புதன், 24 அக்டோபர், 2018

கஷோகி கொலையில் தொடர்புடைய சவூதி அதிகாரிகளின் அமெரிக்க விசா நீக்கம்

கசோக்கி கொலையில் தொடர்புடைய சவூதி அரேபிய அதிகாரிகளின் விசா ரத்து: அமெரிக்கா அறிவிப்புதினத்தந்தி :கசோக்கி கொலையில் தொடர்புடைய சவூதி அரேபிய அதிகாரிகளின் விசா ரத்து செய்யப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
வாஷிங்டன், அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்த சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 60), துருக்கியில் உள்ள இஸ்தான்புல் சவுதி அரேபிய தூதரகத்துக்கு கடந்த 2-ந் தேதி சென்றார். அவர் அங்கிருந்து திரும்பவில்லை.
அவர் காணாமல் போய் 17 நாட்களுக்கு பிறகு அவர் கொல்லப்பட்டு விட்டதாக சவுதி அரேபியா ஒப்புக்கொண்டது. சவுதி அரேபிய மன்னராட்சியையும், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கசோக்கி கொல்லப்பட்டது உலகை உலுக்கி உள்ளது.
இதில் வெளிப்படையான, நம்பத்தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. முதலில் ஜமால் கசோக்கி படுகொலையில் சவுதி அரேபியாவின் தகவலை ஏற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். இப்போது இதில் பல்டியடித்துள்ளார். சவுதி அரேபியாவின் தகவல்கள் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று அவர் வாஷிங்டனில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசுகையில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கசோக்கி படுகொலையில் சதி உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.


இதற்கிடையே கசோக்கி படுகொலை தொடர்பான விசாரணையில் அமெரிக்கா நேரடியாக துருக்கியில் களம் இறங்குகிறது. அமெரிக்க மத்திய புலனாய்வு படை சி.ஐ.ஏ.யின். இயக்குனர் ஜினா காஸ்பெல் துருக்கி விரைந்தார்.அவர் நேரடியாக விசாரணை நடத்தி ஜனாதிபதி டிரம்பிடம் அறிக்கை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிக்கையில் அவர் கசோக்கி படுகொலையின் பின்னணியை அம்பலப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

துருக்கி நாடாளுமன்றத்தில் அதிபர் எர்டோகன் நேற்று பேசினார். அப்போது அவர் கசோக்கி படுகொலை விசாரணை குறித்த உண்மைகளை வெளியிட்டார். அவர் கசோக்கி படுகொலை செய்யப்படுவதற்கு முன்பாக சவுதி அரேபிய தூதரகம் அருகேயுள்ள காட்டினை சவுதி அரேபிய ஏஜெண்டுகள் பார்வையிட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். இந்த காட்டில்தான் கசோக்கியின் உடல் வீசப்பட்டிருக்கலாம் என கருதி துருக்கி அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தினர்.  கசோக்கியின் உடல் பாகங்கள் சவூதி அரேபிய தூதரக அதிகாரியின் வீட்டில் கிடைத்து இருப்பதாக இங்கிலாந்து நாட்டு செய்தி  தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.  

இந்த நிலையில், பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலையில் தொடர்புடைய சவூதி நாட்டவர்களின் விசாவை ரத்து செய்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: