சனி, 27 அக்டோபர், 2018

அம்பானிகள் மரியாதையான குடும்பம் என்பதால் ஒப்பந்தம் .. பிரான்ஸ் ரபேல் சி இ ஒ

மின்னம்பலம்: ரஃபேல் விவகாரத்தில் எவ்வித ஊழலும் நடைபெறவில்லை
என்று தெரிவித்துள்ள டசால்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ எரிக் ட்ராபியர், இந்த விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் தயார் என்றும் கூறியுள்ளார்.
ரஃபேல் – விசாரணைக்குத் தயார்: டசால்ட்ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு முறைகேடாக ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐயிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக டசால்ட் சி.இ.ஓ எரிக் ட்ராபியர் அளித்துள்ள பேட்டியை எக்னாமிக் டைம்ஸ் ஊடகம் நேற்று (அக்டோபர் 26) வெளியிட்டுள்ளது. அதில், “ஹாலண்டே அதிபராக இருந்த காலத்திலோ, தற்போதைய இந்திய பிரதமர் மோடி காலத்திலோ இது முடிவானது அல்ல. நீண்ட நாட்களாக நாங்கள் ரிலையன்ஸ் உடன் பேசி வருகிறோம் ரிலையன்ஸ் நிறுவனத்தை 2011-2012ஆம் ஆண்டுகளிலேயே நாங்கள் கண்டுகொண்டோம்.
அம்பானிகள் மரியாதையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுடன் டசால்ட் ஒப்பந்தம் செய்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ரூ.3000 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் தவறான தகவல். ரூ.850 கோடிக்குத்தான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது” என்று எரிக் விளக்கமளித்துள்ளார்.

மேலும், இந்திய அரசின் தூண்டுதலின் பேரில் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது என்பது தவறு. ஏற்கனவே 30 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தோம் என்று தெரிவித்துள்ள அவர், “நாங்கள் ஊழலுக்கு முற்றிலும் எதிரானவர்கள், இந்தியாவிலோ, பிரான்ஸிலோ எந்த விசாரணை நடைபெற்றாலும் அதற்கு தயாராகவே இருக்கிறோம். பதிலளிக்க வேண்டியது எங்களின் பொறுப்பு. ஊழல் நடைபெறவில்லை என்பதை நிரூபிப்போம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஏ.எஃப்.பி. ஊடகத்திற்கு கடந்த அக்டோபர் 11ஆம் தேதி பேட்டியளித்திருந்த எரிக், “பங்குதாரர்களை தேர்வு செய்வது என்பது எங்களை சார்ந்தது. இதையடுத்தே, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டசால்ட் –ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட் தொடங்க முடிவு செய்தோம். நாக்பூரில் ஆலையும் கட்டப்பட்டது. ரஃபேல் விமானங்கள் தயாரிப்பதற்காக இந்தியாவில் நாங்கள் முதலீடு செய்ய உள்ள நிதியில் 10 சதவிகிதத்தைத் தான், ரிலையன்ஸில் முதலீடு செய்வோம். ரிலையன்ஸ் அல்லாமல் 100 இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இது மட்டுமல்லாமல் 30 நிறுவனங்களில் முதலீடு செய்வதை நாங்கள் உறுதிப்படுத்திவிட்டோம்” என்று கூறியிருந்தார்.

கருத்துகள் இல்லை: