வெள்ளி, 22 ஜூன், 2018

தூத்துக்குடி ஸ்டெர்லைட் .. இன்னும் 200 டன் கந்தக அமிலத்தை அகற்ற வேண்டும்!

THE HINDU TAMIL : ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இன்னும் 200 டன் கந்தக அமிலத்தை அகற்ற வேண்டும் என, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் தொடர் போராட்டங்களை தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆலையில் ரசாயனம் சேமித்து வைக்கப்பட்டுள்ள டேங்கில் கசிவு ஏற்பட்டதாக கடந்த 16-ம் தேதி தகவல் கிடைத்தது. அதன்பேரில், தூத்துக்குடி சார் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நிபுணர் குழுவினர் சோதனை நடத்தினர்.
ஆலையில், அதிகமாக கந்தக அமிலம் சேமித்து வைக்கப்பட்டுள்ளதும், அதில், லேசான கசிவு ஏற்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. கந்தக அமிலம் முழுவதையும் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. கந்தக அமிலத்தை அகற்றும் பணி 18-ம் தேதி மதியம் தொடங்கியது.

கந்தக அமிலத்தை கோவை, சேலம் மற்றும் தூத்துக்குடி பகுதியில் உள்ள உரம் தயாரிப்பு உள்ளிட்ட ஆலைகளுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. எனவே, அந்த ஆலைகளுக்கு கந்தக அமிலம் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, “ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 52 டேங்கர் லாரிகளில் கந்தக அமிலம் வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளது. கசிவு ஏற்பட்ட கொள்கலனில் இன்னும் 200 டன் கந்தக அமிலம் உள்ளது. மொத்தமாக 1,100 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டது. ஓரிரு நாட்களில் முழுவதும் அகற்றப்படும்” என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: