புதன், 24 அக்டோபர், 2018

சிபிஐ.. புதிய இயக்குனர் நாகேஸ்வர ராவ் ..

சிபிஐ vs சிபிஐ: புதிய இயக்குனர் நியமனம்!மின்னம்பலம்:
சிபிஐயின் இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ஆகியோரிடையில் நடைபெறும் மோதலைத்தொடர்ந்து சிபிஐயின் தற்காலிக இயக்குனராக தெலங்கானா மாநிலத்தினைச் சேர்ந்த நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார் என மத்திய அரசின் ஊழியர் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறையின் உத்தரவு தெரிவித்துள்ளது .நேற்று(அக்-23) நள்ளிரவில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதவி ஏற்ற நாகேஸ்வர ராவ் ,அஸ்தானா மற்றும் வர்மா ஆகிய இருவரின் கீழ் நடைபெற்ற வழக்குகளின் விசாரணை அதிகாரிகள் மாற்றிவிட்டு புதிய அதிகாரிகளை நியமித்துள்ளார் .

இயக்குனராக இருந்த அலோக் வர்மாவும் ஊழல் குற்றம் சாட்டப்பட்ட ராக்கேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இருவருடைய அதிகாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே தனது வேலை நீக்கத்தை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் இன்று(அக்-24) தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐயின் இயக்குனர் அலோக் வர்மாவின் அலுவலக அறையில் சோதனை நடத்தப்பட்டது. அஸ்தானாவின் அறை உள்ளிட்ட சிபிஐயின் இரு தளங்களுக்கும்(10 மற்றும் 11 தளங்கள்) சீல் வைக்கப்பட்டுள்ளது. மொத்த சிபிஐ வளாகமும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. உள்ளே உள்ளவர்கள் வெளியே வரவும் வெளியாட்கள் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரு இயக்குனர்களையும் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்ட பின்னர், சிபிஐயின் தற்காலிக இயக்குனராக இணை இயக்குனராக இருந்த நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். உடனடியாக பதவி ஏற்ற நாகேஸ்வர ராவ் தெலங்கானா மாநிலத்தின் வாராங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
ஒடிசா மாநிலத்தின் 1986ஆம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியாவார்.
மொய்ன் குரோஷி என்ற இறைச்சி ஏற்றுமதியாளரை பண மோசடி வழக்கிலிருந்து விடுவிக்க இடைத்தரகர்கள் மூலமாக 5 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக ”குற்றம் சாட்டப்பட்டு சிபிஐயின் சிறப்பு இயக்குனர் ராக்கேஷ் அஸ்தானா மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள சிபிஐயின் போலீஸ் கண்காணிப்பாளர் தேவந்தர் குமார் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவருக்கு 7 நாள் சிபிஐயின் காவலில் வைத்து விசாரிப்பதற்கான அனுமதியை சிபிஐ கோரியுள்ளது.
முன்னதாக, தன் மீதான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரி சிபிஐயின் சிறப்பு இயக்குனர் ராக்கேஷ் அஸ்தானா டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்தனர். மேலும், ராக்கேஷ் அஸ்தானாவை வரும் 29 ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து தீர்ப்பளித்தனர்

கருத்துகள் இல்லை: