ஞாயிறு, 22 ஜனவரி, 2017

இது வெறும் ஜல்லிக்கட்டுக்கு கூடிய கூட்டமில்லை

யாருக்குமே வலிக்காமல் விமர்சனமில்லை, மசாஜ் கூட பண்ண முடியாது, நீவி விடும் போது கொஞ்சம் வலிக்கும்.
இந்த பெருந்திரளான கூட்டம் வெறும் ஜல்லிக்கட்டுக்கு கூடியது என்று நினைத்தவர் ஹிப் ஹாப் தமிழன் ஆதியோடு இங்கே யாரவது இருக்கிறீர்களா?
இது வெறும் ஜல்லிக்கட்டுக்கு கூடிய கூட்டமில்லை, ஆறு மணிக்கு வேலையை விட்டு போய் விடியற்காலை மூன்று மணி வரை இருந்து காலை மீண்டும் அலுவலுகத்துக்கு சென்றவர்களை இந்த நான்கைந்து நாட்களாக நான் அறிவேன்.
இந்த கூட்டத்தை, மக்கள் தங்களுக்கான எதிர்ப்பை பதிவு செய்யவும், நீண்ட காலமாக இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா என ஏங்கி இருந்ததின் மொத்த வெளிப்பாடாக தான் நாம் பார்க்க வேண்டுமே ஒழிய, ஜல்லிக்கட்டு பிரச்னையை தவிர வேறு எதையுமே பேச கூடாது என்பதல்ல.
அடுத்து, மோடியை மக்கள் விமர்சனம் செய்கிறார்கள் என்றால், இந்த கோர்ட்டின் மீதான நம்பிக்கையும், அரசின் மீதான நம்பிக்கையும் பொதுவில் மக்களுக்கு இல்லையென்பதை உணர்ந்து இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது, அரசாங்கமோ, நீதிமன்றமோ வேறில்லை என்பதை அறிந்திருக்கிறார்கள், நடத்த வேண்டுமானால், எப்படியும் நடத்தலாம் என்று இன்று நடந்ததை போல வழிவகை இருக்கும், எல்லாமே அரசியல் என்கிற விழிப்புணர்வு இருப்பதால் தான், கோர்ட்டில் வழக்கு இருக்கும் போது நானொன்றும் செய்ய முடியாது என்கிற மோடியின் அறிக்கையை இங்கே யாரும் நம்புவதற்கு இல்லை.

அதிகாரமும், பணமும் இருந்தால் இங்கே எதுவும் சாத்தியம் என்பதற்கு மக்களிடம் ஓராயிரம் எடுத்துக்காட்டுகள் இருக்கிறது.
பீட்டாவுக்கும் வலிக்காமல், மோடியையும் விமர்சிக்காமல், மாநில அரசையும் விமர்சிக்காமல், பின்னே போராட்டம் உச்ச நீதிமன்றத்தை நோக்கியா? அல்ல நீதிபதியை நோக்கியா?
வழக்கு நிலுவையில் இருக்கும் போது, நீதிமன்றத்தை, கூட்டத்தால் நெருங்குவது மட்டும் சட்ட விரோதம் ஆகாதா?
அப்படி இந்த பெருந்திரளான கூட்டத்தை பார்த்து உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தீர்பளித்தால், உச்சநீதிமன்றம் வெறும் உணர்வுகளின் அடிப்படையில் தீர்ப்பை வழங்க வேண்டும் என்கிறீர்களா? அதற்காக தான் இந்த போராட்டமா?
பீட்டாவும், அரசாங்கமும், பன்னாட்டு கம்பெனிகளும் செய்யும் சூழ்ச்சி என எல்லோர் மனதிலும் பதிவு செய்து விட்டு, மோடி எதிர்ப்பு அலை காதை கூசுகிறதா? அரசாங்கங்களின் உதவி இல்லாமல் பன்னாட்டு கம்பெனிகளின் லாபி சாத்தியமா?
இந்திய அரசாங்கத்துக்கு தெரியாமல் லாபி நடக்கிறதென்றால் அப்போ மோடி டம்மி என்கிறீர்களா?
இவையெல்லாமே, கூட்டுச்சதி என்கிற பொது புரிதல் இருப்பதால் தான் ஒரு செயின் போல விமர்சனங்கள் தொடர்கிறது, இதில் எதை நாகரீகமான போராட்டமாக தொடர வேண்டுமென்கிறார் ஹிப் ஹாப் தமிழன்.
அனிருத் உடன் ஒரு பாடலில், ஒரு வரியில் கொஞ்சம் space விட்டு, பீப் போடுவாரே, அங்கே "ஓத்தா" என்கிற வரி தான் வருமென தமிழக இளைஞர்களுக்கு தெரியாதா, நினைத்ததை பேச முடியாத celeberity status இருக்கும் ஒரு பிரபலத்துக்கே அத்தகைய வரிகள் தேவை படும் போது, முகாந்திரம் இல்லாமல் நாமும் கலந்துகொள்வோம் என வரும் இளைஞர்கள், சின்ன பசங்க, முன்னபின்ன பேச தான் செய்வாங்க.
இந்த களத்தை, நாட்டின் மற்ற பிரச்சனைகளை பேச ஒரு வாய்ப்பாக எடுத்து கொள்ளத்தான் செய்வார்கள். காந்தி வெள்ளையனை வெளியேற்ற மட்டுமேவா போராட்டம் பண்ணார்? ராமாயண பெருமைகளை பேசினார், சுதேசி கருத்துக்களை வைத்தார்,இந்திய மக்களை எதையெல்லாம் கொண்டு ஒன்றிணைக்க முடியுமோ அத்தனையும் செய்தார், இவ்வளவு ஏன் மோடியே, சம்ஸ்கிருத வார விழா, யோகா, என அடுத்தடுத்து செய்வதெல்லாம், ஹிந்து கலாசாரத்தை எப்படியாவது தக்க வைக்க என்பது காவிகளுக்கோ நமக்கோ தெரிய தனி அறிவு, பயிற்சி வேண்டுமா என்ன?
அப்படியான ஒரு வாய்ப்பாக தமிழ் பொது சமூகம் எடுத்து கொண்டதே ஒழிய, வெறும் ஜல்லிக்கட்டு தவிர வேறு எதுவும் பேச கூடாது, விமர்சிக்க கூடாது என்பதல்ல.  முகநூல் பதிவு  வாசுகி பாஸ்கர்

கருத்துகள் இல்லை: