ஞாயிறு, 17 ஜூன், 2018

ஆதரவற்ற குழந்தைக்கு தாய்ப்பால் தந்த காவலர்!

kumarasamykumarasamyநக்கீரன் - ச.ப.மதிவாணன் : ஆதரவற்ற குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த காவலர், அந்தக் குழந்தை இறந்த செய்தியைக் கேட்டு கதறியழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் எலெக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கு அருகில் உள்ளது தொட்டதொகுரு. இந்தப் பகுதியில் கட்டுமானப்பணியில் இருக்கும் கட்டிடத்தின் அருகில், கடந்த ஜூன் ஐந்தாம் தேதி பிளாஸ்டிக் பைக்குள் சுருட்டி வைக்கப்பட்ட நிலையில் ஆண் குழந்தை மீட்கப்பட்டது. கழுத்தில் தொப்புள்கொடி சுற்றியிருந்த அந்தக் குழந்தை பிறந்து சில மணிநேரமே ஆகியிருக்கலாம்.
  தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட, குழந்தை மீட்கப்பட்டான். மிகவும் பலவீனமான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தை, அருகிலிருந்த மருத்துவமனைக்கு அவர் அழைத்துச்சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். சிகிச்சைக்குப் பிறகும் பலவீனமாக இருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு காவல்நிலையத்திற்கு விரைந்தார்
துணை ஆய்வாளர் நாகேஷ். சிகிச்சைக்குப் பிறகும் பலவீனமாக இருந்த குழந்தைக்கு, மூன்று மாத குழந்தைக்கு தாயான காவலர் அர்ச்சனா தாய்ப்பாலூட்டினார். குழந்தை போதுமான தெம்பு கிடைத்ததும் வீறிட்டு அழ, காவல்நிலையமே மகிழ்ச்சியில் குதித்தது. பிறந்த சில மணிநேரத்தில் அரசு கட்டுப்பாட்டுக்குள் வந்த குழந்தைக்கு ‘குமாரசாமி’ என பெயர்சூட்டினார் காவலர் நாகேஷ். புதிய அரசு வந்திருக்கும் நிலையில், அந்த அரசின் குழந்தையாக பிறந்திருக்கும் இவனுக்கு அந்தப்பெயர் பொருத்தமாகவே இருக்கிறது எனக்கூறி மகிழ்ந்தனர்.

இந்நிலையில், ஜெயா நகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை குமாரசாமி, உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆதரவற்ற குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த காவலர் அர்ச்சனா, குழந்தை இறந்த செய்திகேட்டு கதறியழுதார். தனது குழந்தையாக எண்ணியே தாய்ப்பால் கொடுத்ததாகவும், அவனது பிரிவு வாட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: