சனி, 9 டிசம்பர், 2017

குஜராத்.. காங்கிரஸ் பக்கம் வீசுகிறதா வெற்றிக்காற்று?- முடிவை நிர்ணயிக்கும் 'ஜி.எஸ்.டி, மும்மூர்த்திகள்'

tamilthehindu : குஜராத்தில் நடக்கப்போவது சாமானியர்களை பொருத்தவரை சட்டப்பேரவைத் தேர்தல். ஆனால், பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு அப்படிஅல்ல. 2019-ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தல் எனும் மிகப்பெரிய கதைக்கு எழுதும் முன்னோட்டமாகும்.
தங்களுக்கு உரிய சந்தேகங்கள், குறைபாடுகளை தெரிந்து கொள்வதற்காக காங்கிரஸ், பாஜக நடவு செய்துள்ள பரிசோதனைச் செடிதான் குஜராத் தேர்தல். போட்டி, சந்தேகம், நிச்சயமற்றதன்மை ஆகியவற்றுக்கு இடையிலான போட்டிதான் குஜராத் தேர்தல் என்று கூறலாம்.
இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள மாநிலம் குஜராத். கடந்த 1960-ம் ஆண்டு மே1-ம் தேதி ஒருங்கிணைந்த மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பிரிந்து, குஜராத் மாநிலம் தனியாக உருவானது. 4.33 கோடி வாக்காளர்கள் கொண்ட அந்த மாநிலத்தில் இதுவரை 13 சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளன.

1960ம் ஆண்டில் இருந்து 1995ம் ஆண்டு வரை குஜராத் மாநிலத்தில், காங்கிரஸின் "கை" ஓங்கி இருந்தது. ஆனால், 1975ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவசர நிலையைக் கொண்டு வந்த பின் குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு சரியத் தொடங்கியது
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரம், தீவிர  இந்துத்துவா கொள்கை ஆகியவற்றை வலியுறுத்தி செய்த பிரசாரம் பாஜகவுக்கு பலன் கொடுத்தது.  குஜராத்தில் 1996 தேர்தலில் முதல் முறையாக பா.ஜனதா ஆட்சியைப் பிடித்தது.
அப்போது இருந்து கடந்த 22 ஆண்டுகளாக கேசுபாய் படேல், சங்கர் சிங் வகேலா, திலிப் பாரீக், நரேந்திர மோடி, ஆனந்தி பென் , விஜய் ரூபானி என முதல்வர்கள் பல மாறினாலும், ஆட்சியை பாஜக தொடர்ந்து தக்கவைத்து வருகிறது.
இந்நிலையில், 14-வது சட்டப்பேரவைக்கான தேர்தல் அந்த மாநிலத்தில் இரு கட்டங்களாக வரும் 9, 14 தேதிகளில் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை 18-ம் தேதி நடக்கிறது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 13 தொகுதிகள் எஸ்.சி. பிரிவினருக்கும், 26 தொகுதிகள் எஸ்.டி. பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டவையாகும். காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் மிகப்பெரிய கவுரவப் பிரச்சினையாக இந்த தேர்தல் உருவெடுத்து இருக்கிறது.
கடந்த 22 ஆண்டுகளாக ஆட்சியைப் பறிகொடுத்து, எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் கட்சி அமர்ந்திருக்கிறது. அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு, மக்களின்  எண்ண ஓட்டத்தை அளவிடும் கருவியாக இந்ததேர்தலை கருதுவதால், வெற்றிக்கு அந்த கட்சி தீவிரமாக உழைக்கிறது.
பாஜகவை எடுத்துக்கொண்டால், 2001ம் ஆண்டு நிலநடுக்கம், 2002ம் ஆண்டு கோத்ரா கலவரம் உள்ளிட்ட அழிவு சம்பவங்களுக்கு பின்பும் தேர்தல் முடிவில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வளர்ச்சி என்ற விஷயத்தை பிரதானமாக வைத்து, பாஜக தனது ஆட்சியை தொடர்ந்து 22 ஆண்டுகளாக தக்கவைத்து வருகிறது.
பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகிய இரு மிகப்பெரும் சக்திகளின் சொந்த மாநிலம் குஜராத் என்பதால், இங்கு அடையும் தோல்வி மோடிக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கு இருக்கும் ஆதரவை மக்கள் மத்தியில் குறைத்துவிடும். ஆதலால் இந்த தேர்தலுக்கு அந்த கட்சி மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு சமீபத்தில் மேற்கொண்ட சில பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் அந்த கட்சிக்கு இந்த தேர்தலில் பெருத்த பின்னடைவைத் தரலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
குறிப்பாக ரூபாய் நோட்டு தடை(பணமதிப்பு இழப்பு), சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) ஆகியவை மக்கள் மத்தியில் எதிர்மறையான அலையை உருவாக்கி வருகிறது.
குஜராத் மாநிலத்தில் வர்த்தகம் செய்யும் மார்வாடி, படேல், தாக்கூர் சமூகத்தினரும், சிறு, குறுந்தொழில் செய்யும் பிரிவினரும் அதிகமான உள்ளனர். ஆனால், ஜி.எஸ்.டி. பணமதிப்பிழப்பு நடவடிக்கையில், இவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மோடியின் ரூபாய் நோட்டு தடைக்கு தொடக்கத்தில் ஆதரவு அளித்த மக்கள், அதன் நீண்டகால பாதிப்பால் பாதிக்கப்பட்டு, இப்போது ஐந்தில் 3 பங்கினர் எதிராக இருக்கிறாரக்ள்.
சரியான திட்டமிடல் இன்றி கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பால், குஜராத் மாநிலத்தில் ஜவுளிதொழில், பட்டுநெசவுத் தொழில், பட்டு ஜரிகை வேலைப்பாடு,  கண்ணாடித் தொழில், கட்டுமானம், நூற்பாலைகள்  ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன.
மோடியின் சொந்த மாநிலத்திலேயே பா.ஜனதாவின் பொருளாதார கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. வர்த்தகர்கள், சிறு, குறு தொழில் செய்பவர்கள் கண்டனப் பேரணியும் நடத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்த்தனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த, மத்திய அரசு,  ஜி.எஸ்.டி. கவுன்சிலைக் கூட்டி, குஜராத் மாநிலத்துக்கு தொடர்புடைய  பொருட்களுக்கு மட்டுமே வரியைக் குறைத்தது.
இப்படி பொருளாதார சவால்கள் ஒருபுறம் பா.ஜனதாவுக்கு இருக்கும், நிலையில், , 3 முக்கிய சக்திகள் பாரதிய ஜனதாவுக்கு எதிராக குஜராத் தேர்தலில் புறப்பட்டு இருக்கிறார்கள்.
பா.ஜனதா கட்சியை ஒரு காலத்தில் வெற்றிப் படிகட்டில் ஏற்றி அழகுபார்த்த படேல் சமூகத்தினர் இன்று அந்த கட்சிக்கு எதிராகவே திரும்பி இருக்கிறார்கள்.
படேல் அண்டோலன் சமிதியின் தலைவரும் 24வயதான ஹர்திக் படேல், பிற்படுத்தப்பட்ட மக்கள், பழங்குடிகள், தலித்துகள் அடங்கிய “ஏக்தா மஞ்ச்” அமைப்பின் தலைவர்களான ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாக்கூர் ஆகியோரே பா.ஜனதாவுக்கு இந்ததேர்தலில் பெரும் சவாலாக இருக்கப்போகிறார்கள்.
ஒரு கட்டத்தில் இடஒதுக்கீடு வேண்டாம் எனக் கேட்ட படேல் சமூகத்தினர், தற்போது கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி ஹர்திக் படேல் தலைமையில் புறப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்த கருத்துக்கணப்பில் படேல் சமூகத்தினர் 58 சதவீதம்  பேர்  பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால், இம்மாத தொடக்கத்தில் ஏ.பி.பி., நடத்திய கருத்துக்கணிப்பில் அந்த ஆதரவு 20 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
படேல் சமூகத்தினரின் போராட்டத்தை அடக்க பாஜக அரசு கையாண்ட முறையும், ஹர்திக் படேல் மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்குகளும் நிலைமையை தலைகீழாக மாற்றிவிட்டது. இனிமேல் படேல் சமூகத்தினரை தன் பக்கம் இழுப்பது என்பது பா.ஜனதாவால் முடியாது. கேசுபாய் படேல் காலத்தில் கையை சுட்டுக்கொண்ட  அனுபவம் பா.ஜனதாவுக்கு மறக்காது.
அடுத்ததாக ஜிக்னேஷ் மேவானியும், அல்பேஷ் தாக்கூரும் பாஜக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விடக்கூடாது என்று போராடி வருவதும் அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாகும். இந்த 3 இளைஞர்களின் நிலைப்பாடு, எழுச்சி, காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துவிட்டது. இதில் அல்பேஷ் தாக்கூரின் தந்தை ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதால், அவர் அந்த கட்சியில் இணைந்துவிட்டார்.
தலித்மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞர் ஜிக்னேஷ் மேவானி சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவருக்கு கனிசமான அளவில் தலித் மக்களும், முஸ்லிம்களும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல், மாநிலத்தில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற பொருளாதார பிரச்சினைகள் இந்தத் தேர்தலில் பாஜக வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.
குறிப்பாக பெண்கள் ஆதரவு பாஜகவின் இதுநாள் வரையிலான வெற்றிக்கு பக்கபலமாக இருந்து வந்தது. ஆனால், இம்மாத தொடக்கத்தில் ஏ.பி.பி., சி.எஸ்.டி.எஸ் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் பெண்களின் ஆதரவும் குறைந்துள்ளது.
பாஜகவுக்கு ஆகஸ்ட் மாதத்தில் 52 சதவீதம் இருந்த பெண்களின் ஆதரவு கடந்த 3 மாதத்தில் 43 சதவீதமாக குறைந்துவிட்டது. அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்கு பெண்கள் மத்தியில் ஆதரவு 42 சதவீதமாக உயர்ந்துவிட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஒவ்வொரு கட்டத்திலும் பாஜக மக்கள் மத்தியில் சிறிது, சிறிதாக தன்னுடைய ஆதரவை இழந்து வருகிறது என்று தெரியவருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஏ.பி.பி., சி.எஸ்.டி.எஸ். அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே 30 சதவீதம் வாக்கு வித்தியாசம் இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் நடத்திய கருத்துக்கணப்பில், பாஜகவுக்கு 144 முதல் 155 இடங்கள் வரை கிடைக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 26 முதல் 32 இடங்கள் மட்டுமே கிடைக்கும் எனக் கூறப்பட்டு இருந்தது.
அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு லேசான சறுக்கல் ஏற்பட்டு, 113 முதல் 121 இடங்கள் வரையிலும், காங்கிரஸ் கட்சிக்கு 70 முதல் 80 இடங்கள் வரை கிடைக்கும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 90 முதல் 99 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 80 முதல் 86 இடங்கள் வரை கிடைக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், ஒட்டுமொத்த வாக்குசதவீதத்தை கணக்கிடும் போது, இரு கட்சிகளுக்கும் சமமாக, 43 சதவீதம் வாக்குகள் கிடைக்கலாம் எனக்கூறப்பட்டு இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியும், ராகுல்காந்தியின் எழுச்சியும் பா.ஜனதாவின் வெற்றியை  பின்னுக்கு இழுத்துள்ளன என்பதையே இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.
முதல் கட்டத் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளும், 2-ம் கட்ட தேர்தலுக்கு 7 நாட்களும் இருப்பதால், முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
ஆனால், உத்தரப்பிரதேசத்தில் பா.ஜனதா கட்சி பெற்ற அசுரத்தனமான ,வெற்றியை குஜராத் நிச்சயம் கொடுக்கப்போவதில்லை. பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் மதில்மேல் பூனையாக வெற்றி அமர்ந்திருக்கிறது. யார் பக்கம் தாவப்போகிறதோ தெரியவில்லை.. 18-ம் தேதி பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை: