ஞாயிறு, 21 அக்டோபர், 2018

metoo நடிகர் அர்ஜுன் தவறாக தொட்டார் ,, நடிகை சுருதி ஹரிஹரன் .. நிபுணன் படத்தில் ..சம்பவம் நடந்ததாம்

அர்ஜுன் மீது மீ டூ புகார் தொடுத்த ஸ்ருதி மின்னம்பலம் : நடிகர் அர்ஜுன் தன்னைத் தவறான இடங்களில் தொட்டு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக ஸ்ருதி ஹரிஹரன் மீ டூ மூலம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கடந்த வருடம் இயக்குநர் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நிபுணன். இதில் நடிகர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடித்திருந்தார். இவர் கன்னடத்தில் பிரபலமான நடிகையாவார். தற்போது மீ டூ இயக்கம் மூலம் பெண்கள் தங்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி வெளியில் கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஸ்ருதியும் தனக்கு நடந்த பாலியல் சீண்டல்களைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “மீ டூ இயக்கம் மிக மிகச் சரியான சமயத்தில் வந்துள்ளது. இது பாலியல் வக்கிரம் படைத்த நமது சமூகத்திடமிருந்து பெண்களை மீட்க உதவும். அதற்கு இந்த மீ டூ ஒரு நல்ல முயற்சியாகும். எனது அமைதியைக் கலைக்க இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
பலமுறை நான் பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளாகியுள்ளேன். வளரும் கலைஞர்களுக்கு வரும் அதே பிரச்சினைதான் எனக்கும் வந்தது. தேவையில்லாத ஆபாசப் பேச்சுகள், வக்கிர செய்கைகள், சைகைகள் என நான் பல அத்துமீறல்களைச் சந்தித்துள்ளேன். இதனால் நான் பலமுறை அசௌகரியமாக உணர்ந்துள்ளேன்.

நான் பலமுறை இதுபோல சந்தித்திருந்தாலும், அதனால் நான் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஆனால் 2016ஆம் ஆண்டு மனதளவில் பெரும் அதிர்ச்சியைச் சந்திக்க நேரிட்டது. இந்த முறை மிகப் பெரிய நடிகர் ஒருவரால் நான் பாதிக்கப்பட்டேன். இதிலிருந்து வெளியே வர பெரும் சிரமப்பட்டு விட்டேன்.
அர்ஜுன் சர்ஜா (நடிகர் அர்ஜுன்) நடித்த இரு மொழிப் படத்தில் நான் நாயகியாக நடித்தேன். இவருடைய படங்களைப் பார்த்துதான் நான் வளர்ந்தேன். இவருடன் நடிப்பதை நினைத்து மிகுந்த சந்தோஷப்பட்டேன். சில நாட்கள் இயல்பாகப் போனது. அவருடைய மனைவியாக அந்தப் படத்தில் நான் நடித்தேன். கதைக்குச் சில ரொமான்டிக் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இருவரும் கட்டித் தழுவிக் கொள்ள வேண்டும். இந்தக் காட்சிகளுக்குரிய ஒத்திகையின்போது அர்ஜுன் என்னைக் கட்டிப்பிடித்தார். அப்போது தேவையில்லாமல் என்னை இறுக்கி அணைத்தார். என்னை நெருக்கமாக நிறுத்திக் கொண்டார். எனது முதுகில் கையை வைத்து மேலும் கீழுமாக தடவினார்.
இருவருக்கும் இடையே முன் விளையாட்டு (Foreplay) காட்சிகள் வைக்கலாமே என்றும் இயக்குநரிடம் அவர் சிரித்தபடி கூறினார். சினிமாவில் யதார்த்தம் இருக்க வேண்டும் என நானும் நம்புகிறேன். ஆனால், இதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என் உடலை என் அனுமதியில்லாமல் வருடியதை வெறுத்தேன். அவர் பேசியதை வெறுத்தேன். ஆனால், அவரிடம் என்னால் எனது கோபத்தைக் காட்ட முடியவில்லை. இதற்காக உள்ளுக்குள் நான் வெந்து போனேன். அவரது செயல்கள் அனைத்துமே அவரது மன ஓட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் இருந்தன.

ஒரு காட்சியை படமாக்கும் முன் ஒத்திகை பார்ப்பது வழக்கம்தான் என்றாலும் அன்று நடந்த ஒத்திகை இயல்பானது அல்ல. அதுவும் நெருக்கமான காட்சிகள் என்றால் அது என்ன மாதிரியானது என்பது முன்கூட்டியே எனக்கு விளக்க வேண்டும். நான் அதற்கு முன்னரும் அதன் பின்னரும் எதிர்கொண்ட எந்த நடிகரும் அப்படி நடந்தது கொள்ளவில்லை. அன்று செட்டில் நான் அசௌகரியமாக உணர்ந்ததை இயக்குநர் புரிந்துகொண்டார். அதன் பின்னர் அந்தப் படப்பிடிப்பு முடியும் வரை ஒத்திகைக்கும் நான் அனுமதிக்கவில்லை.
50 பேர் முன்னால் அந்தச் சம்பவம் நடந்தது. எனது பணியிடத்தில் நடந்த துன்புறுத்தல் அது. அதேசமயம், அவருக்குப் பயந்து ஓட நான் விரும்பவில்லை. எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நல்லபடியாக முடித்துக் கொடுத்தேன். படப்பிடிப்பு முழுவதும் அவர் நான் சகித்துக் கொள்ளமுடியாத அளவுக்கு துன்பங்களைத் தந்தார். பணியிட சூழலை கொடூரமாக்கினார். அவரிடம் ஒரு தூரத்தை கடைப்பிடித்தேன். ஆனாலும் அவர் திருந்தவில்லை. இதனால் முடிந்தவரை அமைதி காத்தேன். படம் முடியும் வரை காத்திருந்தேன்.
இனியும் இதுபோல நடக்கக் கூடாது. நாம் பெண்களை மேலும் உறுதியானவர்களாக மாற்ற வேண்டும். மீ டூ இயக்கம் என்பது தனி நபர்கள் தங்களது துன்பங்களைத் தெரிவிப்பதற்கான தளம் என்பதைத் தாண்டி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிரான குரலாக இருக்கிறது. பெண் அடக்குமுறை, பெண்கள் மீதான அத்துமீறல்களை எதிர்க்கும் இயக்கத்தில் ஒரு பாகமாக இருக்கிறேன்” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் படத்தின் இயக்குநர் அருண் வைத்தியநாதன் “அர்ஜுன் சார், ஸ்ருதி ஹரிஹரன் இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள். எனக்கு அவர்கள் குடும்பங்களையும் நன்றாகத் தெரியும். அர்ஜுன் சாரை பொறுத்தவரையில், அவர் படப்பிடிப்பில் ஒரு ஜெண்டில்மேன். நடிப்புக் கலையில் சிறந்த தொழில் முறையானவர். ஸ்ருதியும் அப்படியே.
இப்போதுதான் மீ டூ அறிக்கையில் ஸ்ருதி, அர்ஜுன் சார் பற்றி சொல்லியிருப்பதைப் பார்த்தேன். அதைப் படித்ததும் அதிர்ச்சியாக இருந்தது. ஸ்ருதி குறிப்பிட்டுள்ள காட்சி ஒரு நெருக்கமான ரொமாண்டிக் காட்சி. அதற்கான ஒத்திகையை நாங்கள் பார்த்தோம். எங்கள் யோசனைகளை விவாதித்தோம். சில கூடுதல் யோசனைகளை நான் நீக்கினேன். எப்படி எடுப்பது என இறுதி செய்து அந்தக் காட்சியை படம்பிடித்தோம். படம் எடுக்கும்போது கூடுதல் யோசனைகள் என்பது பொதுவானது. அப்படிதான் படங்கள் எடுக்கப்படுகின்றன. ஸ்ருதி குறிப்பிட்டுள்ள படப்பிடிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்தது. அதைப் பற்றிய நுண்ணிய விவரங்கள் எனக்கு நினைவில் இல்லை.
இந்த இடத்தில் இன்னொன்றைச் சொல்ல விரும்புகிறேன். அந்த ரொமாண்டிக் காட்சி, எடுக்கப்பட்டதைவிட, எழுதப்படும் போது இன்னும் அந்நியோன்யமாக எழுதப்பட்டிருந்தது. அர்ஜுன் சார் அதை ஸ்கிரிப்ட் நிலையிலேயே குறைக்க சொன்னார். ‘எனக்கு டீனேஜ் மகள்கள் இருக்கிறார்கள். நான் இனிமேலும் அப்படியான காட்சிகளில் நடிக்க முடியாது’ என்றார். அதைப் புரிந்துகொண்டு மாற்றி எழுதினேன்.
படப்பிடிப்பு பற்றியும், மாற்றி எழுதியது பற்றியும் நான் மேற்சொன்ன விவரங்கள் நடந்த உண்மையான நிகழ்ச்சிகளின் வர்ணனையே. எனது படப்பிடிப்பு தளத்துக்கு வெளியே அல்லது தனிப்பட்ட முறையில், தொலைப்பேசி அழைப்பு, சாட் என இருவருக்குள் நடந்த விஷயங்கள் பற்றி என் கவனத்துக்கு புகாராக வந்தால் மட்டுமே என்னால் அதுபற்றி பேச முடியும். இல்லையென்றால் அதைப் பற்றிப் பேசுவது சரியாக இருக்காது.
தனிப்பட்ட முறையில் அர்ஜுன் சாரும், ஸ்ருதியும் எனது நல்ல நண்பர்கள். படத்தை எடுக்கும்போது ஒரு குழுவாக, நல்ல படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மகிழ்ச்சியுடன் எடுத்தோம். அதனால் இந்த அறிக்கையைப் பதிவு செய்வது எனக்கு வருத்தமாக இருக்கிறது. மீ டூ இயக்கம் தொடர்பாக எல்லா துறைகளிலும் பெண்களுக்குப் பாதுகாப்பான பணிச்சூழலைக் கொண்டு வரவே நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் குறித்து கன்னட ஊடகங்களுக்குப் பதிலளித்துள்ள நடிகர் அர்ஜுன், “ நான் இது வரை எந்தப் பெண்ணிடமும் தவறாக நடந்து கொண்டதில்லை. என்னைப் பற்றி யாரும் இப்படியான புகார் கூறியதுமில்லை. நான் ஸ்ருதியுடன் அந்தப் படத்தில் வெறும் ஐந்து நாட்கள் மட்டுமே நடித்தேன். அவரை நான் எங்கேயும் அழைக்கவில்லை. ஸ்ருதியின் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை. மீ டூ இயக்கம் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது. ஸ்ருதி மீது வழக்கு தொடரவுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: