சனி, 9 டிசம்பர், 2017

அரசியலமைப்புச் சட்டத்தின் பல பகுதிகள் செத்துவிட்டன - நாகநாதன் பேட்டி

tamilthehindu சமஸ் :திமுகவின் சித்தாந்தக் குரல்களில் முக்கியமானவர் நாகநாதன். தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பொருளாதார நிபுணர்களில் ஒருவர். அரசியலமைப்புச் சட்டத்திலும் நிபுணத்துவம் உடையவர். பெரியார், அண்ணா, கருணாநிதி என்று திராவிட இயக்கத்தின் மூன்று பெரும் ஆளுமைகளுடனும் உறவில் இருந்தவர். குடும்பப் பின்னணி சார்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இயக்கங்களின் செயல்பாடுகளையும் நெருக்கத்தில் பார்த்தவர். கருணாநிதியின் நடைப்பயிற்சி இணையுமான நாகநாதன், திமுக ஆட்சியில் மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவராகவும் இருந்தவர். வரலாற்றில் தொட்டு திராவிட இயக்கம், தமிழகம், இந்தியா செல்ல வேண்டிய பாதை என்றெல்லாம் பேசினார் நாகநாதன்.
தேசிய இயக்கம், பொதுவுடைமை இயக்கம் இவை இரண்டிலிருந்தும் திராவிட இயக்கத்தை எப்படி வேறுபடுத்துவீர்கள்? அதாவது, உங்களுடைய தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில்? 
 நான் பிறந்தது திருவாரூர். பின்னாளில் வளர்ந்ததெல்லாம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில். சின்ன வயதிலேயே திராவிட இயக்கப் பற்று வந்துவிட்டது. விசித்திரம் என்னவென்றால், எங்கள் குடும்பத்தில் நான்தான் அப்படி. காங்கிரஸ் குடும்பம்.  தாய்மாமா எம்.எஸ்.ராஜா சுதந்திரப் போராட்ட வீரர். ஆகையால், என் அம்மாவே என்னைக் கடுமையாகக் கண்டிப்பார். ஆனால், எனக்குத் திராவிட இயக்கம்தான் பிடித்தது.

இளம் பிராயத்திலேயே பெரியார்மீது ஒரு ஈர்ப்பு. சிந்தாதிரிப்பேட்டை ‘விடுதலை’ அலுவலகத்துக்கு அவர் வரும்போது எங்கள் தெரு வழியாகத்தான் அவருடைய வேன் போகும். நாங்கள் சிறுவர்கள் எல்லாம் வேனின் பின்புறத்தில் தொற்றிக்கொண்டு போவோம். உள்ளே போனால், சாக்லேட் கொடுப்பார். பேசுவார். அந்தக் கருத்துகள் அப்படியே உள்ளே போய்விட்டன. சின்ன வயதிலேயே காமராஜரையும் பார்த்துவிட்டேன். ஒரு கூட்டத்துக்கு வந்திருந்தார். கூட்டம் முடித்து குளக்கரை ஒதுக்கத்தில் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தவர் சிறுவர்கள் எங்களைப் பார்த்ததும் அப்படியே அதைக் கீழே போட்டுவிட்டு ‘சாரி’ என்றார். அதுவே பெரிய மரியாதையை உண்டுபண்ணிவிட்டது. பின்னாளில் நிறைய அவருடன் பேசியிருக்கிறேன். அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  அதேபோல என்னுடைய மாமனார் க.ரா.ஜமதக்னி தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர். மார்க்ஸிய அறிஞர். சம்ஸ்கிருத மொழியையும் கசடறக் கற்றவர். ‘மூலதனம்’ 6 தொகுதிகளையும் மொழிபெயர்த்தவர். ஆக, தேசிய இயக்கம், பொதுவுடைமை இயக்கம் இரண்டையும் வெறுமனே புத்தகங்கள் அல்லது வெளியே தெரியும் காட்சிகள் வழியாக மட்டும் அல்லாமல் நான் உள்வாங்கியிருக்கிறேன். இரண்டு இயக்கங்களிலும் உள்ள நல்ல விஷயங்களை நிறைய எடுத்துக்கொண்டிருக்கிறேன். நான் எப்போதும் அணியும் கதராடைகூட அப்படி எடுத்துக்கொண்டதுதான். ஆனால், இந்தியாவில் எல்லாப் பிரச்சினைகளுக்குமான வேருமே இங்கே சாதியிலும் தீர்வுகள் சமூக நீதியிலும் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. திராவிட இயக்கம்தான் அதைப் பேசியது. பின்னாளில் எல்லாத் தத்துவங்களையும் உள்வாங்கிய பிறகு, திராவிட இயக்கத்தின் மீதான மரியாதை மேலும் அதிகமானதே தவிர குறையவில்லை.

ஒரு பொருளாதார ஆய்வாளராக திராவிடக் கட்சிகளின் ஆட்சியை மதிப்பிடச் சொன்னால், எதைப் பிரதானமான சாதனையாகச் சொல்வீர்கள்?
 அறிஞர் பால் சீட்டன் சொல்வார், “சமூகத் தளத்தில்தான் பொருளாதார நடவடிக்கைகள் இயங்கும்” என்று. பொதுவாக நம் நாட்டில் சமூக நீதி, சமூக நலத் திட்டங்கள் சார்ந்து வளர்ச்சியை அணுகும் ஆய்வுகள் இன்னும் உரிய கவனம் பெறவில்லை. தமிழ்நாட்டை வளர்ச்சியின் முன்னுதாரணமாக அமர்த்திய சென் குறிப்பிடும் வரை தேசிய ஊடகங்கள், ஆய்வாளர்கள் என்றெல்லாம் சொல்லிக்கொள்பவர்கள் திராவிடக் கட்சிகளின் சமூக நலத் திட்டங்களை ‘இலவச அரசியல்’ என்றும் ‘வெகுஜன கவர்ச்சி அரசியல்’ என்றும்தானே ஏகடியம் பேசிக்கொண்டிருந்தார்கள்? இப்போது தமிழ்நாட்டைப் பார்த்து தேசியக் கட்சிகள் ஆளும் ஏனைய மாநிலங்களிலும் இதே போன்ற திட்டங்களை முன்னெடுக்கும்போதுதானே ‘சமூக நலத் திட்டம்’ என்று பெயர் மாறுகிறது!

பொருளாதாரம் சார்ந்தே திராவிடக் கட்சிகளின் மிக முக்கியமான சாதனை என்று சமூக நீதி, இடஒதுக்கீட்டில் அவர்கள் காட்டிய அக்கறையைக் குறிப்பிடுவேன். ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான அவர்களுடைய அடுத்த சாதனை சமூக நலத் திட்டங்கள். சமூகமும் பொருளாதாரமும் இணைகிற புள்ளிகள் இவை. ஓர் உதாரணம்- குழந்தைகள் நலத் திட்டம் தமிழ்நாட்டில் இருப்பது மாதிரி இந்தியாவில் வேறு எங்கேயும் இல்லை. குழந்தைதானே முதலில்?  அதனுடைய உடல்நிலை பலவீனமாக இருக்கும்போது, எப்படி எதிர்காலத்தில் வளர்ச்சி ஏற்படும்? 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, ‘பிமாரு மாநிலங்கள்’ என்று சொல்லப்படும் உத்தர பிரதேசம், பிஹார் உள்ளிட்ட இந்தி மாநிலங்களில் மட்டும் 51% குழந்தைகள் வளராத குழந்தைகளாக இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இந்தியாவின் வறுமை நிலம் என்று இந்த மாநிலங்களைச் சொல்கிறோம். இரண்டையும் பொருத்திப் பாருங்கள். ஆனால், தமிழகத்திலோ நிலைமை நேர் எதிர். காரணம், சத்துணவுத் திட்டம். இதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால், ஒரு சத்துணவுத் திட்டத்தைச் செயல்படுத்தக்கூட சமூக நீதி எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது என்பதை நான் விளக்குகிறேன். முதலில் நீதிக் கட்சி அதை ஒரு சின்ன அளவில் கொண்டுவருகிறது. பின்னாளில், காமராஜர் அதை மதிய உணவுத் திட்டமாகக் கொண்டுவருகிறார். எம்ஜிஆர் அதைச் சத்துணவாக்குகிறார். எம்ஜிஆர் பெயரிலேயே இருந்தாலும்கூட அந்தத் திட்டத்தின் பெயரைக்கூட மாற்றாமல் கலைஞர் அதை மேலும் மேம்படுத்துகிறார். சனிக்கிழமையும் சேர்த்து வாரம் ஆறு முட்டை போடுகிறார். அடுத்து ஜெயலலிதா அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு 13 வகையான கலவை சாதம் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவருகிறார். எவ்வளவு பெரிய தொடர்ச்சி! தொடக்கத்தில் “இது திட்டம் இல்லை. சாப்பிடுவது எப்படி வளர்ச்சிக் கணக்கில் வரும்?” என்று ஏகடியம் பேசிய திட்டக் குழு, பின்னாளில் சத்துணவுத் திட்டத்தை ஒரு தேசியக் கொள்கையாக அறிவித்தது. அதாவது, 45 வருடங்களுக்குப் பிறகு. ஆனாலும், வெற்றி பெறவில்லை! ஏன்? இங்கேதான் சமூக நீதிக்கு ஒரு அரசியல் இயக்கம் கொடுக்கும் முக்கியத்துவம் வருகிறது.

சாதிக்கு எதிரான திராவிட இயக்கத்தின் போராட்டம் சாதி உணர்வை இங்கே ஒழிக்கவில்லை என்றாலும், சாதி வெறியை இல்லாமல் ஆக்கியிருக்கிறது. ஆனால், ஏனைய மாநிலங்களின் நிலை அதுவல்ல. பல மாநிலங்களில் சத்துணவுக்கூடம் வந்தபோது, எல்லாச் சாதியினரும் எப்படி ஒன்று சேர்ந்து உட்கார்ந்து, ஒரே சாப்பாட்டைச் சாப்பிடுவது என்ற பிரச்சினை வந்தது. பிஹாரில் முதல் சமையல் கூடம் திறக்கப்பட்டபோது, சமையலர் ஒரு தலித் பெண் என்பதற்காக அந்த உணவையே கொண்டுபோய்க் கொட்டினார்கள். நாடாளுமன்றம் இதுகுறித்து விவாதித்தது. என்ன விவாதித்தது? சாப்பாட்டுக்குப் பதில் பேசாமல் பிஸ்கட் கொடுத்துவிடலாமா என்று விவாதித்தது. ஆனால், “ஏன் பிராமணப் பிள்ளைகளுக்கும் ஏனைய பிள்ளைகளுக்கும் ஒரே இடத்தில் சாப்பாடு போட மறுக்கிறீர்கள்?” என்று சேரன்மாதேவி குருகுலம் விவகாரத்தில் வ.வே.சு.அய்யருடன் மோதி,  வகுப்புவாரி உரிமை விவகாரத்தில் ராஜாஜியோடும் கசந்து காங்கிரஸிலிருந்தே பெரியார் வெளியே வந்த வரலாறு தமிழ்நாட்டினுடையது.

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட பெண்கள்தான் பள்ளிகளில் அதிக அளவில் சமையலர்கள். ஏன் பிரச்சினை நடக்கவில்லை? இங்கேதான் திராவிட இயக்கத்தின் வேலை இருக்கிறது. அது காமராஜரோ ஜெயலலிதாவோ யார் திட்டத்தைத் தொடங்கினாலும் களம் தயாராக இருக்க வேண்டும் இல்லையா? அந்த வேலையை இங்கே பெரியார் பார்த்திருக்கிறார். திராவிடர் இயக்கம் - திராவிடக் கட்சிகள் தொடர்ந்து பார்த்திருக்கின்றன என்று சொல்கிறேன். தமிழ்நாட்டின் கல்வி, சுகாதாரத் துறை வளர்ச்சியை ஒப்பிட வேண்டும் என்றால், முன்னேறிய நாடுகளுடன்தான் ஒப்பிட வேண்டும்; ஏனைய இந்திய மாநிலங்களுடன் ஒப்பிட முடியாது என்றார் அமர்த்திய சென். மத்திய அரசு கல்விக்கு உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தியில் 3.2% செலவிடும்போது, தமிழ்நாடு 10.2% செலவிடுகிறது. மத்திய அரசு பொதுச் சுகாதாரத்துக்கு 1.5% செலவிடும்போது, தமிழ்நாடு 13% செலவிடுகிறது. இந்தத் துறைகளின் வளர்ச்சிதான் பொருளாதார வளர்ச்சிக்கும் வழி அமைத்திருக்கிறது. உலகிலேயே சிறந்த அரசு குழந்தைகள் மருத்துவமனை சென்னை எழும்பூர் மருத்துவமனை. உலகின் மிகச் சிறந்த கால்நடைப் பல்கலைக்கழகங்களில் ஒன்று வேப்பேரி மருத்துவமனை. இந்த இரண்டையும் தொடர்புபடுத்திப்பாருங்கள். வளர்ச்சி என்பதன் பின்னணியிலுள்ள தொலைநோக்கும் அர்ப்பணிப்பும் புரியும்!

தமிழகத்தில் தொழில் துறை அடைந்திருக்கும் வளர்ச்சி போதுமானது என்று நினைக்கிறீர்களா?
 போதுமானது என்று சொல்ல மாட்டேன். அதேசமயம், அடைந்திருக்கும் வளர்ச்சி சாதனை என்று சொல்வேன். இந்தியப் பொருளாதாரம் என்பது குஜராத்தி பொருளாதாரம்தான். நேரு காலத்தில் வந்த அன்சாரி குழு அறிக்கையே தேசிய அளவில் 80% பொருளாதாரம் குஜராத்திகள் கையில் இருப்பதைச் சொன்னது. குஜராத்திலும் மகாராஷ்டிரத்திலும் குஜராத்திகள் தங்களை நிலைநிறுத்திக்கொண்டதன் விளைவாக, இந்த இரு மாநிலங்கள் போக மிச்ச 20% பொருளாதாரத்துக்குள்தான் ஏனைய எல்லா மாநிலங்களின் பொருளாதாரமும் உள்ளடக்கம். நவீன இந்தியாவில் தமிழ்ச் சமூகத்தை ஒரு பெரும் வணிகச் சமூகம் என்று சொல்ல முடியாது. தவிர, நம் நாட்டு அரசியலமைப்புச் சட்டப்படி, தொழில் துறையில் தனிப் பாதையில் செல்ல மாநில அரசுக்கு என்று பெரிய அதிகாரங்களும் கிடையாது. இப்படிப்பட்ட சூழலில் இன்று மகாராஷ்டிரம், குஜராத்துக்கு அடுத்த நிலையில் தொழில் துறையில் தமிழகம் இருக்கிறது என்றாலே அது பெரிய சாதனை!

விவசாயமும் அப்படித்தான். உத்தர பிரதேசம், பஞ்சாப் போன்ற பல மாநிலங்களின் நீர், நில வளத்தோடு தமிழ்நாட்டை ஒப்பிடவே முடியாது. அதைத் தாண்டியும் நாம் சாதித்திருக்கிறோம். நம்முடைய விவசாயிகளில் 98% பேர் சிறு விவசாயிகள். காரணம், திராவிட இயக்க ஆட்சியில் இங்கே நிலங்கள் பெரிய அளவில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நில உச்ச வரம்புச் சட்டம், நிலமற்றோருக்கான இரண்டு ஏக்கர் நிலமளிப்புத் திட்டம் இரண்டாலும் பெரிய அளவில் சாத்தியமானது இது. இன்னொன்றையும் சொல்ல வேண்டும். தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் மட்டும் 70% வரி வருவாயை டெல்லிக்குத் தருகின்றன. டெல்லியிடம் தமிழ்நாடு 100 ரூபாய் கொடுத்துவிட்டு 10 ரூபாய் வாங்குகிறது என்றால், உத்தர பிரதேசம் 10 ரூபாய் கொடுத்துவிட்டு 100 ரூபாய் வாங்குகிறது. பக்தவத்சலம் காலத்திலேயே, நிதிக் குழுவுக்கு 1966-ல் ஒரு அறிக்கை கொடுத்தார். தமிழ்நாட்டை நீங்கள் வஞ்சிக்கக் கூடாது என்றார். இப்படியான வஞ்சனை இன்று வரை தொடர்கிறது. இந்த வஞ்சனைக்கு இடையிலும்தான் எல்லாக் கட்டமைப்புகளும் இங்கே உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அரசியலமைப்புச் சட்டச் சீர்திருத்தம் தொடர்பாகத் தொடர்ந்து பேசிவருபவர் நீங்கள். இன்றைய சூழலில் உங்களிடம் கேட்டால் மாற்றத்துக்கான முன்மொழிவு என்னவாக இருக்கும்?
 அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள் இவை தவிர நம்முடைய அரசியலமைப்பில் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று சொல்வேன். அடிப்படையிலேயே அது மக்கள் கருத்தைக் கேட்டு உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் அல்ல; நிபுணர்களின் அரசியலமைப்புச் சட்டம். பெண்களுக்கு ஓட்டில்லாத காலத்தில், பணக்காரர்களுக்கு மட்டும் - வெறும் 3% மக்களுக்கு மட்டும் ஓட்டுரிமை இருந்த காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் விவாதித்து உருவாக்கப்பட்டது அது. அதை உருவாக்கியவர்கள் என்னவோ பெரிய நிபுணர்கள்தான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால், பெரும்பான்மை மக்களின் கருத்துகளை அது புறந்தள்ளிவிட்டதே! விளைவாகத்தானே மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை அது கொண்டிருக்கிறது. காந்தியே அது உருவாக்கப்படும்போது தன் அதிருப்தியைத்தானே வெளியிட்டார்? கூட்டாட்சி முறையில் அமைக்கப்பட்ட ஒன்றியம் என்று இந்தியாவை நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. ஆனால், மாநிலங்களுக்கு என்ன அதிகாரம் இங்கே இருக்கிறது?

ஓர் உதாரணம், ஒளிபரப்பு உரிமை மத்தியப் பட்டியலில் இருக்கிறது. ஏன்? என்ன தேவை? இன்றைக்கு இத்தனை தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் இருக்கின்றன, வானொலி நிலையங்கள் இருக்கின்றன. ஆனால், மாநில அரசு தொடங்க முடியாது! ஒரு முதலமைச்சரின் உதவிச் செயலாளருக்கு இணையான அதிகாரம்கூடக் கிடையாது அகில இந்திய வானொலி நிலையத்தின் இயக்குநர் பதவிக்கு. ஆனால், ஒரு முதலமைச்சர் அவசர நிமித்தம் மக்களிடம் உரையாற்ற நினைத்தால், அவரிடம் போய் முதலமைச்சர் அனுமதி கேட்டு நிற்க வேண்டும். இது சரியா? இதுதான் இந்தியாவின் அரசியலமைப்பா என்று நான் கேட்கவில்லை. நேருவையும் படேலையும் பார்த்து  பட்டாபி சீதாராமைய்யா கேட்ட கேள்வி இது. அரசாங்கத்தை மக்கள் நம்பும்போது, மக்களை அரசாங்கம் நம்ப வேண்டும். ஆனால், இந்திய அரசாங்கம் மக்களை நம்ப மறுக்கிறது. அதற்கான சாட்சியமாகவே நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறது.  அதனால்தான் அண்ணா கேட்டார், “ஏன் மக்களை நம்ப மறுக்கிறீர்கள்?” உள்ளபடி நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் பல பகுதிகள் இன்று செயலிழந்து, செத்துவிட்டன. ஒரு மாநில அரசு பெரிய துறைமுகம் ஒன்றை நிறுவ வேண்டும் என்று நினைத்தால், இன்றைக்கும் முடியாது. ஏனென்றால், அதற்கான அதிகாரம் மத்தியப் பட்டியலில் இருக்கிறது. ஆனால், அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் துறைமுகங்களை வாரிக் கொடுக்கிறார்களே, எப்படி? எந்த அரசியலமைப்புச் சட்டப்படி இதை நடைமுறைப்படுத்துகிறார்கள்? ராணுவம், நாணயம், வெளியுறவு இந்த மூன்று துறைகள் சம்பந்தமான அதிகாரங்களைத் தவிர, ஏனைய எல்லா அதிகாரங்களையும் மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்.

தனிப்பட்ட வகையில் நீங்கள் முன்மாதிரியாக முன்னிறுத்தக் கூடிய அரசியலமைப்புச் சட்டம் எதுவாக இருக்கும்? 
 அமெரிக்காவினுடையது. அதன் அளவே கவரக் கூடியது. திருத்தங்கள், இணைப்புகள் எல்லாம் சேர்த்தே 74 பக்கங்கள்தான். மாகாணங்களுக்கு எவ்வளவு உரிமைகள்! ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு சட்டம்!  இவ்வளவு பெரிய அளவே நமக்கு வேண்டாம் என்று நினைக்கிறேன். உலகின் மிகப் பெரிய அரசியலமைப்புச் சட்டத்தை ரஷ்யா கொண்டிருந்தது. 1991-ல் உடைந்துவிட்டது. அடுத்த மிகப் பெரிய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவினுடையது. பல்லாயிரக்கணக்கான பக்கங்கள். இந்த அபாயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்று காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்களை எப்படிப் பாதுகாத்துவருகிறது இந்திய அரசு? தண்டகாரண்யத்தின் நிலை என்ன? படைகளையும் கடுமையான சட்டங்களையும் கொண்டு எவ்வளவு நாள் மக்களை ஆள முடியும்? மக்கள் கேட்பது அதிகாரம். அதைக் கொடுத்தால் ஏன் பிரிவினை கேட்கப்போகிறார்கள்? நீங்கள் அதிகாரத்தை மறுக்கும்போதும், அவர்களைப் பாரபட்சமாக நடத்தும்போதும்தான் அவர்கள் சுதந்திரம் கேட்கிறார்கள். மாநிலங்கள் தங்களைச் சமமாக உணர வேண்டும் என்றால், எல்லோரையும் சமமாக நடத்தும் இடத்தில் இந்த ஒன்றிய அரசு தன்னை அமர்த்திக்கொள்ள வேண்டும் என்றால், ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்று செயல்படத்தக்க அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வேண்டும். ஆனால், இந்திய அரசோ நேர் எதிரான பாதையில்தான் போகிறது. மாநிலங்களிடம் உள்ள வரிவிதிப்பு அதிகாரத்தையும் ‘பொதுச்சரக்கு மற்றும் சேவை வரி’ (ஜிஎஸ்டி) மூலமாக மறைமுகமாகப் பறித்துவிட்டவர்களை வேறு எப்படிப் பார்ப்பது?

திமுக முன்னிறுத்தும் பல விஷயங்கள் தேசிய விவகாரங்கள். ஆனால், ஏன் அவை தேசிய அளவில் அவ்வளவு முக்கியத்துவத்தைப் பெறவில்லை?
 சமூக நீதி கவனம் பெற்றது. விளைவாகவே இன்றைக்கு தேசிய அளவில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27% இடஒதுக்கீடு கிடைத்திருக்கிறது. மாநில சுயாட்சிக்காக ராஜமன்னார் குழு ஆணையத்தை அமைத்து, அதன் பரிந்துரைகளைப் பிரதமருக்கு அனுப்பினார் கலைஞர். காஷ்மீர், பஞ்சாப், வங்கம், அஸாம் வரை குரல்கள் ஒலித்தன. என்ன பிரச்சினை என்றால், சாதியிலிருந்து விடுபட நினைக்கும் மனம்தான் எல்லா இடங்களிலும் சமத்துவத்தை இங்கே விரும்பும். வெறுமனே காங்கிரஸ், பாஜக அல்லாத இயக்கம் அல்லது மாநிலக் கட்சி என்பதாலேயே அவர்கள் சித்தாந்தம் மாறிவிடுவதில்லையே? உதாரணமாக, இந்தி ஆதிக்க விவகாரத்தில் சமாஜ்வாதி கட்சிக்கும் பாஜகவுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? ஆம்ஆத்மி கட்சிக்கு இதுகுறித்தெல்லாம் என்ன பார்வை இருக்கிறது?

ஆக, இங்கே இப்படியான கருத்தாக்கங்களை தேசிய அளவில் ஒரு தொடர் விவாதமாகக் கொண்டுசெல்வதே சவால். அப்புறம் டெல்லி - அது காங்கிரஸோ, பாஜகவோ - உண்டாக்கும் எதிர்வினைகள். திமுக பிளவைச் சந்திக்க 1971-ல் மாநில சுயாட்சி கோரிக்கையை அது உரக்கப் பேசியது ஒரு காரணம் என்பதை ஊர் அறியும். தமிழர் பிரச்சினைகளில் உறுதியாக நின்றதாலேயே கலைஞர் ஆட்சி இரு முறை கலைக்கப்பட்டது. இதையெல்லாம் விடுங்கள். மாநிலங்கள் தங்களுக்குள் உரையாடிக்கொள்வதை டெல்லி விரும்புகிறதா? கிடையாது என்கிறேன். 2015-ல் மாநிலங்களிடை மன்றம் கூட்டப்பட்டது 10 வருஷ இடைவெளிக்குப் பிறகு. அடுத்த கூட்டம் எப்போது நடக்கும்? தெரியாது!  1956-ல் மாநிலச் சீரமைப்பு மசோதா வந்தபோது, ஸோனல் கவுன்சில் கூட்டம் என்று ஒன்றைக் கூட்டினார்கள். நன்றாகச் சென்றுகொண்டிருந்தது. பிறகு மத்திய அரசு அதில் தலையிட்டது. இன்று செயலற்றதாகிவிட்டது. மாநிலங்களைச் சந்தேகக் கண்ணோட்டத்திலேயே டெல்லி பார்ப்பதை ஒரு இழிவாகவே கருதுகிறேன். அதன் தடைகளை மீறி தமிழ்நாடு பேசும் விஷயங்கள் தேசிய விவாதம் ஆகும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை. அதேபோல, அவை எளிதானதும் இல்லை.

பெரியார், அண்ணா, கருணாநிதி மூன்று பேரிடமுமே பழகியிருக்கிறீர்கள். ஒப்பிட முடியுமா?
 பெரியார் இறுகப் பிடிப்பார். அண்ணா விட்டுப் பிடிப்பார். கலைஞர் சில இடங்களில் பெரியார் மாதிரியும் சில இடங்களில் அண்ணா மாதிரியும் இருப்பார். அவர் பெரியார், அண்ணாவின் கலவை. அந்தந்தக் காலகட்டங்கள் ஊடாகவே மூவரையும் ஒப்பிட வேண்டும். அப்படிப் பார்த்தால் மூவரும் அவரவர் காலகட்டங்களுக்கான காரியங்களைச் செய்திருக்கிறார்கள். எதற்கும் அஞ்சாத துணிச்சலும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மனிதர்களை அணுகும், அரவணைக்கும் குணமும் கலைஞரிடம் எனக்குப் பிடித்தமானவை. இவையும் திராவிட இயக்க மரபின் தொடர்ச்சிதான். நெருக்கடி நிலைக் காலகட்டத்தில் எல்லாம் எவ்வளவு உறுதியாக நின்றார்! அதேபோலத்தான் அரவணைப்பும். பல முறை அவரிடம் கருத்து வேறுபட்டிருக்கிறேன். சண்டை போட்டிருக்கேன். “கட்சிக்குள் என்னோடு சண்டை போடுபவர்கள் இருவர். ஒருவர் மாறன், இன்னொருவர் நாகநாதன்” என்றே சொல்லியிருக்கிறார். காலையில் கடுமையான விவாதம் நடந்திருக்கும். இரவு தொலைபேசியில் அழைப்பார். “நாகநாதன், என்ன கோச்சுக்கிட்டியா? உன் கருத்தை நீ சொன்னய்யா, சரியாக்கூட இருக்கலாம். என் கருத்தை நான் சொன்னேன். பேசுவோம். நாளைக்குக் காலையில வாக்கிங் வராம இருந்திடாத!” என்பார். அவர் அதிகாரத்தின் எவ்வளவு உயரத்தில் இருக்கும்போதும் இந்தத் தன்மையை இழந்ததில்லை. நெருக்கடி நிலையின்போது திமுகவுக்குத் தடை விதிக்கப்படலாம் என்ற சூழல் இருந்தது. கலைஞர், நாவலர், நான் மூவரும் பீச்சில் உட்கார்ந்திருக்கிறோம். நாவலர் சொன்னார், “தடை செஞ்சா என்ன? வேற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கிடுவோம்! அதற்கு ஏன் கவலைப்படுறீங்க?” அதற்கு கலைஞர் சொன்னார், “அப்படியில்ல நாவலர், திராவிட முன்னேற்றக் கழகம்கிறது அண்ணா தொடங்கியது. அண்ணாவோட உயிர் அதில் இருக்குது. அப்படியே தடை விதிச்சாக்கூட கட்சியைக் கொஞ்ச நாளைக்குத் தள்ளி வெச்சி நடத்தலாம். எம்ஜிஆர் ஒரு கட்சியை வெச்சிருக்கார்ல! அதுலேயும் அண்ணாவும் திமுகவும் இருக்கு. நாம அதைப் பார்த்து ஆறுதல் அடைஞ்சுக்குவோம்! ஆனா, திமுக திரும்ப முளைக்கும் நாவலர்!” எதற்காகச் சொல்கிறேன் என்றால், அதிமுகவைப் போட்டியாகப் பார்த்தாரே அன்றி அது இல்லாமல் போக வேண்டும் என்று அல்ல. இவையெல்லாம்தான் திராவிட இயக்கம் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய பண்புகள் என்று நினைக்கிறேன்.

திராவிடக் கட்சிகள் இன்று எதிர்கொள்ளும் மிகப் பெரிய குற்றச்சாட்டு ஊழல். அதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்?
 திருவாரூரில் சாம்பசிவம் என்று ஒரு செல்வந்தர் இருந்தார். பங்களா வீடு. வாசலில் புலியைக் கட்டிப்போட்டிருப்பார்கள். பிரமுகர்கள் யார் வந்தாலும் தன்னுடைய வீட்டில் தங்க வைப்பதை ஒரு கௌரவமாகக் கருதினார். நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான கி.ஆ.பெ.விசுவநாதம் அவரது வீட்டில் தங்கியிருந்தபோது, அவரைப் பார்ப்பதற்காகக் கலைஞர் சென்றிருக்கிறார். வெள்ளை ஜிப்பா. கீழ்ப்பாய்ச்சி வேஷ்டிக்கட்டு. ஒரே சந்தனம், ஜவ்வாது மணம். அவர் வந்த தோரணையைப் பார்த்து ‘அரசியலில் ஈடுபட வேண்டும் என்றால், இவ்வளவு படாடோபம் வேண்டுமா’ என்று மிரண்டுவிட்டாராம் கலைஞர். அடுத்த ஒரு மாதத்தில் திருவாரூருக்கு அண்ணா வந்திருக்கிறார். திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ராமன் வீட்டில் தங்கியிருக்கிறார். அப்போதுதான் அண்ணாவை முதல் முறை சந்திக்கிறார் கலைஞர். மூக்குப்பொடி கறை படிந்த வேட்டி, சட்டை. எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் படித்துக்கொண்டிருந்தாராம். என்னுடைய அத்தானும்கூடச் சொல்லியிருக்கிறார். திருச்சிக்கு வந்திருந்தபோது சத்திரத்தில் ஒரு கிழிந்த பாயில், மேல் சட்டையைத் தலைக்குச் சுருட்டி வைத்துக்கொண்டு அண்ணா படுத்துத் தூங்கிக்கொண்டிருந்ததை.
எவ்வளவு பெரிய பேச்சாளர்! சித்தாந்தி! அவர் அளவுக்கு எளிமை தமிழ்நாட்டில் யாரிடமும் கிடையாது.

நீதிக் கட்சிகளின் முன்னோடிகள் ஆகட்டும்... பெரியார் ஆகட்டும் தன்னுடைய சொத்துகளை அழித்துப் பொதுச் சமூகத்தை வளர்த்தவர்கள். அவர்கள் வழிவந்த கட்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு. பெரியார் பொது ஒழுக்கத்தை ரொம்பவும் மதிப்பார். கூட்டத்தில் கடவுள் வாழ்த்து என்று சொன்னதும் எழுந்து நின்றுவிடுவார். அப்புறம் அதே கூட்டத்தில் “கடவுள் இல்லை”  என்றும் பேசுவார். “பொது ஒழுக்கம் சமூகத்தால் கட்டப்பட்டது; அதைச் சிதைப்பது நம் வேலை இல்லை!” என்பார். எனக்கு அதில் பெரிய நம்பிக்கை உண்டு. ஏனென்றால், அதுதான் உங்களுக்கு ஒரு தார்மிகத் தகுதியையும் பலத்தையும் தருகிறது.

நான் கடைப்பிடித்த நேர்மை காரணமாக என் வாழ்க்கையின் பெரும் பகுதியை ஒண்டிக்குடித்தனத்தில்தான் கழித்தேன். திட்டக் குழுத் துணைத் தலைவராக இருந்தபோதுகூட வாடகை வீட்டில்தான் இருந்தேன். போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்றேன். அரசு காரையும் சொந்தப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தியதே இல்லை. இப்போதுள்ள வீட்டின் மேல் இன்னும் ரூ.10 லட்சம் கடன் இருக்கிறது. எதற்காக இவ்வளவையும் சொல்கிறேன் என்றால், நானும் திராவிட இயக்கத்திலிருந்து வந்தவன்தான். ஊழல் எதிர்ப்பாளிதான். ஆனால், ஒரு அரசியல் கட்சியையோ தலைவரையோ பார்த்து இதேபோல எளிமையாக, ஊழலுக்கு எதிராக இருந்துவிட முடியும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், ஊழல் என்பது ஒரு அரசியல் கட்சி அல்லது தலைவர் சம்பந்தப்பட்டது மட்டும் இல்லை.

இன்றைக்கு எந்த அரசியல் இயக்கத்தில் ஊழல் இல்லை? நீங்கள் டெல்லியில் நடக்கும் ஊழலின் சிறு முனையைக்கூட மாநிலங்களில் பார்க்க முடியாது. ராணுவ பேரங்களில் எவ்வளவு புரளும் என்பதை டெல்லியில் இருந்தால் புரிந்துகொள்ள முடியும். இந்தியாவில் பொதுவெளிக்கு வரும் ஊழல்களில் பெரும்பாலானவை ஏன் கீழ்நிலைச் சமூகங்களையும் மாநிலக் கட்சிகளையும் மட்டுமே குறிவைக்கின்றன? தேசியக் கட்சிகளைச் சேர்ந்த ஆதிக்கச் சாதிக்காரர்கள் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டிருக் கிறார்கள்? அமைப்புரீதியாகவே இங்கே ஊழல் நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது என்ற உண்மைக்கு நாம் முகம் கொடுக்காமல் இதை விவாதிக்க முடியாது!

திராவிடக் கட்சிகளில் தலித்துகள், முஸ்லிம்களின் பங்கேற்பு குறைந்துவருகிறது. திராவிடக் கட்சிகள் இடைநிலைச் சாதிகளின் கட்சிகள் ஆகிவருகின்றன என்கிற குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதல்லவா?
 பழைய தமிழ் உணர்வு மீட்டெடுக்கப்பட வேண்டும். சாதி உணர்வு, மத உணர்வு இவையெல்லாம் சமூகத்தில் தூண்டப்பட்டுக்கொண்டேதான் இருக்கும். அரசியல் களத்தில் தமிழ் உணர்வு உயிர்ப்போடு இருந்தால்தான் அவற்றை எதிர்கொள்ள முடியும். தலித்துகள் அதிகாரத்துக்கு வருவதற்காக திமுகவில் ஒதுக்கீடே கொண்டுவந்தார் கலைஞர். அந்த அக்கறை மாவட்டச் செயலர்கள் முதல் வட்டச் செயலர்கள் வரை சென்றடைய வேண்டும். சித்தாந்தரீதியாகக் கட்சியைப் பலப்படுத்துவதே அதற்கான ஒரே வழி.

ஆனால், சித்தாந்தரீதியாக இன்று பெரும் சரிவை திமுக சந்தித்திருக்கிறது. அண்ணாவுக்குப் பின் கட்சியைச் சித்தாந்தரீதியில் வளர்த்தெடுக்கத் தவறிவிட்டதன் விளைவு என்று இதைச் சொல்லலாமா?
 ஒரு பெரிய சரிவு நடந்திருக்கிறது. அது உண்மை. மாறனின் மரணம் மேலும் ஒரு கடுமையான பின்னடைவு ஆகிவிட்டது. ஒரு தீவிரமான அறுவைச் சிகிச்சைக்கு திமுக தயாராகித்தான் ஆக வேண்டும். இளைஞர்கள் பங்கேற்பு கட்சியில் போதுமான அளவுக்கு இல்லை என்பது அதைத்தானே காட்டுகிறது. தாங்கள் எங்கிருந்து வந்தோம், தங்களுடைய பலம் என்ன, தங்களுடைய சாதனைகள் என்ன என்பதெல்லாமே தெரியாத இடத்தில் கட்சியில் இன்று பலர் இருக்கிறார்களே! ஸ்டாலினிடம் இதைத்தான் லியுறுத்தியிருக்கிறேன். மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அவரும் கட்சியைச் சித்தாந்தத் தளத்தில் வளர்த்தெடுப்பதில் பெரும் ஆர்வத்தோடு இருக்கிறார். சித்தாந்தரீதியாக திமுக பெறப்போகும் பலத்தில்தான் அதன் வளர்ச்சியும் எதிர்காலமும் இருக்கிறது. திமுக அப்படிப் பெறப்போகும் சித்தாந்த பலமே இந்தியாவையும் தூக்கி நிறுத்தும்!

- நவம்பர், 2017, ‘தி இந்து’

கருத்துகள் இல்லை: