வெள்ளி, 8 டிசம்பர், 2017

உமாராணி ... உதவி இயக்குனர் ஆணவகொலையா .. வன்னியசாதி கணவன் மீது சந்தேகம்?


தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் சிவா என்கிற கர்ணன் (வயது 30). இவரும் பட்டவர்த்தியை  சேர்ந்த உமாராணி(28) என்பவரும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
உமாராணி திருமணத்திற்கு முன்பு சினிமா இயக்குனர்கள் பாலுமேகந்திரா மற்றும் சரண் ஆகியோருடன் உதவி இயக்குனராகவும், நடன கலைஞராகவும் பணிபுரிந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த உமாராணி மீண்டும் சென்னைக்கு சென்று சினிமாவில் வேலை பார்ப்பதற்காக தனது கணவர் சிவாவிடம் கூறியதாக தெரியவந்தது.
அப்போது சிவா மறுப்பு தெரிவித்ததால் இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த உமாராணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் உமாராணியின் பலியானதில் மர்மம் இருப்பதாகவும், அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் அவருடைய உறவினர்கள் தரப்பில் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.
தர்மபுரியில் திரண்ட உமாராணியின் உறவினர்கள் அவருடைய மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தினால் மட்டுமே பிரேத பரிசோதனை செய்து உடலை பெறுவோம் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை உமாராணியின் உறவினர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைமறியல் காரணமாக தர்மபுரி-சேலம் சாலையில் 20 நிமிடங்கள் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தர்மபுரி போலீஸ் துணை சூப்பிரண்டு காந்தி, இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது உமாராணியின் மரணத்தில் உள்ள சந்தேகம் தொடர்பாக அவருடைய கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உதவி கலெக்டர் விசாரணை மூலம் உண்மையை கண்டறிய வேண்டும். உமாராணியின் மரணம் தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள். இந்த சம்பவத்தால் தொடர்ந்து இன்று 4-வது நாளாக உமாராணியின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் அரசு ஆஸ்பத்திரியிலேயே வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி நந்தன் கூறுகையில், உமாராணியின் மர்ம மரணம் குறித்து காலம் தாழ்த்தாமல் உரிய விசாரணை நடத்தி போலீசார் உண்மையை கண்டறிய வேண்டும். அதற்கான நடவடிக்கையை எடுக்காவிட்டால் அதை கண்டித்து மாவட்ட அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இந்த சம்பபவம் தொடர்பாக தர்மபுரி போலீஸ் அதிகாரி கூறியதாவது:
தற்கொலை செய்து கொண்ட உமாராணிக்கும், சிவாவிற்கும் திருமணமாகி ஒன்றை வருடங்கள் ஆவதால் இந்த வழக்கு குறித்து நாங்கள் எதுவும் விசாரிக்க முடியாது. முதலில் அரூர் ஆர்.டி.ஒ விசாரணைக்கு பிறகுதான் உமாராணி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அடித்து கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: