகள் இல்லை: