வெள்ளி, 27 ஜனவரி, 2017

கோக் – பெப்சியை புறக்கணித்த வணிகர்களுக்கு வாழ்த்து மடல் !

Vellaiyanல்லிக்கட்டுக்கான தடையை எதிர்த்து மெரினாவில் சுமார்  200 மாணவர்கள் தொடங்கிய போராட்டம் தமிழகத்தின் லட்சக்கணக்கான மாணவர்கள் போராட்டமாக விரிவடைந்து, மக்கள் போராட்டமாக உருவெடுத்து தமிழகத்தையே உலுக்கி எடுத்துவிட்டது. இது வெறும் காளைக்கான போராட்டமாக மட்டும் இல்லாமல் காவிரி பிரச்சனை முதல் அமெரிக்க கோக் மற்றும் பெப்சி போன்ற உயிர்கொல்லி பானங்களை தடை செய்ய வேண்டும் என போராட்டத்தின் கோரிக்கைகள் விரிவடைந்தன. தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களும் கோக், பெப்சியை தடை செய்ய வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கைகளை எதிரொலித்தனர். அதன் விளைவாக தமிழகத்தின் மிக முக்கிய வணிகர் அமைப்புகள் இனி கோக், பெப்சியை விற்கப்போவதில்லை என அறிவித்துள்ளன. திரு. த.வெள்ளையன் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை  ஜனவரி 26 முதலும், திரு விக்கிரமராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரும் மார்ச் 1 ந்தேதி முதலும் கோக்,பெப்சியை விற்கப்போவதில்லை என்று அறிவித்திருப்பது கோக், பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனக்களுக்கும், அவற்றை இங்கே கொண்டு வந்து நிறுவிய மத்திய – மாநில அரசுகளுக்கும் விழுந்த செருப்படி.

திரு. த.வெள்ளையன்
இதுபோன்ற பன்னாட்டு கொலைகார நிறுவனங்கள் நம் நாட்டையும், மக்களையும் சூறையாட வழிவகுத்த தனியார்மயம் -தராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்க கொள்கைகளை எதிர்த்து கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்த்து விடாப்பிடியாக போராடி வந்த புரட்சிகர அமைப்புகளான  மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகியவை வணிகர்களின் இந்த முடிவை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது. தமிழகத்தின் வற்றாத ஜீவநதியாகவும், மூன்று மாவட்ட மக்களின் உயிராதாரமாகவும் விளங்கும் தாமிரவருணி ஆற்றை அமெரிக்க கோக் கம்பெனிக்கு தாரை வார்த்து தமிழக மக்களுக்கு துரோகமிழைத்தது தமிழக அரசு. கங்கை கொண்டானில் தாமிரவருணி ஆற்று தண்ணீரை உறிஞ்சி எடுத்துக்கொள்வதோடு, கழிவு நீரை ஆற்றிலேயே விட்டு ஆற்றையே நஞ்சாக்கி மூன்று மாவட்ட மக்களை, ஆடு, மாடுகளை,விவசாயத்தை, இயற்கையை அழிக்க கோக் ஆலை அமைத்த போது தாமிரவருணி எங்கள் ஆறு……… அமெரிக்க கோக்கே வெளியேறு…….. என்று 2005 -ல் நெல்லையில் போர் முழக்கமிட்டது எமது புரட்சிகர அமைப்புகள்.
திரு விக்கிரமராஜா
திரு விக்கிரமராஜா
அதன் தொடர்ச்சியாக பல்வேறு வடிவங்களில் தொடச்சியான போராட்டங்களை தனியாகவும், வணிகர் சங்க அமைப்புகளுடன் இணைந்தும் நடத்தி வந்தது. எமது மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் தேசத்துரோகி ஆகனும்னா பெப்சிய குடி…. வெள்ளக்காரன் வாரிசுனா கோலா குடி…..,  பெப்சி கோக் மிராண்டா …… பெரியாஸ்பத்திரி வராண்டா….. சொன்ன பேச்ச கேக்கலனா சுண்ணாம்புதாண்டா…… என்ற பாடல்கள் தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் மக்கள் மத்தியில் ஒலித்தன. இருப்பினும் அமெரிக்க மோகம், நுகர்வு மோகத்தால், நடிகர் – நடிகைகளின் விளம்பர மோகத்தால் மாணவர்கள் ஒரு பண்பாடாக பரவியிருந்த்த கோக், பெப்சியை இன்று அதே மாணவர்கள் தன்மானம், சுமரியாதையோடு தூக்கியெறிந்துவிட்டார்கள்.
பொருளாதாரத்தை இழப்போம், ஆனால் தன்மானத்தை இழக்கமாட்டோம்  என்று  கோக் – பெப்சி விற்பனையை தடை செய்துள்ள வணிகர்களுக்கு உழைக்கும் வர்க்கத்தின் சார்பில் வாழ்த்துவது எமது கடமை என்ற அடிப்படையில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநில தலைவர் தோழர் அ. முகுந்தன், பொதுச் செயலாளர் சுப.தங்கராசு, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த. கணேசன், சென்னை மாநாகர செயலர் தோழர் ராஜா, மற்றும் கனிமொழி, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொருளாளர் தோழர் வெங்கடேசன், பெண்கள் விடுதலை முன்னணி சென்னைக் கிளை செயலர் செல்வி, வாகன ஓட்டுனர் சங்கத்தின் நிர்வாகி தோழர் தெய்வீகன் ஆகியோர் இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் திரு.த.வெள்ளையன் அவர்களையும்,  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் திரு விக்கிரமராஜா அவர்களையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நூற்றுக்கணக்கான உள்நாட்டு குளிர்பானங்களையும், அதை நம்பி பிழைப்பு நடத்திய ஆயிரக்கணக்கான குடும்பங்களையும் அழித்த கோக், பெப்சியை எதிர்த்து நீருபூத்த நெருப்பாக கனன்றுகொண்டிருந்த வணிகர்கள் இன்று  அதற்கு சரியான முடிவுகட்டிவிட்டார்கள். அதை நடைமுறையில் சாதிக்க வேண்டிய பொறுப்பு இனி வணிகர்கள் கையில் மட்டுமில்லை, ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்விலும் கலந்திருக்கிறது.
vellayan vazhthu
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
தமிழ்நாடு – புதுச்சேரி  வினவு

கருத்துகள் இல்லை: