கட்சிக்குக் கட்டமைப்பு முக்கியம் என்பதை உணர்ந்து வைத்துள்ள ரஜினி பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இப்போது ஒவ்வொரு மாவட்டமாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். தினம்தோறும் ரஜினி மக்கள் மன்ற மாநிலச் செயலாளர் ராஜூ மகாலிங்கம், நிர்வாகி சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து, ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்தான், ரஜினியை முதல்வராக முன்னிறுத்தி வரும் மே மாதம் கோவையில் மாநாடு நடத்துகிறார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன். கோவையில் உள்ள கொடீசியா வளாக மைதானத்தில் இந்த மாநாடு வரும் மே 20ஆம் தேதி நடக்கிறது.
ரஜினி அரசியலுக்கு வருவதை முன்னறிவிக்கும் வகையில், ‘ரஜினியின் அரசியல் பிரவேசம் ஏன் அவசியம்?’ என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி திருச்சியில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. தமிழருவி மணியன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் ரஜினி பெயருக்காகவே பிரமாண்டக் கூட்டம் கூடியது.
இப்போது ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்திருக்கும் நிலையில், “காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மீண்டும் ஒரு பிரமாண்ட மாநாட்டை ரஜினிக்காக நடத்த காந்திய இயக்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார் தலைவர் தமிழருவி மணியன்.
இந்த மாநாட்டுக்கு ‘முதல்வராக ரஜினியை முன்னிறுத்தும் காந்திய மக்கள் இயக்க மாற்று அரசியல் மாநாடு’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ரஜினிகாந்த்தைத் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி அறிவிப்பு வெளியிடுகிறார் தமிழருவி மணியன்” என்று அந்த இயக்கத்தின் ஊடகத் தொடர்பாளர் எஸ்.ஷங்கர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடந்த திருச்சி மாநாட்டில் ரஜினி கலந்துகொள்ளவில்லை. ஆனால், வரும் மே 20ஆம் தேதி நடக்கும் மாநாட்டுக்குள் ரஜினியின் கட்சி பெயர் அறிவிக்கப்பட்டால் இம்மாநாட்டில் ரஜினி பங்கேற்கலாம் என்று காந்திய மக்கள் இயக்க வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக