சனி, 28 ஜனவரி, 2017

ஸ்டாலின் கடும் எச்சரிக்கை : மீனவர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம்!


மீனவ மக்கள் தாக்கப்பட காரணமானவர்களை தண்டிக்கவும், நிவாரணத் தொகை வழங்கவும், தீக்கிரையாக்கப்பட்ட மீன் மார்க்கெட்டை மீண்டும் கட்டித் தரவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் திங்கள் கிழமையன்று மீனவர்களை ஒருங்கிணைத்து திமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களை காவல்துறையின் தாக்குதலில் இருந்து பாதுகாத்த காரணத்தினால், காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு உள்ள நடுக்குப்பம், அயோத்திகுப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின். மேலும், அப்பகுதி முழுவதும் பொதுமக்களுக்கு சொந்தமான பொருட்களும், நடுகுப்பம் மீன் மார்க்கெட்டும் அடித்து உடைத்து, எரிக்கப்பட்டு இருந்ததை கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் நேரில் பார்வையிட்டார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் செய்தியாளர்க்கு அளித்த பேட்டியில், பாதிக்கப்பட்டுள்ள இடங்களை நேரில் பார்வையிட்டு இருக்கிறோம். குறிப்பாக, நடுகுப்பம் மீனவர் குடியிருப்புப் பகுதியில் உள்ள மீனவ மக்கள் எல்லாம் மிகுந்த சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்.
இரவு முழுவதும் அவர்களது வீடுகளில் தொடர்ந்து சோதனைகள் நடத்துவது மிகப்பெரிய அக்கிரமமாக இருப்பதாகவும், அதனால் அப்பகுதி முழுக்க பதற்றத்துடன் இருப்பதாகவும், அங்கிருக்கக்கூடிய தாய்மார்கள் எல்லாம் கண்ணீர் மல்க எங்களிடம் குறிப்பிட்டனர். அதுமட்டுமல்ல, இங்கிருக்கக் கூடிய மீனவர்களின் மீன் கடைகள் எல்லாம் உடைக்கப்பட்டு, எரிக்கப்பட்டு இருக்கிறது. வாகனங்கள் கொளுத்தப்பட்டு உள்ளன.

ஆட்டோ கொளுத்தப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சிகள் எல்லாம் ஏற்கனவே செல்போன், வாட்ஸ் அப் மூலமாக பரவி, தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு உள்ளது. ஆனால், இதுவரையிலும் காவல்துறை உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து, கைது செய்ய நடவடிக்கை எடுக்காமல், இங்குள்ள அப்பாவி மீனவ தோழர்கள் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது, இரவுகளில் வீடுகளில் சோதனை செய்வது போன்ற நிலைதான் தொடர்ந்து கொண்டுள்ளது. இதுபற்றி இன்று காலை சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் கேள்வி எழுப்பி, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.

 என்னை முழுமையாக பேச விடவில்லை என்றாலும், இந்தப் பிரச்சினைகள் குறித்து எல்லாம் எடுத்து சொல்லி இருக்கிறேன். அப்படி பேசிவிட்டு இறுதியாக இதுகுறித்து ஒரு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தேன். ஏனென்றால், காவல்துறையினரே இப்படிப்பட்ட அராஜகத்தை தூண்டி விட்டு, ஒரு பெண் போலீஸ் அதிகாரியே ஒரு வீட்டுக்கு தீ வைக்கக் கூடிய காட்சி, ஒரு காவலரே ஆட்டோவுக்கு தீ வைக்கக் கூடிய காட்சிகள் எல்லாம் தொலைக்காட்சிகளிலும், வாட்ஸ் அப்பிலும் வந்துள்ளன.

ஆகவே, இதில் காவல்துறையினரே நடவடிக்கை எடுத்தால் சரி வராது. எனவே, நீதி விசாரணை அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பணியில் இருக்கக்கூடிய உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தி, எடுத்துச் சொன்னேன். முதலமைச்சர் விளக்கம் அளிக்கும்போது சில சமூக விரோதிகள், தேச விரோதிகள் எல்லாம் உள் புகுந்து விட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். சமூக விரோதிகள், தேச விரோதிகள் எல்லாம் உள்ளே புகுந்து விட்டார்கள் என்றால், ஒரு வார காலமாக இந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது, காவல்துறைக்கு என்று புலனாய்வுத்துறை இருக்கின்றது,

ஆக, நுண்ணறிவுப் பிரிவு போலீசாரை வைத்து எளிதில் ஏற்கனவே கண்டு பிடித்திருக்க வேண்டும். ஆனால், ஏன் கண்டு பிடிக்கவில்லை? இதுவே அவர்களது கையாளாகத்தனத்தை காட்டுகிறது. ஆனால், முதலமைச்சர் அதையெல்லாம் பற்றி பேசாமல், பூசி மெழுகக் கூடிய வகையில் பேசி, நீதி விசாரணை வேண்டும் என்று கேட்டதற்கு பதில் சொல்லவில்லை.

அதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்து தொலைக்காட்சி, பத்திரிகை நண்பர்களை சந்தித்து விளக்கமாக எடுத்துரைத்து இருக்கிறோம். அதுமட்டுமல்ல, கவர்னர் உரை மீதான விவாதத்தில் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் அவர்கள் பேசியபோது, இந்த சம்பவங்கள் குறித்தெல்லாம் சட்டமன்றத்தில் விளக்கமாக பேசி பதிவு செய்திருக்கிறார். அதற்கும் சரியான விளக்கத்தை ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள், குறிப்பாக முதலமைச்சர் அவர்கள் அளிக்கவில்லை.

ஆகவே, நாங்கள் இங்கு வந்து பார்த்த நேரத்தில், ‘எங்களுக்கு முறையான நியாயம் வழங்க வேண்டும், இதற்கெல்லாம் யார் காரணமாக இருந்தார்களோ அவர்கள் எல்லாம் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும், உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும், இங்கு தீக்கிரையாக்கப்பட்ட மீன் மார்க்கெட்டை மீண்டும் கட்டித் தர வேண்டும்’, என்று மீனவ மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 இந்த கோரிக்கைகளின் மீது சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களுக்குள் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுமக்களை, குறிப்பாக மீனவ சமுதாயத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகளை ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நிச்சயமாக நடத்துவோம் என்பதை ஒரு எச்சரிக்கையாக முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன்.

 கேள்வி: போராட்டம் நடைபெற்றும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? ஸ்டாலின்: திங்கள் கிழமையன்று போராட்டம் நடைபெற்ற பிறகும் இந்த அரசு செவி சாய்க்கவில்லை என்றால், அதன் பிறகு நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார் நக்கீரன்

கருத்துகள் இல்லை: