புதன், 25 ஜனவரி, 2017

மாணவர்களுக்கு உதவிய மீனவப்பெண்கள், ஆண்கள் கொத்துக் கொத்தாக கைது

நேற்று இரவிலும் இன்றும் என நூற்றுக்கும் அதிகமானோரை கைது செய்திருக்கிறது காவல்துறை.
இவர்கள் எல்லாம் கடற்கரை சுற்றியுள்ள குடிசைப்பகுதிகள், ஹவுசிங் யூனிட் பகுதிகளை சேர்ந்த தலித்துகளும், மீனவ மக்களும்தான்.
அவர்கள்தான் இந்தப்போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு ”இறுதி வரை” பல உதவிகளை செய்தவர்கள். அவர்களையே இப்போது சமூகவிரோதிகளாக புனைய முற்படுகிறது இந்த அரசு.
இதுதான் இந்த அரசின் காவல்துறையின் அசல் முகம். போராடும் போது வாயில் தண்ணீரை ஊற்றி நண்பனாக நடந்துகொள்ளுவதும், மைக்கைபிடித்து நம் உரிமைக்காக குரல் கொடுப்பதும் அல்ல. அவர்கள் எப்போதும் இப்படித்தான்.
இந்தமக்கள் கடந்த இரண்டுநாட்களாக அனுபவித்து வரும் கொடுமைகள் மிக அதிகமாகிவருகிறது.
அவர்களுடைய வாகனங்கள், வீடுகள் காவல்துறையால் சேதப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
நிஜமாகவே போராட விரும்புகிற இளைஞர்கள் இந்த மக்களை நேரில் சந்தியுங்கள் அவர்களுடைய இழப்புகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

அவர்கள் நீங்கள் போராடிக்கொண்டிருந்த கடற்கரைக்கு மிக அருகில்தான் வசிக்கிறார்கள்.
அவர்களுடைய மீன் மார்க்கெட் முற்றிலுமாக தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. அவர்களுடைய மீன்பிடி படகுகள் உடைத்து நொறுக்கப்பட்டும் சேதமடைந்து கிடக்கிறது.
ஆட்டோக்கள் உடைக்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் மறுசீரமைத்து தர வேண்டிய பொறுப்பு போராட்டத்தில் ஆர்வத்தோடு கலந்துகொண்ட இளைஞர்களுக்குத்தான் இருக்கிறது.
நாட்டு மாடுகளின் நலன் நமக்கு எத்தனை முக்கியமோ… தமிழ் கலாச்சாரம் காப்பது எத்தனை முக்கியமோ, அதே அளவுக்கு நம்மால் இன்று நிர்கதியாய் காவல்நிலையங்களில் கணவனை காணாமல் மகனை காணாமல், தன்னுடைய உடைமைகளை இழந்து நிற்கும் இந்த மக்களும் முக்கியம்.
மேலும் மாணவர்களின் இதைப்போன்ற போராட்டம் மீண்டும் துளிர்த்து விடக்கூடாது என்பதில் அரசும்,காவல்துறையும் இணைந்து செயல்படுவது மட்டும் தெளிவாக தெரிகிறது.
தமிழகத்தின் ஒரு பொது பிரச்னைக்கு தமிழன் குரல் கொடுப்பது தவறா? அது அரசுக்கும்,காவல்துறைக்கும் தெரியவில்லையா? ஆட்சியில் இருப்பவர்களும்,காவல்துறையினரும் தமிழர்கள் தானே? பின்னர் ஏன் மாணவர்களுக்கு போராட்டத்தின்போது உதவியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய வேண்டும்?
மீண்டும் ஒரு நல்ல விசயத்துக்கு மாணவர் கூட்டம் போராடும் போது நீ உதவ கூடாது என்ற மிரட்டலுக்கான கைது நடவடிக்கை போன்று உள்ளது, தற்போதைய கைதுகள். காவல் துறையே தீ வைத்த கொடுமைகளையும், தமிழகம் பார்த்துக்கொண்டு தானே உள்ளது?
நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்ற ஐயம் எழுகிறது?  லைவ்டே

கருத்துகள் இல்லை: