வெள்ளி, 8 டிசம்பர், 2017

தொப்பி சின்னம் கொங்கு முன்னேற்ற சாதிகட்சிக்கு ... எடப்பாடி பழனிசாமியும் அதே ...

தொப்பி சின்னத்தை வாங்கிக் கொடுத்தது  அதிமுகவா?மின்னம்பலம் :ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சின்னத்தைக் கைப்பற்றுவதும், வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படுவதுமே முதல்கட்ட வெற்றியாகக் கருதப்படும் நிலையில், டி.டி.வி.தினகரன் எந்த தொப்பி சின்னத்துக்காக டெல்லி வரை சென்று போராடினாரோ, அதை மிக எளிதாக பெற்றிருக்கிறது, நமது கொங்கு முன்னேற்றக் கழகம் என்ற கட்சி.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொப்பி சின்னம் தினகரனுக்கு கிடைத்துவிடக் கூடாது என்று கடுமையான காய் நகர்த்தலில் ஈடுபட்ட நிலையில் கொங்கு கட்சி ஒன்றுக்குத் தொப்பி சின்னம் கிடைத்திருப்பது அரசியல் அரங்கில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் பிறகுதான் இந்தக் கட்சியைப் பற்றி பலருக்கும் தெரிய ஆரம்பித்திருக்கிறது.

‘நமது கொங்கு முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சி மிக அண்மையில் உருவானது. கொங்கு நாடு மக்கள் கட்சித் தலைவராக பெஸ்ட் ராமசாமி இருந்தபோது அக்கட்சியில் மாநில நிர்வாகியாக இருந்தவர் காங்கேயம் தங்கவேல். ஈஸ்வரன் பிரிந்த பிறகு இவரும் கொ.ம.கவில் இருந்து பிரிந்து ‘நமது கொங்குமுன்னேற்றக் கழகம்’ என்று தனிக் கட்சி ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிலையில்தான் திடீர் என்று ஆர்.கே.நகருக்கு வந்து தன் கட்சி சார்பில் தன் நெருங்கிய உறவினர் ரமேஷை வேட்பாளராக நிறுத்தி தொப்பி சின்னத்தையும் பெற்றிருக்கிறார்.
தொப்பியை பெற்று வெளியே வந்த நமது கொங்கு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் காங்கேயம் தங்கவேலுவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
ஆர்.கே.நகருக்கும் நமது கொங்கு முன்னேற்றக் கழகத்துக்கும் என்ன தொடர்பு?
இதென்ன கேள்வி? நாங்களும் தமிழகத்தில்தான் இருக்கிறோம். கொங்கு என்பது எங்கள் தாய் மண்ணின் பெயர். அந்தப் பெயரில் கட்சி ஆரம்பித்தால் கொங்கு பகுதியில்தான் போட்டியிட வேண்டுமா? ஆர்.கே.நகரில் சட்ட விதிகளுக்குட்பட்டுதான் போட்டியிடுகிறோம். நாங்கள் பதிவு பெற்ற அரசியல் கட்சி. அந்த அடிப்படையில் போட்டியிடுகிறோம்.

ஆர்.கே.நகரில் உங்கள் கட்சி இருக்கிறதா? இங்கே யாருக்காவது உங்கள் கட்சியைப் பற்றி தெரியுமா?
எங்கள் கட்சி பெரிய கட்சி என்று நான் சொல்ல மாட்டேன். நாங்கள் வளர்கிற கட்சிதான். எங்களுக்கு சென்னையில் நிர்வாகிகள் இருக்கிறார்கள். எங்கள் வேட்பாளர் ரமேஷுக்கு 30 பேர் தொகுதியில் இருந்து முன்மொழிந்திருக்கிறார்கள்.
வேட்பாளர் ரமேஷ் யார்? அவருக்கு எந்த ஊர்?
வேட்பாளர் ரமேஷ் எங்கள் கட்சியில் இளைஞரணியில் இருக்கிறார். எனது உறவினரும் கூட. ஈரோட்டுக்காரர். விஷாலுக்கு எந்த ஊர் என்று யாராவது கேட்டீர்களா? கங்கை அமரனுக்கு எந்த ஊர் என்று அவர் நிற்கும்போது கேட்டீர்களா? பாஜக சார்பில் நிற்கும் கரு.நாகராஜன் எந்த ஊர் என்று கேட்டீர்களா? தினகரனுக்கு எந்த ஊர் என்று கேட்டீர்களா? ஆர்.கே.நகர் தமிழகத்தில்தானே இருக்கிறது? எங்களை மட்டும் ஏன் கேட்கிறீர்கள்?
தொப்பி சின்னத்தை பெற தினகரன் கடுமையாகப் போராடிய நிலையில் திடீரென நீங்கள் கடைசி நாளில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்து ஆர்.கே.நகரில் வந்து நின்று தொப்பி சின்னத்தைப் பெறுவதில் ஆளுங்கட்சியின் பங்கு இருக்கிறது என்று பேசப்படுகிறதே?
நாங்கள் கொங்கு கட்சி என்பதால், முதல்வரும் கொங்கு பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் இப்படி சில பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் சில மாதங்கள் முன்பு வரை நாங்கள் திமுக அணியில்தான் இருந்தோம். மதுரை ஜல்லிக்கட்டு வெற்றிக் கூட்டம், திருச்சியில் நடந்த திமுக போராட்டம் போன்றவற்றில் நான் எங்கள் கட்சியின் சார்பாக கலந்துகொண்டு பேசியிருக்கிறேன். திமுக அணியில் திருமாவளவன் இணையத் தொடங்கியபோது நாங்கள் வெளியே வந்தோம். அதிமுக அரசை விமர்சித்துக் கொண்டுதான் வந்தோம்.
ரகசியமாக வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?
தொப்பி சின்னம் கிடைத்ததால்தான் நீங்களே பேட்டி எடுக்கிறீர்கள். இல்லையென்றால் என்னை பேட்டி எடுப்பீர்களா? ரகசியமாக எல்லாம் போட்டியிடவில்லை. பத்திரிகையாளர்கள் எங்களைக் கண்டுகொள்ளவில்லை. அவ்வளவுதான்.
தொப்பி சின்னத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்?
நிச்சயமாக நாங்கள் யாருக்காகவும் நிற்கவில்லை. எங்களுக்காகத்தான் நிற்கிறோம். கொங்கு நாட்டில் கோவை செழியன், ஆடிட்டர் பாலசுப்பிரமணியன், பெஸ்ட் ராமசாமியோடு பயணித்திருக்கிறோம். தமிழ் தேசியக் கட்சி தொப்பி சின்னத்தில் நின்றிருக்கிறது. கொங்கு ஈஸ்வரன் கூட தொப்பி சின்னத்தில் நின்றிருக்கிறார். எனவே, தொப்பி சின்னம் என்பது எங்களோடு நீண்ட காலத் தொடர்புடையது.
தொப்பி சின்னம் கிடைத்தவுடன் ஆளுங்கட்சியிடம் இருந்தோ... தினகரன் தரப்பிடம் இருந்தோ யாராவது பேசினார்களா?
யாரும் பேசவில்லை. எதற்காக எங்களிடம் பேச வேண்டும்?
அதிமுக ஆட்சியை பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?
சூப்பராக ஆட்சி நடத்துகிறார்கள் என்றும் சொல்ல முடியாது. ஆட்சி சரியில்லை என்றும் சொல்ல முடியாது.
பேசி முடித்துவிட்டு தொப்பியைப் போட்டுக் கொண்டு வேட்பாளர் ரமேஷுடன் கிளம்பிவிட்டார் காங்கேயம் தங்கவேல். ஆர்.கே.நகரில் இன்னும் பல ஆச்சர்யங்கள் நடக்கும் போல!
- ஆரா

கருத்துகள் இல்லை: