திங்கள், 2 அக்டோபர், 2017

காட்டலோனியா ஸ்பெயினில் இருந்து பிரிவதற்கு பொதுவாக்கெடுப்பு 90 வீத மக்கள் ஆதரவு வாக்கு!

தினத்தந்தி :ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து தனிநாடு கோரும் காட்டலோனியாவில் பரபரப்பான சூழ்நிலையில் பொது வாக்கெடுப்பு நடந்தது. பார்சிலோனா, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக காட்டலோனியா திகழ்கிறது. இதன் தலைநகரமாக பார்சிலோனா விளங்குகிறது. வடகிழக்கு ஸ்பெயினில் செழிப்பான பகுதி, காட்டலோனியாதான். ஸ்பெயின் நாட்டின் மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர் இங்கு வாழ்கிறார்கள். நாட்டின் ஏற்றுமதியில் 25.6 சதவீத பங்களிப்பை இந்த மாகாணம்தான் செய்கிறது. ஸ்பெயினின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் காட்டலோனியாவின் பங்கு 19 சதவீதம் ஆகும். ஸ்பெயினுக்கு வருகிற அன்னிய நேரடி முதலீட்டில் 20.7 சதவீதம் இந்த மாகாணத்துக்குப் போகிறது. இந்த மாகாணத்தில் கூடுதல் சுயாட்சி உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும், ஸ்பெயின் அரசியல் சட்டம் அதை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை.
அங்கு கடந்த 5 ஆண்டுகளாக தங்கள் தலையெழுத்தை தாங்களே நிர்ணயித்துக்கொள்வதற்காக சுய நிர்ணய அதிகாரம் (தனி நாடு) வேண்டும் என்ற உணர்வு தலைதூக்கி வந்தது. ஆனால் ஸ்பெயின் ஒற்றுமையாளர்கள், “காட்டலோனியா அதிகாரமிக்க தன்னாட்சி மாகாணமாக திகழ்கிறதே அது போதாதா?” என வாதிடுகின்றனர்.

இந்த நிலையில் ஸ்பெயினில் இருந்து தனி நாடாக வேண்டுமா அல்லது ஸ்பெயினுடன் இணைந்தே இருக்கலாமா என்பது பற்றி பொதுமக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த அந்த மாகாண அரசு முடிவு செய்தது. ஆனால் இதை ஸ்பெயின் அரசு அங்கீகரிக்கவில்லை. அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டும் அங்கீகாரம் தரவில்லை.

அதை மீறி நேற்று அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டிருந்தபோதும், வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டிருந்த பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட கட்டிடங்களில் மக்கள் வெள்ளமென குவிந்தனர். பள்ளிக் கூடங்களில் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுடன் வெள்ளிக்கிழமை இரவில் இருந்தே தங்கி வந்தனர். பொதுவாக்கெடுப்பை முறியடிப்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். போலீசாரின் நடவடிக்கையை அமைதியான முறையில் எதிர்க்குமாறு தனிநாடு ஆதரவாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் போலீசார் ஓட்டுப்பெட்டிகளையும், வாக்குச்சீட்டுகளையும் கைப்பற்றத் தொடங்கி உள்ளதாக ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் கூறியது. ஆனாலும் வாக்காளர்கள் எந்தவொரு வாக்குச்சாவடிக்கு சென்றும் வாக்கு அளிக்கும் உரிமையை காட்டலோனியா மாகாண அரசு வழங்கியது.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. ஒன்றில், காட்டலோனியா தனி நாடு ஆவதை ஆதரிப்பவர்களும், மற்றொன்றில் தனிநாடு எதிர்ப்பாளர்களும் ஓட்டு போட்டனர். ஆனால் ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய், “அரசியல் சாசனத்துக்கு எதிரானதுதான் இந்த ஓட்டெடுப்பு” என்று கூறினார்.

மாகாண அரசு ஒரு தரப்பானதாக செயல்படுவதாக ஸ்பெயின் அரசின் செய்தி தொடர்பாளர் மென்டஸ் டி விகோ குற்றம் சாட்டினார். இந்த நிலையில் இந்த பொதுவாக்கெடுப்பு எத்தகைய மாற்றத்தை நிகழ்த்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை: