செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

6.2 கோடி ரூபாயை லதா ரஜினிகாந்து செலுத்த மூன்று மாத அவகாசம்!

மின்னம்பலம் : கோச்சடையான்
படத்துக்காக லதா
ரஜினிகாந்த் வாங்கிய கடனை 3 மாதத்தில் திருப்பி கொடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.
லதா ரஜினிகாந்துக்கு மூன்று மாத அவகாசம்!ரஜினிகாந்த், தீபிகா படுகோன் இணைந்து நடித்த 'கோச்சடையான்' அனிமேஷன் திரைப்படம் 2014ஆம் ஆண்டு வெளியானது. அந்தப் படத்திற்காக ‘மீடியா ஒன் குளோபல்’ நிறுவனம் சார்பில் லதா ரஜினிகாந்த், ‘ஆட் பீரோ’ நிறுவனத்திடம் 10 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதில் 1.5 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தியுள்ளார். மீதியுள்ள 8.5 கோடி ரூபாயைச் செலுத்தாமல் காலம் தாழ்த்தியதால் ஆட் பீரோ தனியார் நிறுவன நிர்வாகி அபிர்சந்த் நாகர், லதா ரஜினிகாந்த் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்தப் பிரச்சினை சம்பந்தமாக அபிர்சந்த் நாகர், லதா ரஜினிகாந்த் மீது குற்றச்சாட்டு வைப்பதும், அதற்குச் சரியான விளக்கமளிக்காமல் அத்தகைய குற்றச்சாட்டுகளை அவர் மறுப்பதுமாக இருந்துவந்தனர்.
“இந்தப் பிரச்சினை குறித்து லதா ரஜினிகாந்த் சரியான பதில் கூற மறுக்கிறார்.
எனவே ரஜினிகாந்த் தலையிட்டுப் பணத்தைப் பெற்றுத்தர வேண்டும்” என்று அபிர்சந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பையடுத்து ஆட் பீரோ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 20) நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் மற்றும் பானுமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஏன் ஆட் பீரோ நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் காலம் தாழ்த்துகிறீர்கள்? எப்போது கடனைத் திருப்பிச் செலுத்துவீர்கள்?' என லதா ரஜினிகாந்த் தரப்பினரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. பின்னர் மதியம் 12.30 மணிக்குள் இதற்கு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது 12 வாரங்களில் பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாக லதா ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “ரூ. 6.2 கோடி நிலுவைத் தொகையை 3 மாதங்களுக்குள் மீடியா ஒன் குளோபல் நிறுவனத்தின் சார்பில் லதா ரஜினிகாந்த் செலுத்த வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்துவைத்தனர்

கருத்துகள் இல்லை: