புதன், 24 அக்டோபர், 2018

8 வழிசாலை ..உயர்நீதிமன்றம் : ஊரெல்லாம் ரோடு போட்டுவிட்டு சோத்துக்கு என்ன பண்ணப்போறீங்க?

Madras HC slams Govt for laying roads by destructing the farm lands tamil.oneindia.com - arivalagan>சென்னை: நாடு முழுவதும் விளைநிலங்களை ஆக்கிரமித்து சாலைகள் போட்டால் அடுத்த தலைமுறைக்கு கல்லும், மண்ணும்தான் மிஞ்சும் என்று சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது.
சென்னை - சேலம் இடையே 8 வழிச் சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பெருமளவில் விளை நிலங்களை அது காலி செய்யப் போகிறது. நிலங்களை அளவிடும் பணியின்போது விவசாயிகளிடமும், கிராமத்தினரி்டமும் போலீஸார் மிகப் பெரிய அத்துமீறலில் ஈடுபட்டனர். வயதான பாட்டியைக் கூட விடாமல் கைது செய்து அனைவரையும் அதிர வைத்தனர். இந்த சாலைத் திட்டத்தை எதிர்த்து பாமக சார்பிலும், விவசாயிகள், நில உரிமையாளர்கள் சார்பிலும் பல்வேறு பொது நல மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நிலம் அளவிடும் பணி, மரங்களை வெட்டுவது உள்ளிட்ட அனைத்துப் பணிகளுக்கும் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரிசிடம் நீதிபதிகள் அதிரடியான பல கேள்விகளைக் கேட்டனர்.
  • நாடு முழுவதும் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து சாலைகள் போட்டு என்ன செய்யப் போகிறீர்கள்
  • இப்படி நாடு முழுவதும் சாலைகளாக அமைத்தால் நாளை சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்கள்.
  • ஏரிகள் அனைத்தும் இன்று மனைகளாகவும், அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும் மாறி வருகின்றன.
  • விவசாய நிலங்களை அழித்தால் நாளைய தலைமுறையினருக்கு வெறும் கல்லும் மண்ணும்தான் மிஞ்சும்.
இதற்கு மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விளைநிலங்களை மாற்றுவதை யாரும் எதிர்க்கவில்லை என்று வாதிட்டார். அதற்குக் குறுக்கிட்ட மனுதாரர்களின் வழக்கறிஞர், விவசாய நிலங்களை அழித்துத்தான் சாலை அமைக்கும் திட்டத்தை அமல்படுத்தி வருகின்றனர் என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை: