வெள்ளி, 26 அக்டோபர், 2018

குஷ்பூவுக்கு சின்மயி கணவர் விளக்கம்!

குஷ்பூவுக்கு சின்மயி கணவர் விளக்கம்! மின்னம்பலம்:  சின்மயி ஏன் அப்போதே பாடகர்கள் அமைப்பில் புகார் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய குஷ்பூவுக்கு பதிலளித்துள்ளார் சின்மயியின் கணவர் ராகுல்.
முன்னதாக, கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகை குஷ்பூ கேள்வியெழுப்பினார். இதுகுறித்து ஏன் அப்போதே பாடகர்கள் அமைப்பில் புகார் தெரிவிக்கவில்லை என்று கேட்டிருந்தார்.
இதற்கு, சின்மயி, “இன்னும் எவ்வளவு காலம் எங்களையே கேள்வி கேட்டுக் கொண்டிருப்பீர்கள். எப்போது குற்றம்சாட்டப்பட்டவர்களை கேள்வி கேட்பீர்கள்” என்று விரிவான பதில் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தற்போது சின்மயியின் பதிவுக்கு பதிலளித்துள்ள குஷ்பூ, “நான் எப்போதும் உங்களை ஆதரித்துள்ளேன். ஆனால் எனது கேள்விகள் நியாயமானவை” என்று குஷ்பூ பதிலளித்துள்ளார்.

இந்த பதிலை சுட்டிக்காட்டி சின்மயியின் கணவர் ராகுல்,தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பூவுக்கு விரிவான பதிலை பதிவிட்டுள்ளார். அதில், “மேடம், நான் இதை முன்பே சொல்லியிருக்கிறேன் மேலும் நான் உங்கள் பெரிய ரசிகன் என்பதும் உங்களுக்குத் தெரியும். எனவே நான் இதை மரியாதையுடன் தான் சொல்கிறேன் என்பது உங்களுக்குப் புரியும். நீங்கள் கேட்ட கேள்வி நியாயமானதாக இருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரானது. உண்மையில் நியாயமான கேள்வி என்பதை விட, உணர்ச்சிகளுக்கு மரியாதை இல்லாதது. ஏன் அப்போதே பேசவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியை சுதந்திரமான, சிந்திக்கும் திறன் கொண்டவர்கள் எப்போதோ கேட்பதை நிறுத்தி விட்டார்கள். நம் எல்லாருக்கும் ஏன் என்று தெரியும்...
1. பல வருடங்களாக சட்ட அமைப்பால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க முடியவில்லை. ஊழல் இல்லையென்றாலும், இது போன்ற குற்றச்சாட்டுகளில் ஆதாரம் இல்லை. என்ன எதிர்பார்க்கிறோம்? பாலியல் தாக்குதல் நடக்கும்போது பாதிக்கப்படுபவர்கள் அதை படம்பிடிக்க வேண்டுமா?
2. ஆதாரம் இருந்தாலும், சட்ட ரீதியாக போராட காலம், சக்தி, பணம் நிறைய செலவாகும். தீர்வு கிடைக்குமா என்ற உத்தரவாதம் கிடையாது. பலரிடம் போராட சக்தி இல்லை. அப்படியான போராட்டத்தில் உணர்ச்சிரீதியாக எவ்வளவு விலை கொடுக்க வேண்டும் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
3.“உனக்கு நடந்த கேவலமான விஷயத்தைப் பற்றி ஏன் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும், எந்த ஆண்மகனுக்கும் உன்னை பிடிக்காமல் போகும்” இத்யாதி இத்யாதி என பல கேள்விகளால், பாதிக்கப்பட்டவர்களே வெட்கப்படும் அளவுக்குத் தான் நம் சமூகம், ஒரு சூழலை உருவாக்கியுள்ளது. இதையும் மீறி அவர்கள் முன்வந்தால், அவர்களை அவமானப்படுத்தாமல், அவர்களைப் பற்றி முன் தீர்மானங்கள் இல்லாமல் யாரும் அதைக் கேட்பதில்லை. முன்சொன்ன கேள்வியில் இருக்கும் எச்சரிக்கை போல். 2018லும் கூட பாதிக்கப்பட்டவர்களிடம் தான் விசாரணை நடக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் அல்ல. குற்றவாளிகள் செல்வாக்குடையவர்களாக இருக்கும்போது எப்படியும் பாதுகாக்கப்படுகிறார்கள்.
உங்களைப் போன்ற மரியாதைக்குரிய ஒருவரின் முக்கியமான குரல், இப்படியான கேள்விகளை மீண்டும் கேட்கும்போது, அது இந்த இயக்கத்தை பல தூரம் பின்னுக்குத் தள்ளுவது மட்டுமல்ல, தேக்கமடையச் செய்கிறது. இது, கதையை அழகாக மாற்றி, மீண்டும் அழுத்தத்தை பாதிக்கப்பட்டவர்கள் மீதே வைக்கிறது. சின்மயி உள்ளிட்ட பல பெண்கள் வெளியே வந்து பேச இவ்வளவு நாள் தேவைப்பட்டு இந்த இயக்கம் மூலமாக அவர்கள் ஒன்று திரண்டு பேசும் தைரியத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாக நிற்கிறார்கள். அவர்களுக்கு பொதுவில் ஆதரவு தர வேண்டாம் என்று நினைப்பவர்களின் விருப்பத்தை நான் மதிக்கிறேன். அதற்கான காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உங்களைப் போல வெளிப்படையாகப் பேசும் ஒரு பெண் அவர்கள் மீது இன்னும் அழுத்தம் தர வேண்டாம்.
நான் பகுத்தறிவுவாதி. எனக்கும் சட்டத்தின் மீது நம்பிக்கை உண்டு. சமூக ஊடகங்களே விசாரித்து தீர்ப்பு சொல்வதில் எனக்கும் உடன்பாடில்லை. கலவரம் செய்வது போல கூட்ட மனப்பான்மையே அது. ஆனால் தலித் மற்றும் பெண்களுக்குக் எதிரான அக்கிரமங்கள் என்று வரும்போது, நாம் கூடுதலாக உதவிக்கரம் நீட்ட வேண்டும். ஏனென்றால் அவர்களை சட்டமும், சமூகமும் தொடர்ந்து கைவிட்டுள்ளது. இதைவிட்டால் சரி செய்ய வேறு வழியும் இல்லை.
சரி செய்ய வேண்டும் தான். கண்டிப்பாக உங்களிடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி நண்பர்கள் பகிர்ந்திருப்பார்கள்.
தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவரின் பெயர் சொல்லும் தைரியம் இன்னும் தனக்கு வரவில்லை என லேடி காகா போன்ற சர்வதேச நட்சத்திரமே சொல்கிறார். அப்படியென்றால் வெளிப்படையாகப் பேசுவது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்குக் கண்டிப்பாக தெரிந்திருக்கும். தயவுசெய்து அதை இன்னும் கடினமாக்க வேண்டாம்” என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: