சனி, 9 டிசம்பர், 2017

மீனவர்களை மீட்கக் கோரி சென்னையில் 2,000-க்கும் மேற்பட்டோர் போராட்டம்-

tamilthehindu: நொச்சிக்குப்பத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சென்னை மீனவர்கள். | படம்: எல்.சீனிவாசன்
ஒக்கி புயலால் நடுக்கடலில் மாயமான மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும் என்றுகோரி, சென்னையில் மீனவ குடும்பத்தினர் 2,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நொச்சி குப்பத்தில் தொடங்கிய போராட்டம் தற்போது சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 25 கிராமங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் குமரி மீனவர்களை மீட்கக் கோரிப் போராடி வருகின்றனர்.
   
முன்னதாக அவர்கள் தலைமைச் செயலகத்தில் முற்றுகைப் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து கலங்கரை விளக்கத்தில் கூடிய அவர்களுக்கு அங்கே போராட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சேப்பாக்கத்தில் மீனவ குடும்பங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மெரினாவில் கூடிய மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போலீஸார்.
படம்: எல்.சீனிவாசன்
 ஐந்து கோரிக்கைகள்
தாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் குறித்துப் பேசிய போராட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன் மற்றும் மீனவர் சங்கத் தலைவர் கு.பாரதி, ''போர்க்கால அடிப்படையில் துரிதமான மீட்புப்பணியில் ஈடுபட்டு, காணாமல் போன 1,159 மீனவர்களைக் கரை சேர்க்க வேண்டும்; கடலில் இறந்து மிதக்கும் மீனவர்களின் உடல்களை அடையாளம் கண்டு, சம்பந்தப்பட்ட குடும்பத்துக்குக் கொடுக்கவேண்டும்; ஒக்கி புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சமும் (குறைந்தபட்சம் கேரள அரசு தன் மீனவர்களுக்கு வழங்கியுள்ள ரூ.20 லட்சம்) அரசுப் பணியும் வழங்க வேண்டும்;
சென்னையிலேயே இருக்காமல் கேரள முதல்வரைப் போல தமிழக முதல்வரும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவ கிராங்களுக்குச் சென்று, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்து அதிக அளவில் நிதி கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறோம்'' என்றனர்.
காவல்துறையினர் பேச்சுவார்த்தை
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுடன் இணை ஆணையர் மனோகரன் மற்றும் துணை ஆணையர் சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது சேப்பாக்கத்தில் கூடியுள்ள மீனவர்கள். படம்: எல்.சீனிவாசன்
 கோரிக்கைகள் குறித்து விளக்கி, மனுவை அளிக்க முதல்வர் அல்லது துணை முதல்வர் நேரம் ஒதுக்கி தங்களை சந்திக்கவேண்டும் என்று காவல் துறையினரிடம் மீனவ கிராமங்களின் பிரதிநிதிகள் கோரியுள்ளனர். இந்நிலையில் மீனவ கிராமங்களில் இருந்து ஏராளமானோர் சேப்பாக்கத்தை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.
மீனவர்களை மீட்கக்கோரி தமிழகத்தின் கடைக்கோடியில் (கன்னியாகுமரி) நடைபெற்றுவரும் போராட்டத்தைத் தொடர்ந்து தலைநகரிலும் போராட்டம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: