திங்கள், 4 டிசம்பர், 2017

18 மீனவர் உடல்கள் கேரளத்தில் கரை ஒதுங்கின

tamilthehindu : இந்திய கடற்படை கப்பல் மூலம் மீட்கப்பட்ட மீனவர் ஒருவரை, திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு அழைத்து வரும் கடற்படை வீரர்கள். ‘ஒக்கி’ புயலில் மாயமான மீனவர்களை மீட்கும் பணியில் தமிழக, கேரள அரசுகள் முனைப்புடன் செயல்பட்டுவரும் நிலையில், கேரள கடற்கரையில் 18 மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. பல்வேறு இடங்களில் இருந்து தமிழக மீனவர்கள் 2,124 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வங்கக் கடலில் உருவான புயல் கடந்த 30-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை பலத்த சேதத்துக்கு உள்ளாக்கியது. 967 வீடுகள் சேதமடைந்தன. 3,728 மின்கம்பங்கள் முறிந்து விழுந்து, ஒட்டுமொத்த மாவட்டமும் இருளில் மூழ்கியது. இதனை சீரமைப்பதற்காக விருதுநகர், மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்துள்ள மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், நாகர்கோவிலில் சில இடங்களிலும், பரவலாக ஒரு சில கிராமங்களிலும் மின் விநியோகம் சீராகியுள்ளது.

புயலின்போது கடலுக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் இன்னும் கரை திரும்பவில்லை என உறவினர்களும் மீனவப் பிரதிநிதிகளும் குற்றம்சாட்டி வருகின்றனர். மீனவர்களை மீட்டுத்தரக்கோரி குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் குமரியில் முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் புயல் சேதங்களை நேற்று ஆய்வு செய்தார்.

தீவுகளில் மீனவர்கள் தஞ்சம்

குமரியில் காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணியில், கடலோர காவல் படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் யமுனா, ஐஎன்எஸ் சாகர் காரி, ஐஎன்எஸ் நெரிக் பிசிக் ஆகிய பெரிய கப்பல்கள், ராஜாளி என்ற போர் கப்பல் உள்ளிட்ட 11 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.

97 மீனவர்கள் மாயம்

அதேபோல் கடற்படைக்குச் சொந்தமான விமானம், ஹெலிகாப்டரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. இதில் லட்சத்தீவுக்கு அருகில் உள்ள ஆளில்லா தீவுக் கூட்டங்களில் குமரி மீனவர்கள் தஞ்சம் அடைந்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “குமரியில் இருந்து மாயமான 39 படகுகளைத் தேடி வந்தோம். அதில் 6 படகுகள் திரும்பி வந்துள்ளன. குமரியில் 1,229 விசைப்படகுகள் உள்ளன. அதில் 945 படகுகள் பாதுகாப்பாக உள்ளன. 182 படகுகளில் சென்ற 2,124 மீனவர்கள் மீட்கப்பட்டு கேரளா, கர்நாடகா, குஜராத், கோவா, மகாராஷ்டிரா மற்றும் லட்சத்தீவுகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். கல்பேனியா தீவில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 63 மீனவர்கள் உட்பட 173 பேர் இருப்பது, ஹெலிகாப்டர் தேடுதலின்போது தெரியவந்துள்ளது.
இதேபோல், மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் துறைமுகத்தில் கரை ஒதுங்கிய மீனவர்களை மீட்டுவர குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி 97 மீனவர்கள் மட்டுமே மாயமாகி உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

கரை ஒதுங்கிய உடல்கள்

இதனிடையே, கேரள மாநில கடற்கரைகளில் நேற்று முன்தினம் 7 உடல்கள் கரை ஒதுங்கின. நேற்று காலையில், விழிஞ்ஞம் துறைமுகப் பகுதியில் 5, திருவனந்தபுரத்தில் 2, கொச்சியில் 3, லட்சத்தீவில் ஒன்று என 11 உடல்கள் கரை ஒதுங்கின. இதன்படி மொத்தம் 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம் உட்பட அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. சந்தேகத்தின் அடிப்படையில் அவற்றை பார்ப்பதற்காக தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து சில மீனவர்களின் குடும்பத்தினர் அங்கு விரைந்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் குமரி மாவட்ட பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என குமரியை நேற்று பார்வையிட்ட தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

நிர்மலா சீதாராமன்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருவனந்தபுரத்தில் புயல் பாதிப்பை பார்வையிட்ட பிறகு, ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார். சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளை நேற்று மாலை பார்வையிட்ட அவர், “இப்பாதிப்புகளில் இருந்து குமரி மாவட்ட மக்கள் மீள்வதற்கு மத்திய அரசு துணை நிற்கும். உங்கள் தேவைகள் நிறைவேறும்” என்றார்.

கருத்துகள் இல்லை: