புதன், 25 ஜனவரி, 2017

போராட்ட களத்தில் மீனவ நண்பர்கள்... ஜல்லிகட்டுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் அடிவாங்கினார்கள் .... காப்பாற்றினார்கள்

"இந்தாண்ட பூந்து லெப்ட்ல போ.. நம்ம பசங்க வெளில இட்னு போய் விட்ருவான்".._
_"ஏய்... போலீஸ் தொர்த்துனா ஓடாத.. நில்லு"... (நாய் தொரத்தும் போதும் இதே தான் சொல்வாங்கன்றது வேற விசயம்).._
_அழாத.. மெர்சலாகாத.. ஒன்னியும் ப்ராப்லம் இல்ல.. இந்தாண்ட வாப்பா.. அந்தாண்ட போப்பா..._
_மாணவர்களை காப்பாற்றிக் கொடுத்த *மீனவத்தோழர்களின் குரல்கள்.*_
_ஒரு பக்கம் போராட்ட உத்திகள்.. மற்றொரு பக்கம் மாட்டிக்கொண்ட மாணவர்களை வெளியே கொண்டு போய் விடுதல், மறைத்து வைத்தல், கடல் மார்கமாய் படகில் சென்று உணவு கொடுத்தல், போதாத குறைக்கு போலீசிடம் "ஒன்னுமே தெரியாதது" போல நின்று கொண்டு அடிகளை வாங்கிக்கொண்டது, இன்னும் எவ்வளவோ._
_அவன் வாழ்நாளிலே ஒருமுறை கூட ஜல்லிக்கட்டு பார்த்திருக்க மாட்டான். உங்கள் போராட்ட நேரத்தில் கூட எதையாவது விற்று வியாபாரம் பார்த்து கொண்டிருந்திருப்பான். கூட்டத்தை பார்த்துக் கூட கோசம் போட்டிருப்பான்._
_ஆனால், போராட்டம் பற்றி புரிய வைக்க வந்த போலிசின் லத்திகளை, உங்கள் மீது விழ விடாமல் தாங்கியவன் அவன் தான்._

_மொபைலிலும், வாட்சாப்பைலும், டீவியிலும் நீங்கள் மெரினாவின் அப்டேட் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அவன் மேனியில் பட்டு லத்திகள் பிய்ந்து கொண்டிருக்கின்றன._

_நீங்கள் கண்ணாடி முன் நின்று முகம் பார்க்கும் நேரத்தில், அவர்கள் தலையில் இருந்து ஒழுகும் இரத்தத்தால் முகங்கள் கழுவப்பட்டுக் கொண்டிருக்கின்றன._
_கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்த பணத்தை செலுத்தி வாங்கிய வாகனங்கள், டியூ முடிவதற்குள் தூளாக்கப் பட்டிருக்கின்றன. மழைக் காலம் முடிந்ததால் இனி ஒழுகாது என்று நினைத்து இருந்தவன் வீட்டு கூரையே எரிந்து போனது._
_உன்னால் "சேரியிலுருந்து வர்றவன்" என்று அழைக்கப்பட்டவன்தான் உன் சேதராத்தை ஏற்றுக்கொண்டான். மீனவக் குப்பங்கள் மீது விழுந்த அடிகள் தான் நகரத்துச் சேரிகளை தூண்டி விட்டன.. போலீசையும் அரசையும் எதிர்த்து போராட்டங்கள் பொங்கின. சாலைக்கு வந்தார்கள். ஆண்டாண்டு காலமாக அரசியல்வாதிகளின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு அவர்கள் நடத்திய கலவரங்களை, தங்கள் சொந்தங்களுக்காக யாரும் சொல்லாமலே நடத்தினார்கள்._
_வா போராடுவோம் என்று பாட்டு பாடியவன்.. மைக் பிடித்தவன். மடைதிருப்பியவன் எல்லாம் அவர்களை சமூக விரோதிகள் என்றான். போலீசும் அதே வார்த்தையை சொன்னது. மீடியாவும் அதையே பிரதிபலித்தது. மக்களும் அதையே அசைபோடத் தொடங்கினர்._
_ஆனால் உனக்குத் தெரியும். சந்து பொந்துகளில் சர்வமும் ஒடுங்கிப்போய் கிடக்கையில் உன்னை கரையேற்றியவன் எவனென்று. துரத்தி வந்த லத்திகளை தோள்களில் வாங்கிக் கொண்டு உன்னைத் தூக்கி விட்டவன் யாரென்று. பின்னால் உன்னை மறைத்துக் கொண்டு, முன்னால் உனக்காக இரத்தம் சிந்தியவன் எவரென்று._
_அவனுக்கு மனிதம் தெரிந்த அளவு மனித உரிமையெல்லாம் தெரியாது. அன்பு தெரிந்த அளவுக்கு அரசாங்க திட்டங்கள் தெரியாது. உன்னைப் பாதுகாக்கத் தெரிந்த அவனுக்கு படிப்பறிவும் கிடையாது. மீடியாக்கள் மறைக்கும் அரசாங்க அட்டூழியத்தை நீங்களாவது அகிலமெங்கும் சொல்லுங்கள். எந்த வழியிலாவது அவர்களுக்கு உதவ முடிந்தால் உடனே செய்யுங்கள். உயிரை மட்டும் மிச்சம் வைத்துவிட்டு உடலை சல்லடையாக்கும் முன் உதவிக்கரம் நீட்டுங்கள்._
_நீங்கள் எல்லாம் ஏன் போனீர்கள் என்று கேட்டதற்கு *ஒருவர் சொன்ன பதில்*: "கத்தினே இர்ந்ததுக சடனா கடலுள்ளாற போறத பார்த்து மனசு கேட்காம ஓடிவந்தோம் சார்.. இன்னாத் தெர்யும் இதுகளுக்கு கடல பத்தி... அதான் எல்லாரும் காப்பாத்த பூந்துட்டோம்"._
- *தோழர் _PrincePrinkypas_*
- *நன்றி மீனவ நண்பர்களே🙏🏻முகநூல்பதிவு   troll mafia

கருத்துகள் இல்லை: